ஸ்ரீரங்கம் என்தாய்வீடு! சிலிர்க்கும் அர்ஜென்டினா ஸ்ரீவைஷ்ணவ அடியவர்!

 



ஸ்ரீரங்கம் என்தாய்வீடு!

சிலிர்க்கும் அர்ஜென்டினா ஸ்ரீவைஷ்ணவ  அடியவர்!


'அடியேன் வருதபா ரங்கப்ரியதாசன்’ என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அவர்! தோள்களில் சங்கு-சக்கர குறிகளும், நெற்றியில் திருமண்ணும், வாய்நிறைய நாராயண நாமமுமாக அவரைப் பார்க்கும்போது, வெளிநாட்டவர் என்றால் நம்பமுடியவில்லை! 


ஆமாம்... அவரது இயற்பெயர் பெட்ரிகோ. 1979-ல் அர்ஜென்டினாவில், போனாசயஸ் எனும் ஊரில் பிறந்தவர். ரோமன் கத்தோலிக்க பாப்டிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர். வருதபா ரங்கப்ரியதாசன் எனும் பெயர், 2 மாதங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் கொங்கிலாச்சான் ஸ்ரீதர நரசிம்மாச்சார் யரிடம் தாஸ்ய நாமமாகப் பெற்றது.

தினமும் சந்தியாவந்தனம், ஏகாதசி தோறும் முறைப்படி விரதம், பெருமாள் ஸ்துதி என வைணவ அடியாராகவே வாழ்கிறார் வருதபா ரங்கப்ரியதாஸன். சரி, இந்து மதத்தில் குறிப்பாக வைணவத்தின் மீது இவருக்கான ஈர்ப்புக்குக் காரணம்?


''சிறு வயதில் வழக்கம்போல பள்ளிப் படிப்புடன் மதம் சார்ந்த கல்வியைத் தொடர்ந் தேன். ஆனாலும், படிப்பது ஒன்று செய்வது ஒன்று என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனாலேயே சமய கோட்பாடுகளின் மீது பிடிப்பில்லாமல் இருந்தது. கடவுளைப் பற்றியும் தெளிவில்லாத நிலை. நான் எதிர்பார்த்தது எல்லாம் யதார்த்தமும் நம்பகத் தன்மையுமான ஒரு வழிகாட்டல். அந்த தருணத்தில்தான், இந்து மதத்தின் 'ஈசாவாஸ்ய உபநிடதம்’ படிக்கக் கிடைத்தது. சப்தம், பிரமாணம் ஆகிய அடிப்படைகள் பற்றிய அதன் விளக்கங்கள் என்னைக் கவர்ந்தன தொடர்ந்து படித்தேன். சில அத்தியாயங்களுக்கு பிறகு உபநிடதம் கடவுளைப் பற்றி பேச... அட, இதுவும் மற்ற நூல்களைப் போலத்தான் என்று படிப்பதை நிறுத்திவிட்டேன். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் அந்தப் புத்தகத்தை தொடவே இல்லை!


எனக்கு பதினைந்து வயது இருக்கும். பள்ளியில் வைணவ தோழர்கள் சிலர் கிடைத்தார்கள். பரஸ்பரம் நிறைய பேசுவோம்.  அவர்களது சித்தாந்தத்தை அறிய முற்பட்டபோது, ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி நிறையவே சொன்னார்கள். பகவத் கீதையும் தந்தார்கள். அவர்களுடன் பேசப் பேச கண்ணன் மீது அதீத காதலே வந்துவிட்டது'' என்று கூறிவிட்டு பெரிதாகச் சிரிக்கிறார் வருதபா ரங்கப்ரியதாசன்.


அவரே தொடர்ந்து, ''பிறகு என்ன நடந்தது தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். அன்று இரவே கீதையை முழுவதுமாகப் படித்து முடித்தேன். எனக்குள் பெரிய தாக்கம். இந்து மத வழிபாடுகளும் கோட்பாடுகளும் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும்படியே கற்றுத் தருகின்றன என்பது புரிந்தது. அதன் விளைவு, நான் பாதியில் விட்ட உபநிடதத்தையும் படிக்க ஆரம்பித்தேன்.'' - எனச் சிலிர்ப்புடன் சொல்கிறார்.


பகவத் கீதைகளின் சூத்ரங்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் வரதப்ப ரங்கப்ரியதாசன். 'கீதையின் 18 அத்தியாயங்களிலும் ஆயிரக் கணக்கான சூத்ரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவசியமானது. ஆகவே, ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று முக்கியமானது எனக் குறிப்பிட்டுச் சொல்வது சாத்தியம் இல்லை. அதன் ஒவ்வொரு அட்சரமும் மகத்துவமானது’ என்பது இவர் கருத்து. பகவத் கீதை மட்டுமல்ல; இன்னும் பல ஞான நூல்களையும் படித்திருக்கும் இவர், அவை கூறும் கதைகளையும், விஞ்ஞான ரகசியங்களையும், சூரிய சித்தாந்தம் முதலான அபூர்வ தகவல்கள் குறித்தும் பெரிதாகச் சிலாகிக்கிறார்.


கிட்டத்தட்ட 38 திவ்யதேசங்களுக்கு பயணித்திருக்கிறார் இவர். ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு உணர்வு கிடைத்ததாகச் சொல்லும் ரங்கப்பிரியதாசன், அதிகம் தங்கியிருந் தது ஸ்ரீரங்கத்தில்தான்.


வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசிக்கு தவறாமல் திருவரங்கம் வந்துவிடுவாராம். இங்கே 6 மாதங்கள் தங்கியிருந்து, கொங்கிலாச்சான் ஸ்ரீதர நரசிம்மாச்சார்யரிடம் தேவலகரிகளை கற்றுக் கொண்டதும் சமாஸ்ரானத்தைப் பெற்றுக் கொண்டதும், தனக்குக் கிடைத்த பெரும் பேறு என்கிறார்.


2010-ல் சம்ஸ்கிருதம் பயின்றதுடன், பஞ்சசுத்தம், உபநிடதம், ஆபஸ்தம்ப சூத்ரம் ஆகியவற்றை இவர் கற்றுக் கொண்டதும் ஸ்ரீரங்கத்தில்தான். ''திருவரங்கத்தில் இருக்கும்போது என் தாய் வீட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன்!'' என்கிறார் பெருமிதத்துடன்.


''புத்தகங்கள் நிறைய கற்றுத் தந்தன என்றாலும், அவற்றை எனக்கு அறிமுகம் செய்ததும் படிக்கும் வாய்ப்பை தந்ததும், நான் சிறு வயதில் சந்தித்த அந்த வைணவ நண்பர்கள்தான். அவர்களால்தான் இஸ்கான் (மிஷிரிசிளிழி) முதலாக எனது ஆன்மிக பயணத்தைத் துவங்க முடிந்தது'' என்று நன்றிப்பெருக்குடன் குறிப்பிடுகிறார் ரங்கப்ரியதாசன். தற்போது இவர் வசிப்பது பார்சிலோனாவில். ஆனாலும் தினமும் காலையில் நீராடல், இரண்டுவேளை சந்தியாவந்தனம், ஜபம், திருவாராதனம்... என குறையின்றி தொடர்கிறது இவரது வழிபாடு. ஏகாதசி தினம் என்றால், அரிசி, கோதுமை ஆகியவற்றைத் தவிர்த்து பால்- பழங்கள் மட்டுமே உணவு.


''சம்ஸ்கிருதம் நன்கு தெரியும். தமிழ் கொஞ்சம் கடினம் என்றாலும் அழகு'' என்றவர்,  நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் முதல் பாசுரத்தை பிறழாது பாடுகிறார்!


''வாழ்க்கைக்கு உதவாத கண்கட்டி வித்தைகளை எனக்குக் காட்டவில்லை வைணவம். மாறாக மது, மாமிசம் ஆகிய தீங்குகளை என்னிடமிருந்து முற்றிலும் நீக்கி, ஆன்ம பலம் தந்து என் வாழ்க்கைத் தரத்தையே மாற்றியுள்ளது' என்று நெகிழ்ந்தவர் தொடர்ந்து கூறினார்: ''இந்தியர்களுக்கு நான் சொல்லும் செய்தி... உங்களில் பலர் தங்களின் ஞானப் பொக்கிஷங்களின் மகிமையை உணராமல் சட்டென்று தங்களின் மதம் மற்றும் கலாசார்த்திலிருந்து வெளியேறி விடுகிறீர்கள். முதலில் நீங்கள் உங்கள் கலாசாரத்தின் மேன்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.' என்றார்.


சரி.. எதிர்காலத்தில் இவரது ஆன்மிக பாதை?


''அது ஸ்ரீமந் நாராயணன் விட்ட வழி' என்கிறார் மெல்லிய சிரிப்புடன்!


அனா என்ற ஆனந்தினி வருதபா ரங்கப்ரியதாசனின் மனைவி. சமீபத்தில்தான் இவர்களின் திருமணமும் இந்து மத முறைப்படியே நடந்துள்ளது. ஆனந்தினி ஸ்பெயினில் கட்டடக் கலை பயின்றவர். கணவரைப் போலவே வைணவத்தில் பற்றுள்ளவர். 


ஸ்ரீமகா விஷ்ணுவே கண்கண்ட தெய்வம். காரணம்? ''அண்ணன் காட்டிய வழி'' எனச் சிரிக்கிறார். ஆமாம். ஆனந்தினியின் அண்ணன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது, நம் பண்பாடு கலாசாரத்தின் மீதான ஈர்ப்பாலும், பிருந்தாவன தரிசனத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களாலும் விஷ்ணு பக்தராகி விட்டார். 


அவர் தாய்நாடு திரும்பியபோது, அவரிடம் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் சகோதரிக்கு வியப்பளித்ததாம். அவர் மூலம் ஆன்மிகப் பெரியவர்களது சந்திப்பும் அவர்களது சொற்பொழிவுகளும் தன்னை விஷ்ணு பக்தையாகிவிட்டதாகச் சொல்லிச் சிரிக்கிறார் ஆனந்தினி. எப்போதும் புன்னகை, பக்தி, பணிவு... என கணவருக்கு மிகச் சரியான இணையாகத் திகழ்கிறார் ஆனந்தினி.

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்