தாடிக்காரர் அந்த குத்தூசியால் அவன் விரல்களின் நகக்கணுக்களில் குத்தினார். ஊசி அவன் நகக்கணுவில் ஆழமாக இறங்கிற்று. அந்த இளைஞன் எவ்வித சலனமுமின்றி நின்றிருந்தான். அவர் அவன் புறங்கையின் நடுவே ஊசியால் ஓங்கிக் குத்தினார். ஊசி புறங்கை வழியே நுழைந்து மறுபக்கம் வெளிவந்தது. அவனிடமிருந்து சின்ன முனகலோ அல்லது அவன் முகத்தில் வலியின் அவஸ்தையோ எதுவுமில்லை. அவனது கரத்திலிருந்து பொங்கிய குருதி கீழேயிருந்த அலங்கார விரிப்பில் சிந்தி அதில் படர்ந்து, அதனால் உறிஞ்சப்பட்டது.

 


சாவதற்கஞ்சேல் 

(வித்யா சுப்ரமணியம்)


“உன்னால் முடியுமா?”

 

“முடியும்”

 

“சின்னப் பையனாக இருக்கிறாயே”

 

“வயதில் என்ன உள்ளது? கண்டிப்பாக என்னால் முடியும்”.

 

“இது மிகப்பெரிய காரியம். இதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும். ஒருவேளை பிடிபட்டுவிட்டால், போலீசார் உன்னை சித்ரவதை செய்வார்கள். அவர்களது சித்ரவதைகள் தாங்காமல் நீ உண்மையைச் சொல்லமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?” கேட்டவர் நீண்ட கருந்தாடியுடன் திடகாத்திரமாக இருந்தார். இடுப்பில் இறுக்கிக் கட்டப்பட்ட கதராடை. மேலே போர்த்திய துண்டு. நெற்றியில் பிறைச்சந்தனம். 

  

“என்னை நம்புங்கள். உயிரே போனாலும் நான் உண்மையைச் சொல்லமாட்டேன். யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டேன். தயவுசெய்து எனக்கிந்த வாய்ப்பைக் கொடுங்கள்” அவன் அந்த அறையிலிருந்த இருவரையும் மாறிமாறிப் பார்த்து நேருக்குநேர் அவரைப் பார்த்து கேட்டான். அவர் அவனையே சில வினாடிகள் பார்த்தார். 


“முதலில் என் சோதனையில் நீ வெற்றி பெற்றால் உன்னை நம்புகிறேன்” 


“எந்தவிதமான சோதனைக்கும் நான் தயார். ஆனால் என் உயிரைமட்டும் இப்போதைக்கு கேட்காதீர்கள். இந்த வேலையை நான் வெற்றிகரமாக முடித்துவிடுகிறேன். பிறகு என் உயிர் எனதல்ல”


அவர் புன்னகைத்தார். பிறகு தன் மேஜையின் இழுப்பறையைத் திறந்து எதையோ எடுத்தார். அவனருகில் வந்தார். அவர் கையில் ஒரு கூர்மையான குத்தூசி இருந்தது. அதை அவனிடம் காட்டிவிட்டு, அவன் கரத்தைப் பிடித்து தூக்கினார். அவன் எல்லாவற்றிற்கும் தயார் என்பதுபோல் நெஞ்சு நிமிர்த்தி உறுதியாக நின்றான். 


தாடிக்காரர் அந்த குத்தூசியால் அவன் விரல்களின் நகக்கணுக்களில் குத்தினார். ஊசி அவன் நகக்கணுவில் ஆழமாக இறங்கிற்று. அந்த இளைஞன் எவ்வித சலனமுமின்றி நின்றிருந்தான். 


அவர் அவன் புறங்கையின் நடுவே ஊசியால் ஓங்கிக் குத்தினார். ஊசி புறங்கை வழியே நுழைந்து மறுபக்கம் வெளிவந்தது. அவனிடமிருந்து சின்ன முனகலோ அல்லது  அவன் முகத்தில் வலியின் அவஸ்தையோ எதுவுமில்லை. அவனது கரத்திலிருந்து பொங்கிய குருதி கீழேயிருந்த அலங்கார விரிப்பில் சிந்தி அதில் படர்ந்து, அதனால் உறிஞ்சப்பட்டது. 


அவர்கள் இருவரும் அயர்ந்து போனார்கள்.


இப்படியொரு உறுதியான இளைஞன்தான் வேண்டும் அவர்களுக்கு. 


“வேறு சோதனைகள் ஏதேனும் உள்ளனவா?” அவன் கேட்டான். 


தாடிக்காரர் அவனை அணைத்துக்கொண்டார். போதுமப்பா என்றபடி அவனது கரத்திற்கு மருந்திட்டு கட்டுப்போட்டார். 


அவர்களிருவரும் அவனோடு நிறைய பேசினார்கள். தாடிக்காரர் மறுநாள் முதல் அவனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தார். அவன் கற்பூரமாக இருந்தான். துரோணருக்கு கிடைத்த அர்ஜுனனாய், குறிபார்த்து சுடுவதில் பெரிய திறமைசாலியாக இருந்தான். 


“ஜூலை ஒன்று. மறந்துவிடாதே” என்றார்கள் அவர்கள். 

“அதற்குத்தானே நானும் காத்திருக்கிறேன்” என்றது அந்த இளஞ்சிங்கம். 

 

*******************  

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு.  பெற்றோர் அவனை பொறியியல் மேல்படிப்பிற்காகத்தான் இங்கு அனுப்பினார்கள் என்றாலும். தான் இங்கு வந்த காரணம் எதற்கென்று அவனுக்குப் புரிந்துவிட்டது. எப்பேர்ப்பட்ட பணி இது! பிறந்த தாய்நாட்டுக்காக இதைக்கூட செய்யவில்லையென்றால் இந்த உடலில் ஜீவன் இருந்துதான் என்ன பயன்? இந்த பாரதத்தையும், இதன் புதல்வர்களையும் அடிமைப்படுத்தி இழிவு செய்பவன் எவனாயினும் அவன் எமக்கு பகைவனே! அழிக்கப்பட வேண்டியவனே. எங்கிருந்தோ வந்து கள்ளத்தனமாக இம்மண்ணில் கால்பதித்து, வெகு நயவஞ்சகமாய் இந்த புண்ணிய தேசத்தையே அடிமைப்படுத்தி, தான் வைத்ததுதான் சட்டம் என்று எம்மக்களை ஆட்டிப்படைக்கும் ராட்சஸர்களில் ஒருவனையேனும் ஒழித்துக்கட்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இத்தனைக்கும் அந்த அந்நிய அதிகாரி அப்பாவின் சிறந்த நண்பன் என்பதால் இவனை நன்றாகத் தெரியும் அவனுக்கு. அப்பாவின் நண்பர் என்பதற்காக விஷப்பாம்புகளை விட்டு வைக்கவா முடியும்?

 

இன்னும் சில நாட்களே உள்ளன. மதங்கொண்ட யானை ஒன்றை அதன் இருப்பிடத்திலேயே கொன்று வீழ்த்தப்போகிறேன். அதன்பின் இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே அலறும். இங்கே விழும் அடி, அங்கே இந்திய மண்ணில் நின்றுகொண்டு அட்டகாசம் செய்யும் வெள்ளையரையும் வேரோடு அசைக்கவேண்டும். அவர்களது ஈரல்குலை நடுங்கவேண்டும். இனி என் தேசத்து மக்கள் மீது கை வைத்தால் என்ன நடக்குமென்று அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இதுவும் ஒரு குருஷேத்திர யுத்தமே. தனக்கு உரிமையற்ற தேசத்தை அடிமைப்படுத்தி அந்த தேசத்தின் மக்களைக் கொன்று குவிக்கும் சர்வாதிகார கும்பலை திருப்பித் தாக்குவதில் தவறேயில்லை. நான் இன்று செய்வது நாளை என் போன்ற இளைஞர்களையும் எழுச்சிகொள்ள வைக்கட்டும். பசுக்கள் ஒன்றுசேர்ந்து வீறுகொண்டெழுந்தால், சிங்கங்கள் குற்றுயிரும் குலையுயிருமாய் வீழாதோ?


சிலர் சொல்லுவார்கள், என் அப்பா உயிர்காக்கும் மருத்துவன், அவரது பிள்ளையான நான் உயிரெடுக்கும் கொலைகாரனென்று. சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். புற்றுநோய்க் கட்டியினை அறுத்தெறிவது எப்படி கொலையாகும்?

 

***************** 

ஜூலை ஒன்றாம் தேதி மாலை அவன் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே மிடுக்காக கோட்டும் சூட்டும் அணிந்து கம்பீரமாக கிளம்பி ஜஹாங்கீர் மாளிகையை அடைந்தான். இம்பீரியல் இன்ஸ்ட்டிடியூட்டின் இந்திய தேசீய சங்கத்தின் ஆண்டுவிழா கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் துவங்க இருந்தது. பிரிட்டிஷ் அரசின் விசுவாசமிக்க இந்திய மாணவர்களைக் கொண்ட ஒரு அமைப்பு அது. இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ள, பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இந்திய விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் இந்தியா மந்திரியின் நேர்முக ஆலோசகர் ஒருவரே இன்று அவனது இரை. அவன் தன் கோட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். ஆறு தோட்டாக்கள் லோட் செய்யப்பட்டு அதுவும் தயாராக இருந்தது. ஆங்கிலேய அரசு செய்திருக்கும் குற்றங்களுக்கு ஆறு தோட்டாக்கள் போதாதுதான். 

பேண்டு வாத்தியங்கள் முழங்கின. பிரிட்டிஷ் அரசுக்கு விஸ்வாசமிக்க இந்திய அடிமை மாணவர்கள் அபரிமிதமான மரியாதையுடன் அவனது இரையை வரவேற்று அழைத்து வருவதை ஓரக்கண்ணால் கண்டான். அவனது கரம் கோட் பாக்கெட்டைத் தடவியது.

 

இந்திய மாணவர்கள் காட்டிய அபரிமிதமான மரியாதையில் அந்த வெள்ளை அதிகாரியின் மிடுக்கும் கர்வமும் கூடிற்று. தன்னை வரவேற்றவர்களுக்கெல்லாம் கரம் கொடுத்து நலம் விசாரித்தபடி பட்டத்து யானை போல அந்த அதிகாரி மெல்ல நடந்து வந்தான். அவனது பார்வை முன்வரிசையில் நின்றிருந்த அந்த இளைஞனின் மீது ஒருவினாடி படிய, அவனது முகம் சட்டென மலர்ந்தது.


“ஹாய்.. மை டியர் ஜூனியர் பிகாரிலால் யு ஆர் ஹியர்? உன்னை அடிக்கடி கண்காணித்து நல்லமுறையில் படிக்கும்படி உனக்கு புத்தி சொல்லுமாறு உன் தந்தை எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார். நீ எப்படி இருக்கிறாய்? நன்றாகப் படிக்கிறாயா?”

கர்ஸான் வில்லி என்ற அந்த வெள்ளை அதிகாரி, மதன்லால் டிங்ரா என்ற அந்த இளைஞனின் தோளைத் தட்டி புன்னகையோடு விசாரித்தான். 


ஆஹா ! நன்றாக இருக்கிறேன். நன்றாகக் கற்றேன். நான் கற்ற வித்தையை முதன்முதலில் உன்னிடம்தான் காட்டப்போகிறேன் என்று மனசுக்குள் நினைத்தவாறு கோட் பாக்கெட்டிலிருந்த ஜெர்மன் பிஸ்டலை எடுத்த அந்த இளைஞன். மின்னல் வேகத்தில் அந்த அதிகாரியை சுட ஆரம்பித்தான். 


மாணவர்கள் அலறினார்கள். அந்த இடமே ஸ்தம்பித்தது. கூச்சலும் குழப்பமும் சூழ்ந்தது. ஐந்து குண்டுகள் கர்ஸான் வில்லியின் முகத்தைத் துளைத்திருந்தது. அதிலொன்று அவன் கண்ணில் பாய்ந்திருந்தது. மதன்லால் டிங்ராவைத் தடுக்க நடுவில் புகுந்த வழக்கறிஞர் ஒருவர் மீது ஆறாவது குண்டு பாய்ந்தது. கர்ஸான் வில்லி என்கிற  கிழட்டு யானை, முகம் சிதைய சுருண்டு கீழே விழுந்து உயிரைவிட்டது. மதன்லால் டிங்ரா என்ற அந்த இளைஞன் தன் மூக்குக் கண்ணாடியை சரிசெய்துகொண்டு வெற்றிப் புன்னகையோடு நெஞ்சு நிமிர்த்தி நின்றான். 


லண்டன் போலீஸ் அவனைச் சூழ்ந்துகொண்டது. அவன் மாஜிஸ்ட்ரேட் முன்பு நின்றான். “கர்ஸான் வில்லியை நான்தான் சுட்டேன். அது என் கடமை ஆனால் அந்த வழக்கறிஞர் நான் சற்றும் எதிர்பாராமல்  குறுக்கே வந்துவிட்டதால் அவர் மீதும் குண்டு பட்டுவிட்டது” என்று அச்சமின்றி கூறினான். ஒரு வார போலீஸ் காவலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மேல்கோர்ட்டுக்கு அனுப்பினார் மாஜிஸ்ட்ரேட். 

 

பிரிக்ஸ்டன் சிறையில் தாடிக்காரரும், அவரது நண்பர்களான தேசபக்தர்கள் சிலரும் அவனை வந்து சந்தித்தார்கள். 


“டிங்ரா உனக்காக நாங்கள் எதையும் செய்யத்தயாராக இருக்கிறோம். உனக்காக வாதாட மிகச்சிறந்த வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்ய உள்ளோம்” .என்றார் தாடிக்காரர். 


“எனக்கு எதுவும் வேண்டாம். இந்த தாய்நாட்டிற்கு என்னால் முடிந்த ஒரு கடமையை நான் செய்துவிட்டேன். அதுபோதும். என்னைப் பார்த்து பல இளைஞர்கள் உத்வேகம் பெறுவார்கள். அவர்கள் முழு மூச்சாக இந்திய சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள். முடிந்தால் எனக்கொரு முகம் பார்க்கும் கண்ணாடி கொடுங்கள். நான் சரியாகத் தலைவாரியிருக்கிறேனா, உடை உடுத்தியிருக்கிறேனா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.” 

 

தாடிக்காரரின் கண்களிலிருந்து நீர் அருவியாய்ப் பொங்கி வழிந்தது. சக்கர வியூகத்தில் நுழைந்த அபிமன்யுவாகவே அவர் கண்ணுக்குத் தெரிந்தான் டிங்ரா. 


“உன் செயல் காட்டுமிராண்டித்தனமானது என்றும், நீ தியாகியல்ல, தத்தாரி என்றும் பைத்தியக்காரன் என்றும் கருதுகின்றனர் உன் அப்பாவும் சகோதரர்களும்”. 


“வெட்கக்கேடு! விஷப்பாம்புடன் நட்பு கொண்டவர்களது வார்த்தைகள் குறித்து நான் ஏன் வருந்தவேண்டும்? அணுவளவேனும் தேசபக்தி அவர்களுக்குள் நுழையும்போது, எனது செயலை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.  என் தேசபக்தியை உணர்வோருக்கும், என்னை எண்ணி பெருமைப்படும் இந்த தேசத்தின் ஒவ்வொரு தாய்மார்க்கும் நான் மகன்தான்". 


அவர்கள் அவனை திகைப்பும், பெருமிதமாகவும் பார்த்தனர். 


விசாரணை நடைபெற்றது. டிங்ரா குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 


“நீ ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?” நீதிபதி கேட்டார்.

 

“ஆம் சொல்ல விரும்புகிறேன். இன்று உங்கள் சாம்ராஜ்யம் பலமாக உள்ளது. எங்கள் நாட்டை அடிமைப்படுத்தி, எங்கள் நாட்டுத் தலைவர்களையும், தேசபக்தியுடன் சுதந்திரத்திற்காக போராடும் இளைஞர்களையும் நாடு கடத்தியும் தூக்கிலிட்டும் கொன்று வருகிறீர்கள். இதற்கெல்லாம் பழி தீர்க்கவே கர்ஸான் வில்லியை உங்கள் நாட்டின்  தலைநகரில் வைத்தே கொன்றேன். நான் கொலைகாரன் என்றால், இந்த ஐம்பது ஆண்டுகளில் சுமார் எட்டு கோடி இந்தியர்களைக் கொன்று குவித்த உங்கள் அதிகாரிகள் எல்லோரும் கொலைகாரர்கள் அல்லாது யார்? எங்கள் இந்தியாவின் செல்வங்களைச் சுரண்டி, இங்கிலாந்திற்கு கடத்திக் கொண்டுவருவது ஒரு கொள்ளைக்காரனின் செயலில்லையா? எனக்கு தூக்கு தண்டனையென்றால் உங்களுக்கெல்லாம் என்ன தண்டனை? என்  தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக நான் போராடுவதைக் குற்றமாகக் காணும்  உங்களிடம் ஒன்று கேட்கிறேன். பதில் கூறுங்கள். ஜெர்மனியின் ஆதிக்க வெறியை நீங்கள் எதிர்த்து போராடவில்லையா? போராடும் உரிமை உங்களுக்குண்டென்றால் அதே உரிமை எங்களுக்கில்லையா? உங்களுக்கிருக்கும் தேசபக்தி எங்களுக்கிருக்கக் கூடாதா? நீங்கள் எங்கள் நாட்டுக்கு செய்த துரோகங்களுக்கு என்றேனும் ஒருநாள் நிச்சயமாக நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள். எங்கள் இளைஞர்கள் எழுச்சியோடு உங்களை எதிர்க்கும் நாள் வெகுதூரமில்லை. உங்கள் தீர்ப்பை நான் ஏற்கிறேன். மேல்முறையீடு எதுவும் நான் செய்ய விரும்பவில்லை. என் தாய்நாட்டுக்காக சந்தோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிடக் காத்திருக்கிறேன்” 


நீதிபதி தன் நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டார்.

 

தூக்கிலிடப்படுவதற்கு முதல்நாள் அவன் எழுதிய அறிக்கை இங்கிலாந்தின் டெய்லி நியூஸ் நாளிதழில் வெளியாயிற்று. 


`பிரிட்டிஷ் அரசின் கொடுங்கோலாட்சிக்கு பதிலடி தரும் விதமாகவே, எங்கள் வங்கத்தை கூறுபோட்ட கர்ஸான் வில்லியின் உயிரை அவர்களுக்கு எனது பரிசாக அளித்தேன். இந்த முயற்சி முழுக்க முழுக்க என்னுடையதே. வேறு எவரோடும் சேர்ந்து நான் சதித்திட்டம் எதுவும் தீட்டவில்லை. அடிமைப்பட்டுள்ள ஒரு நாடு எப்போதும் துடிப்போடு போர்முனையில்தான் நிற்கும். பீரங்கிகள் எங்களுக்கு மறுக்கப்பட்டிருப்பதால், நான் கைத்துப்பாக்கியை உபயோகித்தேன்,. இனியும் எங்கள் இளைஞர்கள் உங்களுக்கெதிராக இதனை உபயோகிப்பார்கள். ஆங்கிலேயர்கள் ஒரு தவறான எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள், படித்த இந்தியர்கள் அனைவரும், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியே நீடிக்கவேண்டுமென்று விரும்புவதாக. அது மிகப்பெரிய தவறென்று அவர்களுக்கு உணர்த்தவேண்டும். இந்திய மக்கள் இப்போது அவசியம் கற்கவேண்டிய ஒரே பாடம் இந்த தேசத்திற்காக எப்படி சாவது என்பதைத்தான். எதிரிகளைக் கண்டு அஞ்சாதீர்கள். உன் எதிரி ஆயுதமேந்தி நிற்பானாயின் நீங்களும் ஆயுதமெடுங்கள். திருப்பித் தாக்குங்கள். அஞ்சியஞ்சி  அடிமையாய் வாழ்வதைக்காட்டிலும் வீரனாகத் தலைநிமிர்ந்து மடியலாம்.’ 


அவன் யாரையும் கடைசிவரை காட்டிக்கொடுக்கவில்லை. சீடர்கள் மடியலாம். ஆனால் அவன்போல் பல்லாயிரம் இளைஞர்களுக்கு வித்தையும் வீரமும் தேசபக்தியும் கற்பிக்கும் துரோணர்கள் இந்த நாட்டிற்கு அவசியமென நினைத்தான் அவன். 


தன் துரோணாச்சாரியாராக அவன் கருதிய  தாடிக்காரர் வ.வெ.சு.ஐயரும், அவரது நண்பர் வீர் சாவர்க்கரும் அவனது படத்திற்கு முன் ரோஜா மலர்களை சமர்ப்பிக்கையில் கட்டுப்படுத்த இயலாமல் அவர்களது கண்கள் கலங்கின.  


*****************


பி,கு. இன்றைக்கு இதனைப் பகிர வேண்டுமென்று தோன்றியது. சங்க இலக்கியச் சிறுகதைத் தொகுப்பில் புறநானூறு பாடல் 277 க்கு  பொருத்தமாக எழுதப்பட்ட சிறுகதை.  இன்று வீர் சாவர்க்கர் பிறந்த தினம். மதன்லால் டிங்ரா  போல் எத்தனையோ இளைஞர்கள் தங்கள் தேசபக்தியின் காரணமாக நம்மை அடிமை கொணடிருந்த  மதங்கொண்ட வெள்ளை யானைகளை அதன் இருப்பிடத்திற்கே சென்று வீழ்த்திவிட்டு, உயிருக்கு அஞ்சாது  தூக்குக் கயிற்றைத் தாங்களும் முத்தமிட்டிருக்கிறார்கள்.  சங்கப்பாடல் வாசிக்க விரும்புகிறவர்கள் முதல் கமெண்ட்டில் வாசிக்கலாம்.

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*