Happy Onam - NAMO - ஓணம் ஸ்பெஷல் !*

 





*ஓணம் ஸ்பெஷல் !*

(ஒரு சிறப்பு பதிவு)


கேரளாவின் மிகப்பெரிய பண்டிகையான ஓணம், ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் அஸ்தம் நட்சத்திரத்தன்று தொடங்கி திருவோணத்தன்று முடிவடைகிறது. மலையாள நாட்டில், ஓணம் பண்டிகையை பத்து நாட்கள் சாதி மத பேதமின்றி கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். ஓணம் திருநாளன்று, மகாபலி சக்ரவர்த்தி தான் ஆண்ட நாடான கேரளாவிற்கு விஜயம் செய்கிறார் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. தன்னுடைய மக்களைத் தேடி வருவதனால், அவரை வரவேற்க வாசலில் பூக்கோலம் இடுகின்றனர்.


புத்தாடை அணிந்து, புத்தொளி வீச உறவினர்களுடன் இணைந்து களிக்கின்றனர். ஒரு சமூகத்தின் விழாவாக, ஓணத்தினை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள் கேரள மாநிலத்தவர்கள். 


ஓணம் வரலாறு 


கேரளாவில் அமைந்த திருக்காட்கரை என்னும் திவ்யதேச ஸ்தலத்தில்தான், ஓணம் பண்டிகையின் வரலாறு தொடங்குகிறது. மகாபலி சக்கரவர்த்தி என்னும் அசுரர் குல மன்னன் பூவுலகத்தை ஆண்டு வந்தார். தனது வீரத்தால், அவர் தேவலோகத்தையும் கைப்பற்றினார். இதனால், பதற்றம் அடைந்த இந்திரன் நாராயணனிடம் முறையிட்டார். அதற்கு க்ஷீராப்திநாதன் “கவலை கொள்ள  வேண்டாம் தேவேந்திரா, யாமே பூலோகத்தில் அவதரித்து உனக்கு தேவலோகத்தை மீட்டுத் தருகிறேன்” என்றார். சொன்னபடி,  காஷ்யப மகரிஷிக்கும் அதிதிக்கும் வாமனனாகத் தோன்றினார். 


பின்னொருநாளில், மூவுலகையும் தன்னுடைய குடையின் கீழ் ஆளுவதன் பொருட்டு, மகாபலி யாகம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த யாகத்தில், அந்தணர்கள் விரும்புவதை மகாபலி தானமாகக் கொடுத்தார். அப்போது, வாமனனாக அங்கு வந்தார் நாராயணன். தானமாக மூன்றடி மண் வேண்டுமெனக் கேட்டார். ’வந்திருப்பது மகாவிஷ்ணுதான்’ என்று அசுரகுலகுரு சுக்கிராச்சாரியார் அறிந்திருந்தார். ’தானம் தர ஒப்புக்கொள்ள வேண்டாம்’ என்று மகாபலியிடம் எடுத்துக்கூறியும், அவர் அதனை சட்டை செய்யவில்லை. தான தர்மங்களிலும், கொடுத்த வாக்கினை தவறாமல் காப்பதிலும் சிறந்தவர் மகாபலி. அதனால், வாமனனின் கோரிக்கையை ஏற்றார்.


உடனே வாமனனாக இருந்த திருமால், திரிவிக்கிரம அவதாரம் எடுத்து, தன்னுடைய ஒரு அடியால் பூவுலகை அளந்தார். இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்தார். ’மூன்றாவது அடியை எங்கே அளப்பேன்’ என்று வினவிய பரமபதநாதனிடம், தன்னுடைய சிரசின் மேல் மூன்றாவது அடியை வைக்குமாறு வேண்டினார் அந்த மாமன்னன். அதன்படி, அவரது சிரசின் மேல் உலகளந்த மாயன் காலைப் பதிக்க, மகாபலி பாதாள உலகத்துக்குச் சென்றார். அவரைப் பாதாள உலகத்தை ஆளுமாறு பணித்தார் மகாவிஷ்ணு. 


அதன்பிறகு, “அடியேன்  ஆண்டுக்கு ஒருமுறை தன் மக்களை வந்து பார்க்க வேண்டும்” என்று மகாபலி சக்கரவர்த்தி நாராயணனிடம்  வேண்டினார். “அப்படியே ஆகட்டும்” என்று வரமளித்தார் வாமனப் பெருமாள். அதன்படி, தன்  மக்களைக் காண மகாபலி வரும் நாளே திருஓணத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. 


கேரள மாநிலத்தின் திருக்காட்கரையில், காட்கரையப்பனாக நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார் வாமனமூர்த்தி.


ஓணம் விருந்து


அறுவடைத் திருநாளாகவும், கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இத்திருநாளன்று, கேரளாவில் எல்லா வீடுகளிலும் ஓண சாத்ய விருந்து பரிமாறப்படுகிறது. கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளான எரிசேரி, காளன், ஓலன், அவியல், தோரன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மோர்க்கறி, கூட்டுக்கறி, பருப்புக்கறி, சாம்பார், ரசம், அடை பிரதமன், பாலடை பிரதமன், வாழைப்பழம் ஆகியவை தலைவாழை இலையில் பரிமாறப்படும். இதனுடன் உப்பேரி, பப்படம், காவற்றல் வைத்து உண்டு மகிழ்வர்.


தன்னுடைய மக்கள் சந்தோஷமாக, ஒற்றுமையாக ஓணம் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வதைக் கண்ட மகாபலி சக்கரவர்த்தி, மீண்டும் பாதாள உலகத்துக்குச் செல்கிறார் என்பது கேரள மக்களின் நம்பிக்கை.


#Happy_Onam

#mahavishnuinfo


*FORWARD MESSAGE*

*என்றும் அன்புடன்,*


*எம்.சரவணக்குமார்@எஸ்.கே*

*<எஸ்.கே>தமிழ் இணையம் ™ வாட்ஸ் ஆப் குழு*

*மதுரை*👈🇮🇳🚀🌍

*வாட்ஸ் ஆப் எண்கள்*

*9842171532*

*9444771532*🌺🌻🌹

*முகநூல்: SMS KING SK*

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்