எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

 



எனது பாட்டி

-விஜயா பாரதி


மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது...


உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது. 


எனக்குத் தெரியும். என் பெயர் விஜயா. பாரதியின் மூத்த பெண் தங்கம்மாவின் மகள் நான். என் பாட்டி கடையத்தில் வாழ்ந்த போது அவருடன் என் இளமைக் காலத்தைக் கழித்தேன். நான் திருநெல்வேலியில் கல்லூரியில் படித்த போது, என் பாட்டி வாழ்ந்த கடையத்தில்தான் என் விடுமுறைகளைக் கொண்டாடினேன். 


பாரதியின் மரணத்தின் போது என் பாட்டிக்கு முப்பதே வயது. இளம் விதவை. கல்வி கற்காத பெண். இரண்டு பெண்கள். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. சொத்து என்று இருந்ததெல்லாம் அவள் கணவரின் எழுத்துக்கள் மட்டுமே. கொஞ்சம் அவள் நிலையை எண்ணிப் பாருங்கள். அந்தக் காலத்தில், விதவைப் பெண்களின் வாழ்வு, அவள் உறவினர்களைச் சார்ந்தே இருந்தது. அதுவும் இரண்டு பெண்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு வேறு. 


என் பாட்டிக்கு, பாரதிதான் தெய்வம். அவர் மறைவுக்குப் பின், அவர் விரும்பிய புதுமைப் பெண்ணாகவே நடந்தாள் என் பாட்டி. தன்னிடம் இருந்த சில மூட நம்பிக்கைகளையும், மனக் கலக்கங்களையும், தேவையில்லாத பழம் வழக்கங்களையும் விட்டு ஒழித்தாள். 


எதையும் சமாளிக்கும் மன தைரியமும், தீவிர கடவுள் பக்தியும்,  நல்ல காலம் பிறந்தே தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், விடா முயற்சியும் கொண்டு வாழ்ந்தாள். 


தன் பெண்கள் மற்றும் பேரக் குழந்தைகளின் கல்வி மட்டுமே அவளின் ஒரே குறிக்கோள். எப்படியாவது நாங்கள் அனைவரும் – முக்கியமாக பேத்திகள் – படித்து விட வேண்டும் என்று பாடுபட்டாள். நான் டாக்டர் பட்டம் வரை பெற்றதற்கு அவள்தான் ஓரே காரணம். 


தன் கணவன் பாரதியின் நினைவுகளே அவளின் சக்தி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் பாடல்களைப் பாடிக் கொண்டும், எங்களையும் பாட வைத்துக் கேட்டுக் கொண்டும் இருப்பாள். பாரதியும் எல்லாப் பாடல்களும் அவளுக்கு மனப்பாடம் என்று என் அம்மா சொல்லக் கேட்டு இருக்கிறேன். 


வறுமை என்பதை உணர விடாமலேயே என்னை வளர்த்தாள். நான் கல்லூரியில் இருந்து வரும் போதெல்லாம், என்னை வாசலில் இருந்தே கட்டி அணைத்து “வாடாக் குழந்தே.. கை கால் அலம்பிட்டு வா. சாப்பிடலாம்” என்று ஊட்டி விட்டுக் கொண்டே நான் என்னவெல்லாம் படிக்கிறேன் என்று ஆர்வமாய் கேட்பாள். 


1955 ஆம் வருடம். அவளுடன் என் கடைசி விடுமுறை. 


“வந்துட்டியாம்மா! உனக்காகத்தான் காத்துண்டு இருக்கேன்” என்று என்னை படுக்கையில் இருந்தபடியே வரச் சொல்லி கட்டி அணைத்துக் கொண்டாள். அவளுக்கு உடல் நலம் சரியில்லை என்பதை எனக்கு எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டாள். “லீவு விட்டதும் வந்தா போதும்”. 


அதற்குப் பிறகு, கோமாவில் விழுந்து விட்டாள். ஒரு அசைவும் இல்லை. உணவு செல்லவில்லை. டாக்டர் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று கை விரித்து விட்டார். எல்லோரையும் வரச் சொல்லி விட்டோம். பெண்கள், பேரன் பேத்திகள், உறவினர்கள் என்று வீடு முழுவதும் கூட்டம். 


நான் அவளின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். ஒரு முறையாவது கண் திறக்க மாட்டாளா என்ற ஏக்கம். கண் திறக்கவில்லை. விழி கூட அசையவில்லை. 


பின்னிரவு நேரம். வீடே அமைதியில் உறைந்து இருந்தது. இறுதி நிமிடங்கள் என்று எல்லோருக்கும் தோன்றி இருக்க வேண்டும். நீர் நிறைந்த கண்கள் எதுவும் உறங்கவில்லை. 


அவள் உதடுகள் மட்டுமே விரிந்தன. 


“திண்ணை வாயில் பெருக்க வந்தேன். 

எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்” 

என்று மெல்லிய குரலில் பாட்டி பாடினாள். நிறுத்தி விட்டாள். 


என் மனதுக்குள் அடுத்த வரிகள் எழுந்தன. ஏங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன். 


நித்தச் சோற்றினுக்கே ஏவல் செய வந்தேன்;

நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான்.

வித்தை நன்கு கல்லாதவள் என்னுளே

வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.

அதே இரண்டு வரிகளை இன்னும் ஒரு முறை பாடினாள். 


“திண்ணை வாயில் பெருக்க வந்தேன் 

எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்”

சில நொடிகள் மௌனம். மீண்டும் அவள் குரல். இன்னும் மெல்லியதாய். 


உடல் எழுப்பும் குரலாய் இல்லாமல், அதை விட்டு விலகிச் செல்லும் அவள் ஆத்மாவின் குரலாய்.. 


“திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்.  

திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்”

அவள் மூச்சு நின்று விட்டது. 


அவள் அரசன் பாரதி சென்ற நாராயணனின் திருவடிகளுக்கே பாரதியின் செல்லம்மாவும் சென்று விட்டாள்.


என் பாட்டி செல்லம்மாள் பெரும் பாக்கியவதி. நல்லதோர் வீணை செய்தே,அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ😢

Comments

Popular posts from this blog

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.