திருச்சிற்றம்பலம்... நான் சென்னை சைதாப்பேட்டை கிளையில் பணிபுரிந்தேன். வாடிக்கையாளர் ஒருவர் என்னிடம் அறிமுகமானார். நடுத்தர வயது; நெற்றி நிறைய விபூதி; சிவப்பழமாக காட்சியளித்தார்.
திருச்சிற்றம்பலம்...
நான் சென்னை சைதாப்பேட்டை கிளையில் பணிபுரிந்தேன். வாடிக்கையாளர் ஒருவர் என்னிடம் அறிமுகமானார். நடுத்தர வயது; நெற்றி நிறைய விபூதி; சிவப்பழமாக காட்சியளித்தார்.
வியாபாரத்திற்காக கார் ஒன்று தேவைப்படுவதாக தெரிவிக்க, அவரது கணக்குகளை ஆராய்ந்தேன். ஏகப்பட்ட வரவு செலவு. லட்சக்கணக்கில் இருப்பு. கடன் கொடுக்க சம்மதித்தேன். ஓரிரு நாளில் தொகை வழங்கப்பட்டது. வண்டியை டெலிவரி எடுத்து விட்டு சந்திக்க வந்தார். ''சார்... இன்னிக்கு சாயந்தரம் காரணீஸ்வரர் கோயிலில் பூஜை! நீங்க வந்து சாவியை எடுத்துக் கொடுக்க வேண்டும்'' என்றார். ஆனால் என்னால் போக முடியவில்லை.
காரணீஸ்வரரை தரிசிக்க முடியவில்லையே என வருத்தம். மறுநாள் பஜாரில் கடைகள் மூடப்பட்டு இருந்தன. விஷயம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். புதிய வண்டியை எடுத்துக் கொண்டு மகாபலிபுரம் சென்ற வணிகரின் மகன் பலியாகி விட்டான். உடனே அவரது வீட்டிற்கு ஓடினேன்.
என்னிடம் அவர் 'திருச்சிற்றம்பலம்' என்ற வார்த்தையை மட்டும் உதிர்த்தார். காரணீஸ்வரர் கோயிலின் தலைமை நிர்வாகி இவர் என்பது அப்போது தான் தெரிய வந்தது அதன் பின் ஒருநாள் என்னைத் தேடி வந்தார். ''என் மகனுக்கு இன்னும் வண்டி ஓட்டும் வயசு வராததால் இன்சூரன்ஸ் பணம் வாங்குவது சிக்கலா இருக்கு' எனத் தெரிவித்தார். ஆனால், கடன் தொகையைக் கட்டினார். 'இப்படி ஒரு நல்ல மனிதருக்கு ஏன் இந்த சோதனை?' என மனம் நொந்தேன். ஓராண்டு கழித்து மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்தது. அவரது மற்றொரு மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான். நான் அவரைப் பார்க்க போகவில்லை. ஆனால் ஒருநாள் அவர் என்னை அழைத்துச் சென்றார்.
அவரது வீடு கலைநயத்துடன் இருந்தது. 'வீடே கோயில் போல இருக்குதே' என வியந்தேன். ஒரு நிமிடம் என்னையே பார்த்தவர், 'கோயில் தான் சார் இது!' என கோவென அழுதார். இந்த இடம் காரணீஸ்வரர் கோயிலின் வெளிப்பிரகாரம். என் முன்னோர்கள் பராமரித்த கோயில் இது. என் நிர்வாகத்தின் கீழ் வந்ததும் எனக்கு கட்சிகளின் சகவாசம் வந்தது. கோயில் நிலத்தில் வீட்டைக் கட்டினேன். கோயிலின் மற்ற நிலங்களையும் ஆக்கிரமித்தேன். உறவினர்கள் சொன்ன அறிவுரையை துாக்கி எறிந்தேன். இப்போது தொடர்ந்து இரு அசம்பாவிதங்கள். வாரிசு இல்லாமல் போனது. நான் விலை கொடுக்க வேண்டிய நேரம் இது தான் போலிருக்கு' என்றார். இதைத் தான் சிவன் சொத்து குல நாசம் என்பார்களோ? பின்னர் பல சந்தர்ப்பம் வாய்த்தும் ஏனோ இன்றளவும் காரணீஸ்வரரை தரிசிக்கவே இல்லை.
வட மாநிலங்களுக்கு பணி மாறுதலாகி மீண்டும் சென்னை வந்த போது அவரைப் பற்றி விசாரித்தேன். சொத்தை எல்லாம் விற்ற அவர், காசியில் தர்ம சத்திரம் கட்டி அங்கேயே இறந்ததாக தெரிந்தது. இவரைப் போல உள்ளவர்கள் எத்தனையோ பேர் இன்றும் நன்றாகத் தானே வாழ்கிறார்கள் என நீங்கள் கேட்கலாம்? ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு நேரம் குறித்திருக்கிறார்! *சிவன் சொத்து குல நாசம்*!
வாட்ஸ்அப் பதிவு
Comments
Post a Comment