சென்னை வாரம் கொண்டாடும் இந்த நேரத்தில், சென்னைவாழ் அந்தணர்களுக்கு சமர்ப்பணம் 🙏
சென்னையைப் பொறுத்தவரையில் பிராமணர்கள் நான்கு இடங்களில்தான் கணிசமாக வசிப்பார்கள்.
1) மாம்பலம் பகுதி(அசோக் நகர், கோடம்பாக்கம்)
2) மயிலாப்பூர் பகுதி (மயிலை, ஆழ்வார்பேட்டை),
3) திருவல்லிகேணி பகுதி (குறிப்பாக வைணவர்கள்)
4) நங்கநல்லூர்.
இதில் மயிலாப்பூர் வகையறா அட்வகேட்ஸ், ஆடிட்டர்ஸ், என்று அப்பா தொழிலையே தொடர்ந்து அபிவிருத்தி செய்து தனி வீடு,கார்கள் என்று பட்டையை கிளப்பும் மேட்டுக்குடி.
திருவல்லிக்கேணி கோஷ்டி வெளிச்சம் அவ்வளவு இல்லாத, காற்று புகாத, அறைகளில் ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்து கொண்டு, பார்த்தசாரதிக்கு கைங்கர்யத் தொண்டு சாதித்துக்கொண்டு வாழ்பவர்கள்.
நங்கநல்லூர்காரர்கள் அநேகம் பேர் ரிட்டையர் ஆகி நகர நெரிசல் தாங்கமுடியாமல் வெளியூரிலிருந்து வந்து குடிபெயர்ந்தவர்கள்.
இவர்கள் எங்கு போனாலும் ஸ்ரீரங்கம் போல மெதுவாக நடந்து, ஆஞ்சநேயரை சேவித்து, ஈஸிசேரில் சாய்ந்து கொண்டு, ஹிந்து பேப்பர் படித்துக்கொண்டே 'உங்காத்துல கரண்ட் வந்துடுத்தா' என்று கேள்வி கேட்கும் ரகம்.
' கிரி ட்ரடேர்ஸ் , நீல்கிரிஸ்ன்னு எல்லாமே இங்கேயே வந்துடுத்து தெரியுமோ' என்றும் பெருமை பாராட்டக் கூடியவர்கள்.
மாம்பலம்காரர்களை பொறுத்தவரை ஒன்றே ஒன்றுதான்.
படுக்க ஒரு இடம் வேண்டும்.
கேஸ் அடுப்பில் குக்கர் வைத்துவிட்டு, தாளித்து கொட்ட கடுகு வேண்டுமெனில், வாசலில் ஒரு நாடார் கடையோ, பாய் கடையோ இருக்க வேண்டும்.
காலை அஞ்சுமணிக்கு தொடங்கும் பரபரப்பு இரவு பத்து மணிக்குத்தான் அடங்கும்.
"பதினஞ்சு ரூபாய் சொல்றயேம்மா, பன்னெண்டு ரூபாய் போட்டுக்கப்டாதா" என்று பேரம் பேசி வாழைத்தண்டு முதல் துவாதசிக்கு அகத்திகீரை வரை வாங்கக் கூடியவர்கள்.
சிறுகுறிஞ்சான் முதல் சித்தரத்தை வரை விற்கும் நாட்டுமருந்து கடைகள், பசுஞ்சாணி வறட்டி, தர்ப்பை, கூர்ச்சம், பவித்ரம், நோன்புக் கயிறு என்று அனைத்து பூஜா சாமான்களுக்கு ஹரிகிருஷ்ணன் ஏஜென்ஸீஸ்,
மணக்க மணக்க சாம்பார் பொடி, இலை வடாம்,
புளிக்காய்ச்சல் என்று பலவற்றிற்கும் சாரதா ஸ்டோர்ஸ், ஆபீஸ்லேந்து வர்றதுக்கு லேட்டாயிடுத்தா, ட்யூஷன் போகறதுக்குள் குழந்தைகள் பசியை போக்க இருக்கவே இருக்கு,
வெங்கட்ரமணா
போளி ஸ்டால்!!
அவசர ஜவுளிக்கு சிவன்மலை ஆண்டவர்.
சகாய விலையில் தரமான வைத்தியம் பார்த்துக்கொள்ள ஹெல்த் செண்டர்.
அயோத்யா மண்டபம் ஸ்ரீராம ஸமாஜில் எவ்வளவு அரசியல் இருந்தாலும், எப்பொழுதும் ஏதோ பூஜையோ, நாமசங்கீர்தனம் போன்ற வைபவங்களோ நடந்து கொண்டே இருக்கும்.
ஒரு பக்கம் 'பாம் பாம்' என்று ஹாரன் அடித்துக்கொண்டே பல்லவன் பஸ் போய்க் கொண்டிருக்க இத்தனை இரைச்சல் நடுவிலும் நித்யஸ்ரீ ராமா ராமா என்று பாடிக்கொண்டு இருப்பார்.
இங்கு ஹிந்தி,ஃபிரெஞ்சு கற்றுக்கொடுக்கப்படும் என்ற போர்டும், ஐந்து வீடுகளுக்கு ஒன்றில் 'இங்கு வாய்ப்பாட்டு கற்று தரப்படும்' என்ற போர்டும் காணப்படும்.
"எல் கே ஜி முதல் சி ஏ வரை அனைத்து வகுப்புகளுக்கும் ட்யூஷன் எடுக்கப்படும்"
இந்த வகையான போர்டுகள் இல்லாத வீடுகள் அரிது.
நீட், ஜெ ஈ ஈ என்று பல்வகையான கோச்சிங் செண்டர்களுக்கும் ஒரு கூட்டம் படையெடுக்கும்.
காலை ஏழுமணி முதல் ஆர்யகௌடா ரோட்டில் இன்ஜினியரிங் காலேஜ் பஸ்களிலும், ஐ டி கம்பெனி பஸ்களிலும் பெண்கள் அதிக அளவில் ஏறுவார்கள்.
நூறுவீடுகளுக்கு ஒன்று கல்யாண மண்டபமாகவோ அல்லது ஏ சி மினி ஹாலாகவோ மாற்றப்பட்டு இருக்கும்.
ஆறுமாதத்திற்கு முன்பு பதிவு பண்ணாவிட்டால் கிடைக்காது.
அவர்களே வரும் விருந்தினர்களுக்கு தங்குவதற்கு கெஸ்ட் ஹவுஸும் அங்கேயே ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.
எல்லா சமையல் கான்ட்ராக்ட்காரர்களும் காஞ்சி பெரியவர் படத்தை பெரிதாக போட்டுத்தான் உங்களிடம் பிசினெஸ் பேசுவார்கள்😇
அதற்காக சகாயமான விலை இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
தொழில் வேறு;
பக்தி வேறு. தொழிலுக்குத்தான் பக்தி.
வீட்டில் குக்கரில் சாதம் மட்டும் வைத்துக்கொண்டு கறி, கூட்டு, ரசம், சாம்பார் என்று தேவைக்கேற்ப தஞ்சாவூர் மெஸ்ஸில் வாங்கிக்கொள்ளும் குடும்பம் அங்கே கணிசமானோர் உண்டு.
போஸ்டல் காலனியில் சில இடங்களில் ஆயிரம் அடிக்கு கீழே தோண்டினால் கூட
காற்றுதான் வரும்.
சில குடியிருப்புகளில் நாற்பது ஆண்டுகாலமாக சகலத்திற்கும் லாரி தண்ணீரை நம்பித்தான் தினப்படி வாழ்க்கையே.
கொசுக்கடியோ, சாக்கடையோ,
தண்ணி கஷ்டமோ இவையெல்லாம் ஒரு சராசரி மாம்பலவாசிக்கு பொருட்டே அல்ல.
ரியல் எஸ்டேட் சரிவோ, பணமதிப்பிழப்போ இங்கு ஒன்றும் கிடையாது.
சதுரஅடி பதினாலாயிரம் ரூபாய்க்கு குறைவாக ஒரு அபார்ட்மெண்ட் கிடைக்காது.
இந்த பின்னணியில் வளர்ந்து ஐ ஐ டி முதல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வரை போய் படித்துவிட்டு அமெரிக்காவிற்கு உழைக்கிறார்கள்.
இந்த சந்து பொந்துகளில் விளையாடித்தான் ரவி அஷ்வின் உலகத்தின் முதல்தர சூழல் பந்து வீச்சாளராக வலம் வருகிறார்
.
கிரேசி மோகன் ஒரு பேட்டியில் சொன்னார், அவருக்கு மைலாப்பூரில் இருந்து மாம்பலம் வந்தாலே ஹோம் சிக் வந்துவிடுமாம். மாம்பலம்வாசிகளுக்கும் அப்படித்தான்.
சென்னை வாரம் கொண்டாடும் இந்த நேரத்தில், சென்னைவாழ் அந்தணர்களுக்கு சமர்ப்பணம் 🙏
(சென்னை வாரம் கொண்டாட்டத்தை ஒட்டி எழுதப்பட்டது) Brahmin at Chennai.
Comments
Post a Comment