அவள் புல் அறுத்துக்கொண்டு இருக்கும் போது ஒரு குழந்தையின் அழு குரல் கேட்கிறது! அவள் பதட்டத்துடன் எங்கிருந்து வருகிறது என்று தேட கொஞ்ச நேரத்தில் அந்த அழுகுரல் நின்று விடுகிறது! சற்று நேரத்தில் மீண்டும் அதே அழுகுரல். ஒரு தென்னை மரத்தில் இருந்து அந்த அழுகுரல் வருவதை கவனிக்கிறாள்! பேய் பிசாசு என்று ஏதாவது இருக்குமோ!
🥹
எங்க ஊர் அருகில் உள்ள ஒரு கிராமம்...
தென்னந் தோப்புகளும் பாக்கு தோப்புகளும்,
மாந்தோப்பு களும் நிறைந்த பகுதி அது!நிலத்தை ஒட்டிய வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்துகொண்டு இருந்தது!
நடுத்தர வயது ஒரு கணவன் மனைவி, பத்து வயதில் பெண் குழந்தை!
ஒரு நாள் அந்த மனைவி வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடுகளுக்கு புல் அறுப்பதற்கு தென்னந் தோப்புக்கு செல்கிறாள்!
அவள் புல் அறுத்துக்கொண்டு இருக்கும் போது ஒரு குழந்தையின் அழு குரல் கேட்கிறது! அவள் பதட்டத்துடன் எங்கிருந்து வருகிறது என்று தேட கொஞ்ச நேரத்தில் அந்த அழுகுரல் நின்று விடுகிறது! சற்று நேரத்தில் மீண்டும் அதே அழுகுரல்.
ஒரு தென்னை மரத்தில் இருந்து அந்த அழுகுரல் வருவதை கவனிக்கிறாள்! பேய் பிசாசு என்று ஏதாவது இருக்குமோ!
மறுநாள்... நாலைந்து முறையாவது அந்த அழுகுரல் கேட்க, பயந்து போய் தன்னுடைய
கணவனுக்கு சொல்கிறாள்! அவன் முதலில் ஏதாவது பிரமையாக இருக்கும் என்று சொல்லி, பெரிதாக பொருட்படுத்தவில்லை.
அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு படுத்த பின், பத்து மணிக்கு மேல் மீண்டும் அந்த குழந்தையின் அழுகுரல் கேட்கிறது! அவன் மனைவி சொன்னதை நம்புகிறான்!
கையில் டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு ...
அவள் வேண்டாம் என்று தடுக்கிறாள்! அவன் தான் தைரியமானவன் என்று சொல்லி தோப்புக்குள் செல்கிறான்! அவளும் பயந்து கொண்டே பின்னால் போகிறாள்!
மீண்டும் அழு குரல் கேட்கிறது!
அதே தென்னை மரம்..
அவன் கீழிருந்தபடி அந்த மரத்தில் மேல் டார்ச் அடித்து பார்க்கிறான்!
அப்போது ஏதோ ஒரு பறவை மரத்திலிருந்து
பறந்து செல்கிறது! அந்த அழுகை குரல் இப்போது நின்று விடுகிறது!
போகலாம் வாங்க என்றாள் மனைவி. இருவரும் வீடு திரும்புகிறார்கள்!
அடுத்த நாள் அவள் தன் அண்ணனுக்கு இந்த தகவலைச் சொல்கிறாள்!
மீண்டும் அழுகுரல் வந்தால் எனக்கு போன் செய்யுங்கள். நான் ஆட்களோடு வந்து பார்க்கிறேன் என்று சொல்கிறான்!
அவள் அந்த தோப்பின் பக்கமே போகாமல் இருக்கிறாள்!
அடுத்த நாள் இரவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது மீண்டும் அந்த அழுகை குரல் கேட்கிறது! அவளும் அண்ணனுக்கு போன் செய்கிறாள்!அவளுடைய அண்ணன் நாலைந்து ஆட்களை அழைத்துக்கொண்டு வருகிறான்!
பந்தங்களுடன் கிளம்புகிறார்கள்! வீட்டில் இருக்கும்போது குறைவாக கேட்கின்ற அந்த அழுகை சத்தம் தோப்புக்குள் செல்லச் செல்ல அதிகமாக கேட்கிறது!
பின் கொஞ்ச நேரத்தில் நின்றுவிடுகிறது!
அந்த குறிப்பிட்ட மரத்தின் மேலே தீப்பந்தத்தை காட்டி சுற்றி சுற்றி பார்க்கிறார்கள்! எதுவுமே தெரியவில்லை! தீயை பார்த்தால் எந்த பேயாக இருந்தாலும் பயந்துவிடும் என்றுகூட்டத்தில் இருந்த நாலு பேரில் ஒருவன் உறுதியாக கூறுகிறான்!
அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மீண்டும் அழுகுரல் சத்தமாக கேட்க ஆரம்பிக்கிறது!
எல்லோருமே பயந்து, அலறிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடி விடுகிறார்கள்!
அடுத்த நாள் ஒரு பெரிய சாமியாரை அழைத்து வந்து அந்த தென்னை மரத்தை சுற்றி
மஞ்சள் கயிறு கட்டி, ஒரு தென்னங்கன்றுக்கு பாலாபிஷேகம் செய்து நிறைய சடங்குகள், பூஜைகள் எல்லாம் செய்து முடித்து விட்டு, இனிமேல் நிச்சயம்அந்த அழுகுரல் கேட்காது என்றுசொல்லி விட்டு போகிறார்!
அவர்களும் நிம்மதியாக தூங்குகிறார்கள்!
ஆனால் அடுத்த நாள் விடியற்காலையிலேயே அந்த அழு குரல் மீண்டும் கேட்க ஆரம்பிக்கிறது!
இந்த முறை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது! இடைவெளி இல்லாமல்! தோப்பின் பக்கம் யாரோ ஆள் நடமாட்டம் இருப்பது போல் அவர்களுக்கு தெரிய, பயமாக இருந்தாலும் யாரென்று பார்ப்பதற்காக, தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு போகிறார்கள்,
அருகில் போகப்போக மரத்தின் மேல் ஏதோ ஒரு உருவம் இருப்பது போல் தெரிகிறது!
தென்னை ஓலைகளும் மட்டையும்அசைகின்ற சத்தம் கேட்கிறது! திடீரென்று மரத்திலிருந்து அந்த உருவம் சரசரவென இறங்கிகீழே வருகிறது!
இவர்கள் நடுங்கிப்போய் பார்க்க ....
மரத்திலிருந்து இறங்கிய தேங்காய் பறிக்கும் சுப்பன்,
ஒண்ணும் இல்லம்மா. மூன்று நாள் முன்னாடி தேங்காய் பறிக்க வந்தேனில்ல. போனை
மேலயே விட்டுட்டு எறங்கிட்டேன் போல. எங்கடா போனைக் காணோம்னு நாலு நாளா தேடிட்டு இருந்தேன், ஒவ்வொரு தோப்பா போயி போன் பண்ணி, போன் பண்ணி தேடிட்டு இருந்தேன்! கடைசியில உங்க தோப்புல தான் கெடந்திருக்கு!
என்று அவன் சந்தோஷப்பட, அதற்குள் மீண்டும் அந்த அழுகுரல் ரிங்டோன் ஒலிக்க, அதை அட்டென்டு செய்து,
போனு கிடைச்சிட்டும்மா, நம்ம துர்கா அக்கா தோப்புல தான் இருந்திருக்கு! போனை பாத்தப்புறம் தான் உசுரே வந்திருக்கு புள்ள,
என்று அவன் பேசியபடி நடந்து செல்ல .....
*பழைய நொக்கியா போன் சார்ஜ் நாலு நாள் நிற்குமில்ல*
உங்களை போலதான் நானும் பயந்து பயந்து படிச்சேன்.
😂
Comments
Post a Comment