என் பணி முடிந்து வீடு திரும்பும் போது வழக்கமாக அந்த முதிய பெண்மணியிடம்தான் காய்கறி வாங்குவது வழக்கம். நான் வருவதற்கு முன் வேண்டியவையை ரெடியாக வைத்து விடுவாள்...

 



என் பணி முடிந்து வீடு திரும்பும் போது வழக்கமாக  அந்த முதிய பெண்மணியிடம்தான் காய்கறி வாங்குவது வழக்கம். நான் வருவதற்கு முன் வேண்டியவையை ரெடியாக வைத்து விடுவாள்...


அன்று மிகவும் சோகமாகவும் களைப்பாகவும் இருந்தாள்.


என்ன ஆயா! சுறுசுறுப்பே இல்ல !

ரொம்ப சோகமா உட்கார்ந்து  இருக்கே! ஏன்! என்று கேட்டேன் .


பொண்ணை ஆஸ்பத்திரிலே சேர்க்கணும் ! பிரசவம் இன்னைக்கோ  நாளைக்கோ தெரிலேப்பா! என்றாள்.


சட்டென்று என் பையில் எப்பொழுதும் அவசரத்திற்க்காக வைத்திருக்கும் ஆயிரம் ரூபாயை அவளிடம் நீட்டினேன்.


ஆயா! அவசரத்துக்கு வச்சுக்கோ! அப்புறம் பாக்கலாம்! என்று  சொல்லி விட்டு போய்ட்டேன் .


அதற்குள் சனி,ஞாயிறு விடுமுறை கழிந்து திங்கள் மாலை வந்தேன்.


ஆயா அங்கு இல்லை! வேறு ஒரு பெண் இருந்தாள். ஆனால் என்னுடைய  காய்கறிப் பை ரெடியாக இருந்தது.


ஐயா ! உங்க ஸ்கூட்டரை பார்த்ததும் தெரிஞ்சிக்கிட்டேன்! இந்தாங்க  உங்க காய் ,ரெடியா கட்டி வச்சுட்டேன் என்று கொடுத்தாள்.


ஐய...! மறந்துட்டேன் ! என்று சொல்லி ரெண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து" ஆயா உங்க கிட்ட கொடுக்கச் சொல்லிச்சு " என்று கொடுத்தாள் அந்த பெண்மணி .


என்னம்மா !ஆயாவுக்கு என்ன ஆச்சு ! என்றேன்


"ஆயா ஆசுபத்திரிலேதான் இருக்கு! இன்னும் பொண்ணுக்கு பேறு காலம் இன்னும் ஆகலே" என்றாள்


அந்த ரூபாய் நோட்டுக்களை பார்த்தேன் !.

நான் கொடுத்த அதே ரூபாய்கள்தான்! எனக்கு ரொம்ப ஆச்சர்யமாகப் போய் விட்டது.


அதற்குள் பக்கத்துக்கு கடை பெண்மணி என்னிடம் பேசுவதற்கு  சைகை செய்தாள்.


" நீ அன்னைக்கி நோட்டை கொடுத்துட்டு ஸ்கூட்டர்லே ஏறி போயிட்டே!


ஆயா அதை கைலே வச்சிக்கிணு ரொம்ப நேரம் உக்காந்துகினு இருந்தது!.


வழக்கமா வாடிக்கையா ரொம்ப நாளா காய் வாங்கிக்கினு போறாரு !


அவர் கைலெல்லாம் கடன் வாங்கினா மருவாதை இல்ல !அவர்  வருவாரு !இத்தக் கொடுத்திடுன்னு சொல்லிட்டுப் போச்சு !செலவு பணத்துக்கு நான் ஏற்பாடு செய்திட்டேன்" என்றாள் .


நினைத்தேன்! அன்றாடம் கஷ்டப்பட்டு ஜீவனம் செய்யும் ஒரு வயதான பெண்மணியின் வைராக்கியம் ,கவுரவம் என்னை பெருமையுடன் சிலிர்க்க வைத்தது !.


சிறிது யோசனை செய்தேன்!.

பிறகு அந்தப் பெண்மணியிடம்


"தப்பா நெனச்சுக்காதே ! இந்தப் பணத்தை நீ கொடுத்ததாக இருக்கட்டும் என்று சொல்லி இன்னும் ஒரு ஆயிரம் சேர்த்துக்  கொடுத்தேன் அவளிடம் .


இதை அவளிடம் கேட்காதே ! நீயும் எனக்குத் தர வேண்டாம் " என்றேன்.


அந்தப் பெண்மணி கொஞ்ச நேரம் யோசனை செய்தாள்.

பிறகு என்னைப் பார்த்தாள்.


யப்பா! உனக்கு ரொம்ப நல்ல மனசு! பிள்ளை குட்டியோட எப்பவும்  சந்தோஷமா இருப்பே!

இந்த பணம் தேவை இல்லே !

நான் கொடுத்திட்டேன் ! 

எப்படியாச்சும் உருட்டி எங்க செலவே நாங்க சுதாரிச்சுருவோம்" என்று என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டாள்.


நான் மிகவும் அசந்து போய்ட்டேன்.


என்ன வில் பவர்!

என்ன தன்னடக்கம் கலந்த சுய கவுரவம் !


தன் மானமும் மனித நேயமும் இங்கே தலை நிமிர்ந்து வாழ்கிறது !


சட்டென்று என் நண்பன் ஞாபகம் வந்தது .இதே மாதிரி அட்சய திருதிய நாள். அவனிடமிருந்து போன் வந்தது ."நான் டி நகர்லே நகைக் கடையிலிருந்து பேசறேன்.

பணம் போறலே ! 

கிரெடிட் கார்டும் வேல செய்யலே ! உடனே அட்லீஸ்ட் பத்தாயிரம் ரூபாயோட வந்து  என்னைக் காப்பாத்து! என்றான் .


நான் என் மனைவியிடம் கூட சொல்லாமல் ஓடினேன்!

வருஷம்  இரண்டாகி இப்போ மூணாவது அட்சய திரிதி கூட போயாச்சு !.


அவனும் பணத்தைப் பற்றி வாயத் திறக்கலே ! நானும் கேட்டால் கவுரவ குறைவு என்று கேட்க்காமே இருக்கேன்! இது வசதி படைத்தவர்கள் விவகாரம் ! மௌனமான வேதனைகள் !.


அன்று இரவு என் மனைவியிடம் காய்கறி ஆயாவைப் பற்றி  சொன்னேன்.

மனைவி உடனே சொன்னாள்.

என்ன தயக்கம் !

நேரா ஆஸ்பத்ரிக்குப் போவோம்.

நான் விசாரிக்கிறேன்.

அங்கு ஆகும் செலவை நாம் அவளுக்குத் தெரியாமல் கட்டி விடுவோம். வாருங்கள் என்றாள்.


என் மனைவிக்கு எனக்கு மேலவும் நல்ல மனசு ! வாழ்த்தினேன்.


ஆஸ்பத்ரிக்குப் போனோம். பாவம் அந்தப் பொண்ணுக்கு சிசரியன் வேற !எல்லா பில்லுக்கும் என் மனைவி விசாரித்து செட்டில்  பண்ணிவிட்டு ,அவர்களிடம் ஆயா வந்து கேட்டால் இலவச சேவை மூலம் கட்டி விட்டார்கள் என்று சொல்லச் சொல்லி ரிக்வஸ்ட்  பண்ணி விட்டு வந்து விட்டாள்.


ஒரு வாரம் சென்றது !

கடையில் மறுபடியும் ஆயா உட்கார்ந்திருந்தாள் .என்ன ஆயா! சௌக்கிமா இருக்கயா ! மகளுக்கு பேரனா இல்ல பேத்தியா! என்றேன்.


பேரன் பொறந்திருக்கான் அப்பா ! ஆபரேஷன் பண்ணி எடுத்தாங்க!எல்லாம் நல்லா இருக்காங்க !.


யாரோ ஒரு புண்ணியவதி ! மகராசி ! மொத்த செலவையும் கட்டிட்டுப்  போய்ட்டாங்களாம் ! அவங்க குடும்பத்தோட நல்லா இருக்கணும் என்றாள்.


ரொம்ப சந்தோஷம் ஆயா !

என்று சொல்லி வழக்கமான என் காய்கறிப் பையை தூக்கினேன். எப்பொழுதையும் விட சற்று கனமாகி இருந்தது! திறந்து பார்த்தேன் ! வழக்கத்தை விட அதிகமான காய்கறி !.


தவிர கட்டாக ஒரு மல்லிகை பூச்சரம் சுற்றியும் வைக்கப் பட்டிருந்தது .


என்ன ஆயா ! இது என்னோட பையா! என்றேன்.


ஆமாம் அய்யா! உன்னோடதுதான் ! அந்த பூ பையே உங்க வீட்டுக்கார அம்மா கையிலே கொடு ! அவங்க எப்பவும் சந்தோஷமா உன்னோட இருக்கணும்!. அவங்க செஞ்ச உபகாரத்தை என் குடும்பம் என்னைக்குமே  மறக்காது!.


என்ன ஆயா! என்னவெல்லாமோ சொல்றே!.

ஆமாம் ராஜா! உன் வீட்டுக்கார அம்மாதான் எல்லாத்தையும் ஏத்துக்கிட்டாங்கன்னு முதல்லே தெரியாது! அப்புறம் விசாரிச்சு தெரிச்சுக்கிட்டேன் என்றாள் ஆயா.


நான் திகைத்துப் போய் விட்டேன் .பிறகு இப்படியே இது தொடராக கூடாது என நினைத்து சரி ஆயா! என் மனைவிதான் வந்தாங்க! ஆனா நாளையிலிருந்து நீ  வழக்கமா கொடுக்கிற காய்தான் கொடுக்கணும்.சரியாய் சில்லறை  வாங்கிக்கணும். அதிகமா எல்லாம் கொடுத்தீன்னா அப்புறம் நான் இங்கே வர மாட்டேன். உன்ன எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். 


சரி ராஜா ! அப்படியே செய்றேன் !வராம கண்டி இருந்திராதே ! என்றாள்.


வீட்டிற்கு வந்து மனைவியிடம் சொன்னேன்.


என் மனைவி ரொம்ப ஆச்சர்யப் பட்டாள். வாவ் ! வாட் எ கிரேட் லேடி !

என்ன பெருந்தன்மை! என்று அந்தப் பூச்சரத்தை அப்படியே சாமி  படத்தில் அலங்காரம் செய்து அவளுக்காக வேண்டிக் கொண்டாள்.


பிறகு என்னிடம் என்னங்க! நாளை மாலை நேரா அங்கே போகாதீங்க !


வீட்டிற்கு வந்து என்னையும் கூட்டிக் கொண்டு போங்க " என்றாள்.


மறு நாள் மாலை.

நானும் மனைவியும் ஆயா கடைக்குப்  போனோம்.


ஆயா என் மனைவியைப் பார்த்ததும்

வாம்மா தாயி. நீ நல்லா இருக்கணும் !ஐயா கூட சௌக்கியமா  சந்தோஷமா இருக்கணும் !.

எவ்வளவு பெரிய உபகாரம் செஞ்சிருக்கே ! என வாயார வாழ்த்தினாள் .


என் மனைவி சொன்னது " ஆயா! நான் வேத்து மனுஷியா இதை  செய்யலே! உனக்கு மூத்த பொண்ணு என்ன செய்யுமோ அதைத்தான்  செஞ்சேன் ! ஆனா நாளைலே இருந்து வழக்கமான காய்தான் கொடுக்கணும்.

மேல்கொண்டு எதையும் தரக் கூடாது". என்று சொல்லி என்னிடம் என்னங்க! ஸ்கூட்டரை விட்டு ஒரு நிமிஷம்  இங்க வாங்க " என்று சொல்லி,


ஆயா! எங்க ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணுங்க ! என்று சொல்லி அவள் காலடியில் வணங்கினோம்.


ஐயோ ! என்னம்மா இது! இப்படியெல்லாம் பண்ணைக் கூடாது அம்மா! என்று ஆயா பதைபதைத்து கண்களில் நீர் பெருக


நெடு நாள் நல்லா இருங்க ஐயாவும் அம்மாவும் " என்று வாழ்த்தினாள் .


என் மனைவி சொன்னாள். " வணங்கி ஆசீர்வாதம் பெற உன்னை விட பெரிய உயர்ந்தவர்கள் எங்களுக்கு தெரியாது. உன்னோட அன்பான  வாழ்த்துக்கள்தான் எங்களுக்கு தேவை" என்று சொல்லி

வாங்க போகலாம் என்று கிளம்பி விட்டாள்.


கண்ணீர் மல்க வாயடைத்து ஆயா அப்படியே உட்கார்ந்திருந்தாள் .


தூய்மையும் பெருந்தன்மையும் உள்ள மனித நேயம் ஒன்று  மெய்சிலிர்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.


அவளுடைய அருமையும் அப்பழுக்கற்ற பெருந்தன்மையும் உயர்வும் எவ்வளவு அபூர்வமான எளிதில் காணப் படாத ஒன்று என்பது அவளுக்குத் தெரியாது !


நாங்க வீட்டுக்குப் போகிற வழியில் உள்ள ஒரு கோவிலுக்குப்  போனோம் .


வலம் வந்து வணங்கிவிட்டு வெளியில் வரும் போது நான் சொன்னேன்.

"எனக்கு நல்லா தெரியும்! இறைவன் எங்கும்  நிறைந்தவன்.

நமக்கு உதவி செய்பவர் கடவுள் மாதிரி நாமும் பிறருக்கு உதவுவோம்.

வாழ்க மனித நேயம்.


ஈர மனசுதாங்க நம்ம பண்பாடு.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம். 🙏💐 



Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷