"குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரனை முடியில் சூடியவரும், புகலடைந்தவர்களின் துன்பங்களை தடுப்பதற்கு காரணமானவரும், பொன்மையான சடைகளால் அழகு பெற்றவரும், விஷமத்தனமான மன்மதனின் கர்வத்தை அழித்தவருமான பரமசிவன் உங்களுக்கு நிலையான செல்வத்தை வளர்ந்தோங்கச் செய்வானாக"
பாண்டிய நாட்டை பிரித்து கேட்கும் சங்கியே முச்சங்கங்கள் நிறுவி தமிழ் வளர்த்த பாண்டியனுக்கும் இன்றைய இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்??? பாண்டியன் மறத்தமிழன் நீ ஏன் ஆரியனுக்கு கொடி பிடிக்கிறாய் என்று கேட்டுக்கொண்டே நகர்ந்தார் அந்த அந்தோணி முத்து எனும் தமிழ் ஆர்வலர்.
(பதிவு பெரியதாக இருந்தாலும் பொறுமையாகப் படித்தால் நிச்சயமாக சுவாரஸ்யம் உண்டு)
நக்கலும் நய்யாண்டியுமாக கடந்துகொண்டிருக்கும் எனது பதிவுகளுக்கு இடையில் வழக்கம்போன்றதொரு வரலாற்று நிகழ்வைக்காண்போம். இது என்னிடம் மேற்கூறிய கேள்வியை வைத்த அந்தோணி முத்துவிற்கும் பதில் கூறுவதாக இருக்கும்...!
"வேள்விக்குடி" பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா??? பாண்டியர்களின் செப்பேடுகளில் மிக மிக முக்கியமான செப்பேடு இது. ஏன் இந்த செப்பேடுகளுக்கு இத்தனை முக்கியத்துவம் எனில் கடைசங்க பாண்டியர்களுக்கு பின் கிபி 8 ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சி செய்த அரசர்கள் பற்றியும் இடையில் பாண்டியர்களிடமிருந்து ஆட்சியை பிடுங்கிய களப்பிரர்கள் பற்றியுமான அரிய தகவல்களை இச்செப்பேடு கொண்டுள்ளதால் இது பாண்டியர் செப்பேடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்....!
அதென்ன "வேள்விக்குடி"?? பெயரே விசித்திரமாக உள்ளதல்லவா?? இதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. அதை சொல்கிறேன் முதலில்🙂
பாண்டியர்களின் ஆட்சியில் சிறப்பாக அனைத்து செல்வங்களையும் பெற்று செழிப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்த மக்களில் ஒருவரிடமிருந்த ஒரு ஊரை களப்பிரர்கள் அபகரித்ததாகவும் அபகரிக்கப்பட்ட அந்த ஊரானது சங்ககால பாண்டிய மன்னனான பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியால் உரிமை கோருபவனின் முன்னோர்களுக்குத் தானமாக வழங்கப்படதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து பாண்டிய மன்னனிடம் அந்த நிலத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுக்கிறான்...!
(அதாவது இது சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக கொடுக்கப்பட்ட இந்த ஊரை கிபி 700 களுக்கு பின் அந்த ஆவணங்களை சமர்ப்பித்து ஊரை மீட்டுத்தர கேட்டிருக்கிறார் அந்த நபர்.)
அது எப்படி 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டிய மன்னன் என்று கேட்கிறீர்களா??? அதாவது நமக்கு கிடைத்துள்ள இலக்கியங்களில் மிகப்பழமையான இலக்கியமான புறநானூற்றில் முதல் 10 முதல் 100 பாடல்கள் காலத்தால் மிக மிக முன்னதாகும் இது கிமு 400 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தையது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று. இதன்படி சங்கப்புலவர் காராகிழார் என்பவர் புறநானூற்றின் ஆறாவது பாடலில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றி பாடியுள்ளார் என்பதை வைத்துதான் காலத்தை கணக்கிடுகின்றனர்..!
(சரி மீண்டும் கதைக்கு வருவோம்.)
இவ்வாறு தனது ஊரை மீட்டுத்தர ஜடில பராந்தக பாண்டியனிடம் கோரிக்கை வைத்ததும் ஆவணங்களை சரிபார்த்து அந்த ஊரை அதன் உரிமையாளருக்கே திரும்பத்தருகிறான் பாண்டியன் ஜடில பராந்தகன். எவ்வளவு வியப்பாக உள்ளது பார்த்தீர்களா? 900 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக அளிக்கப்பட்ட ஒரு நிலத்தை இத்தனை ஆண்டுகள் கழித்து திருப்பி கேட்டதும் தம் முன்னோர் அளித்த வாக்கிற்காக திரும்ப தரும் பாண்டியர்கள் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பதற்கு இதுபோன்ற அறசெயல்களே காரணமாக இருக்க வேண்டும்...!
(கதை இன்னும் முடியவில்லை. இன்னும் ஒரு சுவாரசியமான செய்தி உள்ளது.)
அதாவது ஊரைப் பெற்றுக்கொண்ட கொற்கைக் கிழான் காமக்காணி நற்சிங்கன் (மேற்கூறிய கதையின் கதாநாயகன்) அந்த ஊரை தான் வைத்துக்கொண்டானா என்றால் இல்லை. அந்த நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை மட்டும் தான் வைத்துக்கொண்டு மற்ற இரு பகுதியை ஐம்பது அந்தணர்களுக்கு அவன் பிரித்துக் கொடுத்தான் என்ற செய்தியை இவ்வாறு பதிவுசெய்கிறது இந்த சாசனம்,
"சுவரஞ்சிங்கன் இதனுள் மூன்றிலொன்றும் தனக்கு வைத்திரண்டுகூறும் ஐம்பதின்மர் பிராமணர்க்கு நீரோடட்டிக் கொடுத்தான்"
இப்படி 900 ஆண்டுகளுக்கு பின் முன்னோர்களுக்கு அளித்த சாசனத்தை ஆவணமாக காட்டி பெற்றுக்கொண்ட ஊரின் பெயர்தான் "வேள்விக்குடி". இதனால்தான் இந்த செப்பேட்டிற்கு வேள்விக்குடி என்ற பெயர் வந்தது. இனி செப்பேட்டில் உள்ள தகவல்களை காண்போம்...!
10 ஏடுகளைக்கொண்ட இந்த செப்பேட்டில் முதல் மற்றும் கடைசி ஏடுகளில் உட்புறத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. மற்ற எட்டு ஏடுகளிலும் இரு புறத்திலும் எழுதப்பட்டுள்ள இந்த செப்பேடானது மொத்தம் 155 வரிகளைக் கொண்டுள்ளது. லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளது.
தென்னாட்டில் கிடைக்கும் மிகப்பழமையான ஏடுகளில் எழுதப்பட்டுளதைப்போல இந்த ஏட்டிலும் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என்ற இரு மொழிகளை பயன்படுத்தியே எழுதியுள்ளனர். அதிலும் தமிழ்ப்பகுதியில் வரும் சமஸ்கிருத சொற்களை கிரந்த எழுத்துகளை பயன்படுத்தியே எழுதியுள்ளனர். இதிலுள்ள தமிழ் எழுத்துகளானது வட்டெழுத்துகளில் உள்ளது...!
(அதென்ன தமிழ் எழுத்துகளில் வட்டெழுத்து என்று கேட்காதீர்கள். அதாவது இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துகளானது முற்காலங்களில் வட்டெழுத்து, பிராமி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. இதுபற்றி இன்னொரு பதிவில் தெளிவாக காண்போம்.)
சமஸ்கிருதமா? என்று சிலர் வாயை பிளக்கத்தான் செய்வீர்கள். என்செய்வது??? நம் முன்னோர்கள் தமிழையும் சமஸ்கிருதத்தையும் சமமாக கருதியுள்ளனர் என்பதைக்கூறினால் எவன் கேட்கிறான்??? சரி போகட்டும் வழக்கம்போல சமஸ்கிருதப்பகுதியில் சிவபெருமானுக்கு வணக்கம் கூறி பாண்டியர்களின் புகழைக்கூறுகிறது.
இந்தப் பகுதியிலுள்ள ஒவ்வொரு சுலோகங்களின் முடிவிலும் பிள்ளையார் சுழி (உ) உள்ளது என்பது கூடுதல் தகவலாகும்...!
சமஸ்கிருத பகுதியின் முதல் ஸ்லோகத்தில் கூறியிருப்பதாவது,
"குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரனை முடியில் சூடியவரும், புகலடைந்தவர்களின் துன்பங்களை தடுப்பதற்கு காரணமானவரும், பொன்மையான சடைகளால் அழகு பெற்றவரும், விஷமத்தனமான மன்மதனின் கர்வத்தை அழித்தவருமான பரமசிவன் உங்களுக்கு நிலையான செல்வத்தை வளர்ந்தோங்கச் செய்வானாக"
இதற்கு விளக்கங்கள் எதுவும் தேவையில்லை எனினும் இச்செப்பேட்டில் சிவபெருமானை சந்திரனை முடியில் சூடியவன் என்ற பதம் வந்துள்ளதால் இதை பிரதிபலிக்கும் சில இலக்கியங்களை காணலாம். உதாரணமாக,
"முதிராத் திங்களோடு சிடருஞ் சென்னி" என்று அகநானூறும்,
"கொலைவன் சூடிய குழவித் திங்கள்"
"புதுத்திங்கட் கண்ணியான்"
என்று கலித்தொகையும்,
"பிறைமுடிக் கண்ணிப் பெரியோன்" என்று சிலப்பதிகாரமும் சிவபெருமான் தலையில் பிறை சூடிய நிகழ்வை பதிவு செய்கின்றன...!
இச்செப்பேட்டின் தமிழ்ப்பகுதியானது
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற சங்ககால அரசனைப் (கிமு 3-4 ஆம் நூற்றாண்டு) போற்றி ஆரம்பிக்கிறது. உதாரணமாக,
"கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாந்தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதிராசன்"
என்று இந்த அரசன் அரசாண்ட காலத்தில் பாகனூர்க் கூற்றம் என்ற இடத்தில் ஒரு வேள்வி நடைபெற்றது. அங்கே நடைபெற்ற வேள்வியை யார் நடத்தினார்கள் என்றால்
"சொற்கணாளர் சொலப்பட்ட சுருதி மார்க்கம் பிழையாத கொற்கைகிழானற் கொற்றன் கொண்ட வேள்வி"
சுருதி என்பது வேதம். அந்த வேத மார்க்கத்திலிருந்து வழுவாத கொற்கை கிழான் நற்கொற்றன் என்ற அந்தணன் அவ்வேள்வியை நடத்தினான். இந்த வேள்வியை நடத்திய அந்தணர்களின் வம்சாவழியினருக்குத்தான் அந்த ஊரின் மூன்றில் இரண்டு பகுதியை அளித்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்...!
இறுதியாக பாண்டியர்கள் தமிழர்கள் என்பதிலும் முச்சங்கம் நிறுவி தமிழ் வளர்த்தனர் என்பதிலும் யாதொரு ஐயமும் இல்லை. ஆனால் இந்த செப்பேட்டு சாசனத்தை தெளிவாக படித்தபின் பாண்டியர்கள் தமிழர்களா? அல்லது ஆரியர்களா? என்ற முடிவை ஆய்ந்து எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....!
#பாண்டியர்_செப்பேடுகள் , #சங்க_இலக்கியம் , #சமஸ்கிருதம் , #வட்டெழுத்து.
- பா இந்துவன்
Comments
Post a Comment