நீங்க சங்கராச்சாரி(யார்) ஆக முடியுமா"
S Shanmuga Nathan ஜி எழுதிய அற்புதமான பதிவு. "நீங்க சங்கராச்சாரி(யார்) ஆக முடியுமா" என்று கேள்விக்கு அங்கிருந்த பெண்கள் ஆதங்கத்தில் பதிலளித்ததை விமர்சனம் செய்வதை விட்டு... இந்தப் பதிவை முடிந்தவரை பகிருங்கள். ஊடகங்களில் இது தொடர்பாக விவாதிப்பவர்களுக்கு பயன்படும்.
_________________________________
***சங்கராச்சாரியார்***
"நீங்க சங்கராச்சாரி(யார்) ஆக முடியுமா" என்று யாரவது என்னைப் பார்த்துக் கேட்டால், "சத்தியமாக ஆக முடியாது என்பேன்". ஏனென்றால், எனக்கு அவ்வளவு தியாகம் பண்ண முடியாது, என் வாழ்வு ஆசை நிறைந்தது, ஏதேதோ ஆக வேண்டும் என்று கனவு கண்டு எதெதையோ தேடி அலைபவன் நான்.
"தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரைகூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்" கோடிக்கணக்கான வேடிக்கை மனிதர்களில் நானும் ஒருவன்.
என்னால் விரதம் இருக்க முடியாது, புலன்களுக்கு அடிமைப்பட்டவன் நான். எனக்கென்று விருப்பு வெறுப்பு இருக்கிறது. சங்கராச்சாரியார் ஆவதை விடுங்கள், என்னால் ஒரு நல்ல பக்தன் ஆவதே சிரமமான காரியம்.
இதற்கெல்லாம் முதலில் நானே தயாராக இல்லை. என்னை யாரவது வந்து "நீ Google CEO" ஆக முடியுமா என்றாலும் இதே பதில் தான். நான் தயாராக இல்லை, பின்னே எப்படி ஆக முடியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்வது?
சிறு வயது முதல் கொஞ்சம் ஆன்மீகத்தில் ஈர்க்கப்பட்டவன் நான். திண்டுக்கல்லில் "சுவாமி தத்வானந்தரின்" சொற்பொழிவுகளில், சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டு, அவர் மீது பெரிதும் மரியாதை வைத்திருந்தேன். 1990 என்று நினைக்கிறேன். காஞ்சி சங்கர மடத்திற்கு "எனக்கும் காயத்ரி மந்திரம் சொல்ல ஆசை. மற்ற மந்திரங்கள் ஜெபிக்கவும் ஆசை. ஆனால் நான் பிறப்பால் பிராமணன் அல்ல. என்ன செய்ய வேண்டும்" என்று காஞ்சி மடத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். காஞ்சி மடத்தில் இருந்தே கைப்பட ஒரு கடிதமும் வந்து சேர்ந்தது. (துரதிர்டவசமாக அந்தக் கடிதம் தொலைந்து விட்டது.) அந்தக் கடிதத்தின் சாரம் "அவரவர்க்கென்று நியமிக்கப்பட்ட கடமைகள் உண்டு. உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டென்றால், காயத்ரி மந்திரம் சொல்ல விருப்பம் என்றால் ஜபம் செய்யும் செய்முறை விளக்கம் கூடிய கையேடு அனுப்பி இருக்கிறோம். இதன் படி செய்யவும்" என்று பெரியவரின் ஆசியுடன் காஞ்சி மடத்தில் இருந்தே கைப்பட எழுதிய ஒரு கடிதம் என்னை வந்து சேர்ந்தது.
எனவே, என் அறிவுரையும், சங்கச்சாரியார்ஆக விருப்பமுள்ளவர்கள் இது போன்ற ஒரு கையேட்டை வாங்கி அதன் படி நடந்து ஆரம்பிக்கவும். That will be a good start.
இதுவும் சொல்ல வேண்டும்:
ஆழ்வார்கள் பன்னிருவர். இவர்களில் 8 ஆழ்வார்கள் பிறப்பால் பிராமணர்கள் கிடையாது. இந்த பன்னிரு ஆழ்வார்களில் தலைமை ஆழ்வாராக கொண்டாடப்படும் நம்மாழ்வார் பிராமணர் கிடையாது. ஆனால் அவருக்கு கிடைக்காத மரியாதை வேறு யாருக்கும் இல்லை. ஸ்ரீரங்கத்தில் அவ்வளவு பெரிய சந்நிதி நம்மாழ்வாருக்கு. சங்கராச்சாரி(யார்) ஆக முடியுமா என்பவனுக்கு நம்மாழ்வார் என்றால் யாரென்றே தெரியாது. ஆனால் நம்மாழ்வாரைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பக்தர் குழாம்.
திருப்பாணாழ்வார் பற்றிய விஷயம் தெரிந்தால், இந்த அறிவாலய அடிமைகளுக்கு, இந்தக் கேள்வியே எழுந்திருக்காது.
திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் பிராமணர் கிடையாது. அவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது ஆன்மீகம்.
இந்த தி.க கேட்கும் கேள்விகள் பதில் தேடி அல்ல, அவை வெறும் கேலி பேச மட்டும், பிரிவினை பேச மட்டும் நம் மீது எறியப்படும் கற்கள்.
கர்நாடக சங்கீதமும் இதே வகை. "அவா மட்டும் தான் பாடுவா" என்று கேலிப்பேச்சு. எத்தனை குடும்பம் தங்கள் பிள்ளைகளை கர்நாடக சங்கீதம் பயில அனுமதிக்கிறது? "ததரினன்னா" என்றாலே "ஐயோ" என்று அலறிவிட்டு, பின் மற்றவரை குறை சொல்லி என்ன ஆகப்போகிறது?
சங்கராச்சாரி(யார்) என்பது ஒரு post கிடையாது. அது ஒரு மேன்மை நிலை. கண்ணப்பர் போல கண்ணை இழக்க தயாராக இருக்கவேண்டும். முடியும் என்றால் நீயும் ஒரு சங்கராச்சாரியாரே. நீயும் ஒரு கண்ணப்பரே.
முதலில் தகுதியை வளர்த்துக்கொள். If you elevate yourself there is no "reservation", whatsoever, to become a Shankaracharyar.
-ச. சண்முகநாதன்
Comments
Post a Comment