'நம்மைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பதற்கு அனைவரையும் ஓரணியில் கொண்டு செல்வது என்பது தான் பொருள்' என பிரதமர் நரேந்திர மோடி கூறுவது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

 






கேலியும், கிண்டலும், பீதியையும் கிளப்பியவர்களுக்கு சவுக்கடி


கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கொரோனா என்ற பெருந்தொற்றால் மக்கள் அனுபவித்து வரும் சோதனைகளும், துன்பமும் கொஞ்சமல்ல.


ஆனால் 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்...!' என்று வள்ளலார் கூறியதை போல மக்களின் துன்பத்தை கண்டு துடித்துபோன பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும், உறுதியான நடவடிக்கையும் இந்தியாவை உலக பெருந்தொற்றில் இருந்து வேகமாக மீட்டு வருகிறது.


கொரோனா கொள்ளை நோய் உலகம் உலுக்கிக் கொண்டிருந்தபோது தடுப்பூசியில் தயாரிக்கும் முயற்சியில் மேலை நாடுகள் இறங்கியபோதே நமது பாரத தேசமும் களமிறங்கியது.


அதற்கான விதை ஊன்றப்பட்டபோது கேலி செய்வதை தொழிலாக கொண்ட எதிர்க்கட்சிகள் வழக்கம் போல தங்கள் எதிர்ப்பு பிரசாரத்தையும், பயத்தையும், பீதியையும் கிளப்பின.


நம்மால் முடியும்


தடுப்பூசி ஆராய்ச்சி, உற்பத்தியில் பல ஆண்டுகளாக வளர்ந்த நாடுகள் மட்டுமே நிபுணத்துவம் பெற்றிருந்தன. வளர்ந்த நாடுகள் மட்டுமே தடுப்பூசியை தயாரிக்க முடியும் என்ற கருத்தோட்டம் நாடு முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டது.


வளர்ந்த நாடுகள் தயாரிக்கும் தடுப்பூசிகளைத் தான் இந்தியா பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. நாட்டை கொரோனா என்ற கொடி அரக்கன் உலுக்கிக் கொண்டிருந்தபோது இந்தப் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் திறமை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பின.


ஆனால் அவர்களுக்கு பிரதமர் மோடி கூறிய ஒரே பதில் 'நம்மால் முடியும்' என்பது மட்டுமே. ஆம், வளர்ந்த பல நாடுகளை முந்திக் கொண்டு, அதேசமயம் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை வைத்துள்ள இந்தியா தடுப்பூசி தயாரிப்பில் களமிறங்கியது.


ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்ட 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி ஒருபுறம் தயாரிக்கப்பட்டது.


'ஆக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜென்கா'வின் கோவிஷீல்ட் தடுப்பூசி, 'சீரம்' நிறுவனத்தால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.


கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரதமர் மோடி நேரடியாக கவனம் செலுத்தினார். தடுப்பூசி தயாரிப்பு, அதன் நிலைமை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, 2020-ம் ஆண்டு 28-ம் தேதி, 3 நகரங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினார்.


குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள 'ஜைடஸ் பயோடெக் பார்க்', ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆகியவற்றுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினார்.


இந்த 3 நகரங்களில் உள்ள மருந்து நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்ற பிரதமர் மோடி, மருத்துவ விஞ்ஞானிகளிடம் மருந்து தயாரிப்புக்கான வசதிகள், தயாரிப்பு பணி குறித்து கேட்டறிந்தார்.


ராக்கெட் வேகம்


மேலும் மருந்து தயாரிப்பு பணியில் உள்ள சவால்கள், எப்போது பணிகள் முடியும், தயாரிப்பு பணியின் நிலவரம் ஆகியவற்றையும் கேட்டறிந்து விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.


இந்திய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், நிறுவனங்கள், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், மத்திய அரசின் அனைத்து துறைகளும், பிரதமர் மோடியின் முயற்சிக்கு கைகொடுத்து பணியாற்றின.


'மேக் இன் இந்தியா' திட்டத்தை செயல்படுத்திவரும் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு, உள்நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி தயாரிக்க முடியும், மக்களை பேரழிவு கொரோனாவிலிருந்து காக்க முடியும் என்று நம்பிக்கையூட்டி முயற்சியில் இறங்கியது.


ஹைதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் 'ஐ.சி.எம்.ஆர்., தேசிய வைராலாஜி' நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்தியது.


இந்த முயற்சியின் விளைவாக கோவாக்ஸின் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, வெற்றிகரமான பரிசோதனைகளை நிறைவு செய்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் ஜனவரி 3ம் தேதி சான்று வழங்கப்பட்டது.


மறுபுறம் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பில் இறங்கி, இந்தியாவிலேயே கோவிஷீல்ட் மருந்து தயாரிக்கப்பட்டது. இந்த இரு நிறுவனங்களை மத்திய அரசு அரவணைத்து சென்றதன் விளைவாக


தடுப்பூசி தயாராகி கடந்த ஜனவரி 16ம் தேதி முதன்முதலில் கொரோனா தடுப்பூசிப் பயணம் தொடங்கியது.எதிர்க்கட்சிகளும், சில எதிர்ப்பாளர்களும் தவறான பிரசாரத்தை செய்தனர். மக்களிடம் பீதியையும், அச்சத்தையும், விரக்தியையும் செய்தனர்.


ஆனால் மத்திய அரசு, மாநிலஅரசுகளின் தீவிரமான விழிப்புணர்வு பிரசாரத்தால் ராக்கெட் வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், 60-வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்பட்டது.


அதன்பின் தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தி படிப்படியாக நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்த மத்திய அரசு முடிவு செய்தது.


செல்ல முடியாத பகுதி


அதன்படி தடுப்பூசி செலுத்துவதற்கான விரிவான திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், மக்களின் ஆதரவுடன் விஞ்ஞானிகள், சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியளர்கள், மருத்துவ துறையினர்,


அரசு ஊழியர்களின் ஒத்துழைப்புடன் நம் நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டது.

தடுப்பூசி திட்டத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடியே நேரடியாக அவ்வப்போது ஆய்வு செய்தார்.


இந்தியர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பெற ஆர்வம் காட்டினர். பல நாடுகள் தடுப்பூசி தயாரிக்க முடியாமல் கொரோனாவை எதிர்த்து போராட முடியாமல் தவித்த போது அவர்களுக்கு தடுப்பூசியை தந்து தன் கருணை உள்ளத்தை வெளிப்படுத்தியது பாரதம்.


இதைத் தொடர்ந்து அரசு நிர்வாகமட்டுமின்றி தனியார் பங்களிப்பையும் இணைத்துக் கொண்டது தடுப்பூசி திட்டம். கொரோனா தடுப்பூசி தயாரிப்பு, வினியோகம், செலுத்துதல் என மும்முனை பணியும் ஒரே நேரத்தில் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டது.


பனிபடர்ந்த காஷ்மீர் முதல் நீர் சூழ்ந்த அந்தமானுக்கும் வேகத்துடன் கொரோனா தடுப்பூசிகள் சென்றடைந்தன. அதுபோலேவே காடுகள் நிறைந்த அருணாச்சல பிரதேசத்துக்கும், வறண்ட பாலை வனமான ராஜஸ்தானின் தார் பகுதிக்கும் தடுப்பூசிகள் தங்கு தடையின்றி எடுத்துச் செல்லப்பட்டன.


மனித நடமாட்டம் குறைவான பகுதி, வாகனங்கள் செல்ல முடியாத பகுதிக்கும் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.


பழங்குடி மக்கள் வசிக்கும் வனப்பகுதிகளுக்கும் கூட கொரோனா தடுப்பூசிகள் சென்றடைந்தன. யாரும் எண்ணியிராத பகுதிக்கும் கூட இந்த தடுப்பூசிகள் சென்று சேர்ந்தன.


நாட்டின் சவாலான பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டன.கோவிட் -19 தடுப்பூசியை வேகமாக கொண்டு செல்ல அனைத்து வகை வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. வேகமாக வான் வழியாக எடுத்துச் செல்ல 'ட்ரோன்'களும் தடுப்பூசி எடுத்துச் செல்லும் பணிக்கு உதவின.


அதிவிரைவான இந்த போக்குவரத்தால் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் வேகமாக மக்களை சென்றடைந்தன.


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்ட் தவிர மூன்றாவதாக ரஷ்யாவின் 'காமாலயா' ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த ஸ்புட்னிக்- - வி தடுப்பூசிக்கு கடந்த ஏப்ரல் 13ம்தேதி மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்தது.


இந்த ஸ்புட்னிக் -வி தடுப்பூசியை இந்தியாவில் 'டாக்டர் ரெட்டீஸ் லேப்ரட்ரீஸ்' கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தியாவிலேயே தயாரிக்கத் தொடங்கியுள்ளது.


ஒரே மந்திரம்


'இலவச தடுப்பூசி மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி' என்ற பிரசார இயக்கத்தை நாடு தொடங்கியது. ஏழை, -பணக்காரர், கிராமப்புற மற்றும் நகர்ப்புறவாசி என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


நோய் பாகுபாடு காட்டாவிட்டால், தடுப்பூசி செலுத்துவதில் எந்த பாகுபாடும் இருக்காது என்பதே நாட்டின் ஒரே மந்திரமாக இருந்தது.


தடுப்பூசி திட்டத்தில் முக்கியப் பிரமுகர் கலாசாரம் ஒதுக்கப்பட்டு அவரவர் வரிசை வரும் வரை காத்திருந்து, அதேசமயம் சரியான நேரத்தில் கிடைக்கவும் உறுதி செய்யப்பட்டது


இதைத் தொடர்ந்து திறன்மிக்க தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 3 வெளிநாட்டு மருந்து நிறுவனங்களுக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியது.


அமெரிக்காவின் 'மார்டர்னா, ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன், ஜைடஸ் கெடிலா' ஆகிய தடுப்பூசிகளை அவசர காலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்து.இந்த நிறுவனங்கள் நவம்பர் மாதத்திலிருந்து உற்பத்தியை தொடங்க உள்ளன.


கடந்த ஜூன் 29-ம் தேதி அமெரிக்காவின் 'மார்டர்னா' கொரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. 'எம்.ஆர்.என்.ஏ., -1273' ரகத்தைச் சேர்ந்த இந்த தடுப்பூசி இந்தியாவில் புழக்கத்துக்கு வரும் 4-வது தடுப்பூசி.


சாதனை நாயகன்


ஆகஸ்ட் 7-ம்தேதி அமெரிக்காவைச் சேர்ந்த 'ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன்' நிறுவனத்தின் சிங்கிள்டோஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் தயாரித்த இந்தத் தடுப்பூசி ஒருமுறை மட்டுமே செலுத்திக் கொள்ளும் தடுப்பூசியாகும்.


இந்தியாவில் அடுத்ததாக ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் சார்பில் ஜைகோவ்-டி தடுப்பூசிக்கும் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 20ம்தேதி மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.


உலகிலேயே பிளாஸ்மாடி அதாவது டி.என்.ஏ., தடுப்பூசி என்ற பெருமையும் ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு உண்டு. இதற்கு முன் இருந்த தடுப்பூசிகள் 2 டோஸ் கொண்டவை, ஆனால், இந்த தடுப்பூசி 3 டோஸ் கொண்டது.


உலக நாடுகள் தடுப்பூசிக்கு எதிர்பார்த்த காலம் கடந்து, எங்களாலும் முடியும் என்று இந்தியா சாதித்துள்ளது.


கடந்த 2021, ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான வலுவான தடுப்பூசிப் போர், 10 மாதங்களுக்குள் நாட்டில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி வரலாற்று மைல்கல்லை நம் பாரத தேசம் எட்டியுள்ளது.


இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடுவதற்காக தடுப்பூசி மையங்களுக்கு செல்வார்களா? என்பது போன்ற கேள்விகள் ஒரு காலத்தில் எழுப்பட்டது. உலகில் உள்ள வளர்ச்சியடைந்த பெரிய நாடுகளில் கூட தடுப்பூசி பற்றியத் தயக்கம், தற்போதும் பெரும் சவாலாக உள்ளது.


ஆனால் இந்திய மக்கள், 100 கோடி தடுப்பூசி செலுத்தி எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என, இன்று நிருபித்து விட்டனர்.

தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அதனை உலகிற்கே முன் மாதிரியாக கொண்டு சென்று இன்று சாதனை நாயகனாக நிற்கிறார் நம் பிரதமர் நரேந்திர மோடி.


உலகமே இன்று பாரதத்தின் இந்த மகத்தான சாதனையையும், பிரதமர் மோடியின் உறுதியையும் பாராட்டி கொண்டாடுகிறது. உலக சுகாதார அமைப்பு தொடங்கி உலகின் பல நாட்டு தலைவர்களும் இந்த சாதனையை எண்ணி எண்ணி வியக்கிறார்கள்.


'முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்' என்பது வள்ளுவன் வாக்கு.


நாட்டையாளும் ஆட்சியாளனாகிய மன்னவன் கற்றறிந்து, செங்கோலாட்சி புரிந்து, பகிர்ந்துண்டு, தக்க நெறியில் பொருள் சேர்த்து, சீரிய திட்டங்கள் வகுத்து, நல்லியல்புடைய அமைச்சரவையோடு கூடியிருந்து தம் ஆட்சித்திறத்தால் பொருள் வழங்கி நல்லாட்சி தருபவனாக இருத்தலே நலமுடையதாகும்.


காக்க வந்த இறை


இத்தகைய நெறிமுறைகளை உணர்ந்து ஆட்சி செய்பவரை மக்கள், நல்லாட்சியாளர் எனக் கருதுவதோடு மட்டுமல்லாமல் ஒரு படி மேலே சென்று இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுவர் என்கிறது திருக்குறளின் அரசியல் நெறி.ஆம்... உண்மை தான்.


மக்கள் துயரங்களை உணர்ந்து மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என பணியாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடியையும் நம் தேசத்து மக்கள் நல்லாட்சியாளர் எனக் கருதுவதோடு மட்டுமல்லாமல் ஒரு படி மேலே சென்று பாரத தேசத்தை காக்க வந்த இறை என்ற போற்றுகின்றனர்.


'நம்மைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பதற்கு அனைவரையும் ஓரணியில் கொண்டு செல்வது என்பது தான் பொருள்' என பிரதமர் நரேந்திர மோடி கூறுவது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.


கிண்டல் செய்தவர்களுக்கும், கேலி பேசியவர்களுக்கும் கூறும் பதில் இது தான்... எங்கள் பாரத தேசத்து மக்களால் முடியும். எம் தேசத்து பிரதமர் நரேந்திர மோடியால் முடியும்.


இந்த சாதனையும் உடைத்து அடுத்த சாதனை படைக்கவும் இந்திய திருநாட்டுக்கு வலிமை உண்டு.

எல்.முருகன், மத்திய இணைய அமைச்சர்


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷