குறுகிய நோக்கம் கொண்ட மற்றவர்களால் செய்ய முடியாத விசயங்களை ரஜினியால் சுலபமாக சாதிக்க முடியும் என பெருவாரியான மக்கள் நம்புகின்றனர்
வணக்கம். ...
தினமலரில்,
சிந்தனைக்களம் பகுதியில்,
தலைவர் பற்றிய,
ஒரு நீண்ட கட்டுரை -
எழுதியவர் பேராசிரியர் ஜி.ரமேஷ் ..
நம்மாட்கள் படிப்பதற்காக அப்படியே நம் பதிவில் .. பொறுமையாக படிங்க.
ஸ்கிரிப்ட் தயார் , நடிகர் தயார்....
ஆக்சன் தேவை.
தமிழக அரசியல் வெறிச்சோடி கிடக்கிறது. காரணம் ரஜினிகாந்த் ; அவர் இன்னும் களம் இறங்கவில்லை , அதனால் வரப்போகும் தேர்தல் குறித்து சிந்திக்க முடியாமல், கட்சிகள் திகைக்கின்றன.
சில முடிவுகளை தொடர்ந்து தள்ளிப் போட முடியாது, ஆம் அல்லது இல்லை என்று தீர்மானித்தாக வேண்டும். பூவா, தலையா என்று நாணயத்தை கண்டி விட்டாலும் சரி, முடிவு தெரிந்ததாக வேண்டும், நன்மையா தீமையா , இப்போதா அப்புறமா , வெற்றியா தோல்வியா என்ற விவாதங்களுக்கு இப்போது இடம் இல்லை .
இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதக்கூடிய வல்லமை வாய்ந்த முடிவை எடுப்பதில் ரஜினி இது வரை காட்டிய தயக்கம் போதும், கொரோனா பரவல் அவருடைய தள்ளி வைப்புக்கு கடைசி காரணமாக அமையட்டும் ..
சிலர் சித்தரிப்பது போல ரஜினி ஒன்றும் சூனியத்தில் இருந்து துவங்கவில்லை. கண்ணுக்கு தெரிந்த மிகப் பெரிய படையும், வெளியே புலப்படாத பெரிய ஆதரவாளர் கூட்டமும் அவருக்காக காத்திருக்கின்றன ..
கட்சிக்கான நிர்வாக சாசனம் எழுதப்பட்டு விட்டது , கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது முடிவாகி விட்டது, ஒவ்வொரு அடியும் எப்படி முன்னெடுத்து செல்லப் பட வேண்டும், என்பதும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. பிறகு ஏன் ரஜினி அறிவிக்காமல் நிற்கிறார் ?
தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று எல்லாரும் விரும்புகின்றனர், பல்துறை வல்லுனர்களும் அதில் அடக்கம் , அவர்களில் பலர் ரஜினிக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்...
அரசியல் கொதிநிலை :
நல்ல நோக்கத்துடன் துவங்கப்பட்ட பல கட்சிகள் , பின் பாதையை தொலைத்து பாழாகிப் போனதை ரஜினி பார்த்திருக்கிறார். அப்படி ஒரு நிலை என் கட்சிக்கும் வந்து விட்டால் ... என்ற அச்சம் அவரை பிடித்திருக்கிறது என, சில ஆலோசகர்கள் நம்புகின்றனர்.அவ்வாறு நடக்காமல் தவிர்க்க இந்த இரண்டு கட்ட, செயல் திட்டத்தை ரஜினியின் பரிசிலனைக்கு சமர்ப்பிக்கிறேன்..
முதல் கட்டம் : கட்சி நாளை அல்ல இன்றே துவங்குங்கள் ..
இரண்டாம் கட்டம் : இரண்டு ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்து விட்டு, அதன் பின் தமிழகத்தை ஆன்மிக அரசியலுக்கு திருப்பி விட்டு தேசிய நீரோட்டத்தில் இணையுங்கள் ..
முதல் கட்டத்தை பார்க்கலாம்.
இதுவரை தமிழகத்தை ஆண்டவர்கள் , பெரிய தலைவர்கள், மற்ற மாநில தலைவர்களிடம் இல்லாத தனித்தன்மை அவர்களிடம் இருந்தது , ஜாதி , மதம் , இனம் ஆகிய வேறுபாடுகளை கடந்து மக்களின் உள்ளத்தை கவர்ந்தனர் , அத்தகைய தலைவர்கள் இப்போது இல்லை. ஆளுக்கு ஒரு வட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, முழுமையாக நம்பத் தகுந்த தலைவன் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கம் எல்லா கட்சிகளின் தொண்டர்களுக்கும் இருக்கிறது. இதை அரசியல் கொதிநிலை என்கிறோம்.
மாற்றத்துக்கு முந்தைய சுழற்சி இது, பார்ப்பதற்கு குழம்பிய குட்டையாக காட்சி தருகிறது , அதில் மீன் பிடிக்க தலைவர்கள் தயாராக இருக்கின்றனர், ஒரே ஒரு அசைவு தான் இந்த கொதிநிலைக்குத் தேவை .
அதை கொடுக்க வல்லவர் ரஜினி ஒருவரே , ஸ்கிரிப்ட் தயார், கதாபாத்திரங்களும் தயார், லைட்ஸ்ஆன்..'.. ஆக்சன் என்ற வார்த்தை மட்டும் ரஜினி வாயிலிருந்து வர வேண்டும் , அதற்காக காத்திருக்கிறது தமிழ்நாடு.
இவர் ஜாதி பார்க்க மாட்டார், பணம் சம்பாதிக்க அலைய மாட்டார் என்று தமிழக மக்கள் யாரையாவது
நம்புகின்றனர் என்றால் அது ரஜினியைத்தான் ...
குறுகிய நோக்கம் கொண்ட மற்றவர்களால் செய்ய முடியாத விசயங்களை ரஜினியால் சுலபமாக சாதிக்க முடியும் என பெருவாரியான மக்கள் நம்புகின்றனர்.
எல்லா மட்டங்களிலும்,ஊடுருவிக் கிடக்கிற ஊழலை, அவரால் மட்டுமே ஒழிக்க முடியும் என மக்கள் நம்புகின்றனர், எனினும் ஊழலைத் தாண்டியும் ஆழமாக பிரச்சினைகள் இருக்கின்றன ..
மூன்று விசயங்கள் அவர் மனதை குடைவதாக எனக்கு தோன்றுகிறது.
1. முதல்வர் நாற்காலியில் அமர விரும்பவில்லை என்று அவர் சொன்னது மக்களுக்கு மிகப் பெரிய பெரிய ஏமாற்றம், ஏன் என்றால் ரஜினியை நம்பும் அளவுக்கு அவரோடு இருப்பவர்கள் அல்லது இருக்கப் போகிறவர்களை எவரும் நம்ப மாட்டார்கள் ..
எனவே, ரஜினி இப்படி செய்யலாம், இரண்டு ஆண்டுகள் முதல்வராக இருந்து, ஆட்சியும் , அரசு நிர்வாகமும் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று ஒரு பாதையை வகுக்கலாம் ..
அந்த காலகட்டத்திலேயே அவருக்கு பின் யார் முதல்வராக வருவது என்பதை எடை போட்டு தீர்மானிக்கலாம் , அவருடைய தேர்வு சரியா என மக்களும் கண்கூடாக பார்க்க முடியும்.
இதைவெளிப்படையாக அறிவித்துவிட்டே ஆட்சி அமைக்கலாம் , முறையற்ற ஓர் ஆட்சி அமைய நாம் காரணமாக இருந்து விட்டோமா என்ற உறுத்தலை , இதன் மூலமாக அவர் தவிர்க்கலாம் ..
2. இரண்டாவது விசயம் , முதல்வர் பதவியை துறந்த பிறகு என்ன செய்வது என்பது. அதுகடினம் அல்ல, பதவிகளுக்கு அப்பாற்பட்ட தலைவனாக , ஒரு ஸ்டேட்ஸ்மேனாக தன்னை உயர்த்திக் கொள்ளலாம் ,கிங் மேக்கராக, சமூகத்தின் மனசாட்சியாக மாறுவது அவருக்கு சிரமம் அல்ல. ..
ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படக்கூடிய ஒரு அரசியல் இயக்கத்தை தமிழகத்தில் உருவாக்கி , இந்தியாவுக்கு எடுத்துக் காட்ட அவர் மெனக்கிடலாம் , அதற்கு ஐந்தாண்டுகள் போதும்.
அப்புறம் ஒரு செயல் தலைவரை தேர்வு செய்து விட்டு கட்சியின் நிறுவன தலைவராக எஞ்சிய காலத்தை நிம்மதியாக கழிக்கலாம்.
3. மூன்றாவது விசயம், மத்திய அரசுடன் மாநிலத்தின் உறவு, இதில் அவர் கண்ணை மூடிக் கொண்டு எம்ஜிஆர் பாதையில் பயணம் செய்யலாம் , எம்ஜிஆருக்கு தேசிய பார்வை இருந்ததே தவிர எம்ஜிஆருக்கு தேசிய அளவில் கல்லா கட்டும் ஆசைகள் கிடையாது, தமிழகத்தின் நலனை மட்டும் அவர் முதன்மையாக கொண்டிருந்தார்.
ரஜினியும் அதே நேர்க்கோட்டில் இருப்பவர், ரஜினி தமிழக நட்சத்திரம் மட்டும் அல்ல , அவர் செல்வாக்கு எல்லை கடந்த ஒன்று , தென் மாநிலங்கள் மற்றும் ஏனைய மாநிலங்களில் அவரை ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கின்றனர், இமேஜ் குறித்த எந்த கவலையும் இல்லாமல் இயற்கையான தோற்றத்தில் வளைய வரும் வேறு சூப்பர் ஸ்டாரை அவர்கள் கண்டது இல்லை.
ஆகையால் முதல்வர் பதவியை விட்ட பிறகு காமராஜர் பாணியில் ரஜினி ஒரு ஆலோசகராக , வழிகாட்டியாக சுருக்கிக் கொள்ளலாம், ஆனாலும் தமிழத்தின் குரலாக, அவரது கருத்தை மத்திய அரசும், மற்றவர்களும் எதிர்பார்ப்பர்.
அது போக வெல்வேறு மதங்களை சேர்ந்த ஆன்மீக தலைவர்களையும் ஒரே மேடைக்கு கொண்டு வரும் ஆற்றல் ரஜினிக்கு இருக்கிறது. நதிகள் இணைப்பில் அக்கறை கொண்ட ரஜினி இந்திய மக்களின் இதயங்களை இணைக்கின்ற ஒரு சமூக பொறியாளராக புது அவதாரம் எடுக்க வேண்டும்
எனவே இப்போதைக்கு ரஜினி தமிழகத்தின் நலனுக்காகவும், திசை தெரியாமல் தவிக்கும் ஆதரவாளர்களுக்கு வழிகாட்டவும் ரஜினி நல்ல முடிவை உடனே அறிவிக்க வேண்டும்.
பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் கவலை தீர்க்க, வரும் தடுப்பு மருந்து அதுவாகத்தான் இருக்கும். இத்தனை ஆண்டு காலமாக தனக்காக காத்திருக்கும் தமிழக மக்களுக்கு ரஜினி செய்யக் கூடிய ஒரே நன்றிக்கடனும் அதுவே.
நன்றி. ஜெய் ஹிந்த்.
பேப்பர் கிளிப்பிங் அனுப்பியது அண்ணன் R.கராத்தே தியாகராஜன் அவர்கள்.
அழகான கட்டுரை நன்றி பேராசிரியர் ரமேஷ் சார், படிங்க படித்து விட்டு,எல்லா ரசிகர்களும் படிக்கும் படி எல்லா குருப்களிலும் share பண்ணுங்க.
இதை மாதிரி கட்டுரைகள் படித்தால், இப்ப உள்ள நம் ரசிகர்களுக்கு,
அரசியல் அறிவு பெருகும் என்பதில் ஐயமில்லை.
Comments
Post a Comment