25 வயது முதல் கலர் கலர் கனவுகளுடன் வாழும் பிள்ளைகளுக்கு,கல்யாணம் கனவாகவே ஆகிவிட்டதோ? படித்த! நல்ல வேலை, நல்ல குடும்பம், சொந்த வீடு, அழகு, அறிவு, என எல்லாம் இருந்தும் ..பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்க வில்லை என்பதுதான் நிதர்சனம். திருமணம் ஆகாமல் நொந்து நூடுல்ஸ் ஆன பிராமண குடும்பங்களை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
"கல்யாணம் கனவானதோ?"!!
25 வயது முதல் கலர் கலர் கனவுகளுடன் வாழும் பிள்ளைகளுக்கு,கல்யாணம் கனவாகவே ஆகிவிட்டதோ?
படித்த! நல்ல வேலை, நல்ல குடும்பம், சொந்த வீடு, அழகு, அறிவு, என எல்லாம் இருந்தும் ..பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்க வில்லை என்பதுதான் நிதர்சனம். திருமணம் ஆகாமல் நொந்து நூடுல்ஸ் ஆன பிராமண குடும்பங்களை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
இந்த கால பெண்கள் நிறைய படிக்கிறார்கள், நல்ல வேலை, பதவி, சம்பளம் என உயரத்தில் இருப்பது அருமையான விஷயம், வரவேற்கதக்கதுதான், அதனால் திருமணம் என்பது அவர்களின் சாய்ஸாக இருக்கிறது.தன்னை விட அதிகம் படித்த, நிறைய சம்பாதிக்கும் வரன்,மற்றும் அவர்களுக்கு பிடித்த வரன்களைத்தான் சில பெண்கள் 'டிக்' செய்கிறார்கள்.!
காதல், கத்திரிக்கா என ஜாதி மதம் தாண்டி பல பெண்கள் போய்விடுகிறார்கள்.
பெண்ணைப் பெற்ற பல பெற்றோர்களுக்கு எஞ்சினியர் , M.S பையன், அமெரிக்க மாப்பிள்ளைதான் வேண்டும்..
அப்படியென்றால்?....இங்கு இருக்கும் டிகிரி படித்த, நல்ல பிள்ளைகளை யார் திருமணம் செய்து கொள்வது? அமெரிக்க மாப்பிள்ளையா? வேண்டாம்பா!
என்றும் பல பெண்கள் கூறுவதால்!
அமெரிக்க பிள்ளைகளுக்கும், இந்தியப் பெண்கள் தட்டுப்பாடு.
"35 வயதாகியும் திருமணமாகாமல் பிள்ளைகள் தேங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.பிள்ளையை பெற்றவர்கள் தான் "மெட்ரமோனியலில்" பதிவு செய்து காத்திருக்கிறார்கள்...பெண்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது அந்த ஆயிரத்தில் ஒருவரை சாய்ஸ் சாக தேர்ந்தெடுக்கிறார்கள்.இப்படித்தான் ஆயிரத்தில் 10 பேர்களுக்கு திருமண பாக்கியம். இதுதான் உண்மை.
"அப்படியே 'நிச்சியதார்த்தம்" நடந்தாலும்,
கல்யாணம் வரை செல்லாமல், 'நிச்சியத்துடனே' நின்று போகிறது.
ஆயிரம் காலத்து பயிர் கல்யாணம்!....நடந்த ஆறு மாதங்கள் தாங்குவதில்லையே! அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப் பட்டது இப்போது வீட்டுக்கு வீடு, குடும்பத்துக்கு குடும்பம் வாசப்படி போய் கோர்ட் படி தான்
இதெல்லாம் நடக்கிறதா! இல்லையா?...
பிள்ளைகளையும் பிள்ளைகளின் பெற்றோரையும் சபிக்கும் சாடும் பெண்ணை பெற்றொர்கள் ஒரு புறம்
ஐய்ய! அந்த பெண்ணா? கருப்பா,குட்டையா,இருக்குமே அதுவா? சமர்த்தே போதாது,வீட்டு வேலை,சமையலும் தெரியாது,பொண்ணுக்கு ஒன்னுமே சொல்லித் தராத தாயார் குடும்பம் சுமார் தான் சொந்த வீடு இல்லை வேண்டாம் வேற பொண்ண பாருங்கோ தரகரே...இப்படி பலவாறு பேசிய பிள்ளை, பெற்றோர்கள் ...இப்படித்தான் இருந்தது அந்த காலத்தில்
God is made all of us equal
Women are superior,because we can give birth to a child 😘
பெண்ணையோ பிள்ளைகளையோ,பெண்ணின் பெற்றோர்களையோ,பிள்ளையின் பெற்றோர்களையோ ஒருவருக்கொருவர் சாடுவது, குறைக் கூறுவது வேண்டாமே
"என் கூட வேலை பார்க்கும் தோழிக்கு அருமையான வரன் என அவள் பெற்றோர் பார்த்த வரனையே திருமணம் செய்து கொண்டாள்..பேங்க் வேலை என்றதும், எதையும் விசாரிக்கவில்லை..விசாரிப்பது பிள்ளை வீட்டிற்கு தெரிந்து தப்பாகி விடுமே என்பதும் ஒரு காரணம்.திருமணமாகி 3 வது நாள் தெரிந்தது..பேங்க் ஸ்டாப்பிற்கு காபி டீ போடும் வேலை. சரி தலை எழுத்து குடும்பம் நடத்துவோம், என என் தோழி நினைத்தாள் ஒரு நாள் தன் கணவனிடம்" ஏன் இப்படி ஏமாற்று வேலை என கேட்க" பெண்களுக்கு திமிர் அதிகம், உன் போல் வேலை செய்யும் பெண்களை அடக்க இப்படித்தான் எல்லா ஆண்களும் பொய் சொல்லி அடிக்கனும்! கஷ்டப்படுத்தனும், எப்படி எங்க ப்ளான்?என எகத்தளமாக பேச!, திருமணமான ஒரே வாரத்தில்...அம்மா வீடு வந்து விட்டாள் பெண்....இப்படியும் சில குடும்பங்களில் ஏமாற்றுபவர்கள் உண்டு .( 'இது 25 ஆண்டுகளுக்கு முன்பு) ...அது அந்த காலம்,..ஆனால், இந்த எகத்தாள பேச்செல்லாம் இந்த கால பெண்களிடம் நடக்காது. பையனைப் பற்றி ஆதியோடந்தமாக கூகுளில் ஆராய்ந்து விடுகிறார்கள்.!..அதனால்
"இப்பொதெல்லாம் பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் பேசுவதேயில்லை....பயப்படுகிறார்கள்..... எப்படியாவது....பிள்ளைக்கு கல்யாணம் ஆனால் போதும் என இவர்களின் மன உளைச்சலில், பெண்ணை பெற்றவர்களுக்கு நமஸ்காரம் செய்யவும் தயார். உள்ளுக்குள் மருகுகிறார்கள் பிள்ளையை பெற்றவர்கள்.
"அட!!! இந்த பெண்கள் எப்படியெல்லாம் மாறி விட்டார்கள்!
கேள்விப்பட்டதும், நெஞ்சு பதறுகிறது!
"அப்பா அம்மா இல்லாத பிள்ளை, தனியாளான அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தவன், அவன் அத்தை அவனுக்கு பெண் பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய...
"பிள்ளையிடம் பேசனும்"!! என கூறிய பெண், சொன்னது என்ன தெரியுமா?" "திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் தான் "ஓல்ட், அண்ட்எக்ஸ்ட்ரா லக்கேஜ்" நம் கூட வேண்டாம், தனியாக இருக்கட்டும்" என கூற... அதிர்ந்து விட்டான் பிள்ளை."எக்ஸ்ட்ரா லக்கேஜ்" என கூறியது அவனை வளர்த்த அத்தையை!. பெரிய கும்பிடாக போட்டு கிளம்பி விட்டான்."
"இந்த மாமாவிற்கு நன்கு படித்த அழகான மூன்று பெண்கள்...உடம்பு சரியில்லாமல் இருந்த மாமி திடீரென இறந்து விட ..ஒரு வருடத்தில் முதல் பெண்ணிற்கு திருமணம் முடிக்க, கஷ்டப்பட்டு தேடி , அருமையான பிள்ளையை பார்த்து நிச்சியதார்த்தம் செய்தார்,
திருமணம் நிச்சியம் ஆனதும் இருவரும், பார்க் ஓட்டல், சினிமா என போய் பேசி மகிழ்ந்தார்கள். திருமணத்திற்கு 15 நாட்களே இருந்த பொழுது, பெண்ணின் தாயாருக்கு முதல் வருட திவசம், கல்யாண பிள்ளையையும் அழைத்ததினால தன் தோழன் இருவருடன் பெண் வீட்டிற்கு வந்திருந்தான்.திவசமும் முடிந்தது...பாபா பக்தர்களான அக் குடும்பத்தினர் மிக அருமையாக பாபா பஜனை செய்து முடித்தனர்.
மறு நாளே அப் பிள்ளையை வேண்டாம் எனகூறி விட்டாள் பெண்.என்ன காரணம் என எதுவும் கூறவில்லை..மூன்று பெண்களை பெற்றவரின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்.
பிறகு தான் தெரிந்தது , பாபா படத்தையும் பெண்ணின் தாயாரையும் பார்த்து பிள்ளை தன் தோழர்களுடன் சேர்ந்து விளையாட்டாக பேசி, கேலி செய்து சிரிக்க, இதை கேட்ட பெண்!!, பயங்கர கோபமாகி , திருமணத்தையே ரத்துசெய்து விட்டாள்... பாவம் பையன்,வாயால்,வார்த்தையால், வாழ்க்கையை தொலைத்த கதை ...நடந்த உண்மை".
"ராசி, கோத்ரம், என பக்காவாக பொருத்தம் பார்த்து பெரியவர்கள் நிச்சயத்த திருமணம். ஒரு வாரம் இருந்தது திருமணத்திற்கு, மாப்பிள்ளை அழைப்பிற்காக 'ஷு' வாங்க, பெண்ணும் பிள்ளையும் கடைக்கு போனார்கள், 'மெஷரிங் ஸ்டேண்டில்' காலை வைத்து பிள்ளை "சைஸ்" பார்க்க,...பெண்ணிற்கு திகைப்பு "என்ன உங்க காலில் வெள்ளை தழும்பு" என கேட்க " அது சிறு வயது முதல் காலில் மட்டும் இருக்கு, 'பரவாது! என கூறியதை ஒன்று விடாமல் தன் அப்பாவிடம் கூறி விட்டாள் பெண்....பெண்ணின் தந்தை இரண்டே நாளில் கல்யாணத்தையே!நிறுத்தி விட்டார்!பிள்ளையை பெற்றோர் இது சாதாரண தழும்பு தான், என டாக்டரின் ரிபோர்ட் காண்பித்து காலில் விழுந்து நமஸ்கரித்து, திருமணத்தை நடத்த கூற.."ஏன்? எங்களிடம் இதை மறைத்து விட்டீர்கள் " என கூறி.... பயங்கர திமிராக பேசி திருமணத்தை நிறுத்தினார் பெண்ணின் தந்தை.. ஏற்பாடு செய்திருந்த மண்டபம்,பரிசாரகர், பத்திரிகை, என ஏகத்திற்கு பணம் 'வேஸ்டா'னதைப் பற்றிக் கவலையே படவில்லை. இப்படிப்பட்ட பெண்ணை பெற்ற பெற்றோர்களிடம் சமாதானாம் பேசவே பயமாக இருக்கிறது" ஒரே வார்த்தை" உங்க பெண்ணுக்கு இப்படிப்பட்ட வரனை முடிப்பீர்களா? என பேச்சும் வாங்கினேன்.ம்ம்ம்ம்
"நிச்சயதார்த்தம் முடிந்த அன்றே பெண், பிள்ளையிடம் போட்ட கண்டீஷன் என்ன தெரியுமா?
"நமக்கு குழந்தை வேண்டாம்" என்று.!!"....சரி இப்போது வேண்டாம் ,இரண்டு அல்லது மூன்று வருஷம் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என கூலாக பையன் கூற...
நோ' ...எப்போதும் எனக்கு குழந்தை வேண்டாம் என அவள் கூற!!!! Ok குழந்தையை 'தத்து' எடுத்து வளர்க்கலாமா? "எனக்கும் என் பெற்றோர்களுக்கும், குழந்தைகள் மீது ஆசை"! என பையன் பரிதாபமாக கேட்டுள்ளான்,
'நோ வே' எப்பொழுதும் நாம் இருவர் நாமே இருவர்,!! என இவள் கறாராக
கூற...போடி,போ! என, நிச்சியம் செய்த அன்றே நிச்சியமாக நிச்சியதார்த்தம் நின்று போனது" பிள்ளை வேறு பெண்ணை திருமணம் செய்து,அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்...பெண்ணின் பெற்றோர் 44 வயது பெண்ணுடன் கண்ணீருடன் காலம் கழிக்கின்றனர்.
"பெண், பிள்ளை, பெற்றோர்கள் சம்மதத்துடன்...திருச்சி பெண்ணிற்கும், டெல்லி பிள்ளைக்கும் திருமணம் நடந்தது,
டெல்லியிலிருந்து பெண்ணை மறுவீடு அழைத்து சென்ற பெண்ணைப் பெற்றோர், பிறகு பெண்ணை கணவனுடன் குடித்தனம் நடத்த டெல்லிக்கு அனுப்பவேயில்லை! அழகான, அறிவான, அமைதியான, எஞ்சினியர் பிள்ளை, நல்ல வேலை, சம்பளம்,ஒரே பிள்ளை
"என்னதான் வேண்டும்? உங்க பெண்ணிற்கு என கேட்க....டெல்லி பிடிக்கலை, பாஷை புரியலை, என ஏதோ சப்பை காரணம் சொல்லி...டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி விட்டனார். ஆறே நாட்களில் "ஆயிரம் காலத்து பயிர்" கருகி விட்டது".இதற்கு இரு தரப்பிலும் ஆயிரம் காரணங்கள் அவரவர்களுக்கு சாதகமாக கூறினாலும் கல்யாணம் ஆகாமல் அடிபடுவது இரு குடும்பங்கள் தான் பெண்ணும் ஆணும் தான்.
"நல்ல ஆச்சாரமான குடும்பத்து பெண் அமைந்ததில், பிள்ளையை பெற்றவர்கள் சந்தோஷத்தில் திளைத்தனர்...திருமணம் ஆன மறுநாளே பெண் கணவனிடம் கூறியது" என் சம்பளம் என்னது, உன் பணம் உன்னது!! என் விஷயத்தில் தலையிடக்கூடாது!!
"நான் சோஷியல் ட்ரிங்க்கர்,!பார்ட்டிக்கு போய் சில நாட்கள் இரவு வர மிக லேட்டாகும்..முன்பு ஆபீஸ் விஷயமாய் அமெரிக்காவில் இருந்ததால் "நான் வெஜ்" பழக்கமும் இருக்கு, So, இதற்கெல்லாம் நீ Ok சொன்னால் சேர்ந்து வாழலாம், இல்லையெனில் Bye என மனைவி கூறியதை கேட்டதும் விக்கித்து விட்டான் பிள்ளை....பெண்ணை பெற்றோர்களுக்கு அவளின் பழக்க வழக்கம் எதுவும் தெரியாது பாவம்.
கல்யாணம் செய்துக் கொண்டு பழி வாங்குகிறார்களா படித்து சம்பாதிக்கும் தைரியமான பெண்கள்". புரியலை தலையை சுத்தறது...இப்படி நடப்பதும், நடந்ததும் மிக சில இடங்களில் தான்....பிராமண குடும்பத்து பெண், பிள்ளைகள் ஒழுக்கமாகவே வளர்கிறார்கள்,வளர்க்கப்படுகிறார்கள்.....இப்படி இருக்காதீர்கள் என பெண்ணுக்கும்,அப்படி பேசாதீர்கள் என என ஆணுக்குமே இது எச்சரிக்கை கூற்று.
"பல இடங்களில்,
பிள்ளையின் ஜாதகத்துடன் 'மெடிக்கல் சர்டிபிகேட்டும்'! இணைக்க சொல்கிறார்கள்...அது மட்டுமா? பெண்ணைப் பெற்ற ஒரு மாமா கூறியது " Impotent" test டும் செய்து, 'Attach' செய்வது மிக அவசியம் மாமி!
"ஐயோ!! ஆண்களுக்கு ஏன் இந்த சோதனை?...பாவம்மா பிராமண ஆண் பிள்ளைகள்...கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் பெண்களே!!
"அருமையான,அழகான,பண்பான எங்கள் செல்ல பெண்களே!
உங்களுக்கும் காலா காலத்தில் கல்யாணம் செய்து அழகு பார்க்க எங்களுக்கும் ஆசையிருக்காதா?
நம் வீட்டிற்கும் அருமையான மறுமகள் வர எங்களுக்கும் மிக ஆவல்.....ப்ளீஸ் பெண்களே உங்களிடம் அனைத்து தாய்மார்களின் சார்பாக கெஞ்சி கேட்கிறேன்...குட்டி குட்டி விஷயத்திற்காக கோபப்படாமல்,நிறை குறைகளுடன் கல்யாணத்திற்கு சம்மதியுங்களேன்!!!கொஞ்சம் விட்டுக்கொடுங்களேன்....😍😍ப்ளீஸ், ப்ளீஸ்.
பிள்ளையை பெற்ற தாய்மார்களே...."நாங்க எல்லாம் எப்படி இருந்தோம் தெரியுமா? அம்மா அப்பா பார்த்த பையனைத்தான் கல்யாணம் பண்ணின்டோம், மாமனார் மாமியார் எதிரில் எதுவும் பேச மாட்டோம், ஏன் உட்கார கூட பயம், நாளுங்கிழமையில் மாங்கு மாங்குன்னு சமைப்போம் ஒரு பார்க் பீச் சினிமா,ஓட்டல் உண்டா....என புலம்பாதீர்கள்
நீங்க ஆசைப்பட்டு அனுபவிக்க முடியாததை உங்க நாட்டுப் பெண் அனுபவிக்கட்டுமே ப்ரீயா விடுங்கோ மாமி...நம் பிள்ளைக்கு கல்யாணம் செய்யும் காரணம் எதற்கு? அவன் சந்தோஷமாக மனைவி குழந்தைகளுடன் குடும்பம் நடத்ததானே, நீங்க எல்லா விஷயத்திற்கும் குறுக்கே புகுந்து குட்டையை குழப்பாதீங்க அவர்கள் போக்கில் விடுங்க ..அவர்களே அருமையா ஒத்துமையா குடும்பம் நடத்துவார்கள்...நீங்க கண் குளிர பார்த்து சந்தோஷப் படுங்க....
நம் குழந்தைகள் தினப்படி விரும்பி சாப்பிடும் பழங்களையே,அவர்களுக்கு பிடித்ததா நல்லதா,ஓட்டையில்லாததா,சுவையானதா,பார்த்து பார்த்து வாங்கி தரும் பெற்றோர்கள் ...திருமணம் எனும் வாழ்க்கை பந்தத்தில் குழந்தைகள் ஈடுபட நல்ல பெண்,நல்ல பிள்ளையா நல்ல குடும்பமா தேர்தெடுப்பதில் தவறில்லையே....So நல்ல சத்புத்ரனாக பிள்ளைகளை நல்ல குணவதியாக பெண்களை வளர்த்து திருமண பந்தத்தில் ஒன்று சேர்ந்து தித்திக்கும் கனிகள் போல் வாழ்க்கை நடத்த... ஆலமர விழுதுகள் போல் விரிந்து படரும் பேரன் பேத்திகளுடன் நம் வாழ்க்கையும் தித்திக்க வாழ்வோம்.
ராதா நரசிம்மன்
Comments
Post a Comment