அம்மா* *- தாயார் ஹீராபென்னின் 100வது பிறந்தநாளையொட்டி, ஜூன் 18, 2022இல் பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கட்டுரை.*
*அம்மா*
*- தாயார் ஹீராபென்னின் 100வது பிறந்தநாளையொட்டி, ஜூன் 18, 2022இல் பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கட்டுரை.*
அம்மா- அகராதியில் இதற்கு இணையான வேறு சொல்லைக் காண முடியாது. அன்பு, பொறுமை, நம்பிக்கை இதுபோன்ற எத்தனையோ விதமான முழுமையான உணர்வுகளை இது உள்ளடக்கியுள்ளது. உலகம் முழுவதும், நாடு அல்லது மதம் என எதுவாக இருந்தாலும் குழந்தைகளுக்கு அவர்களது அன்னையின் மீது தனிப்பாசம் இருக்கும். தாய் என்பவள் தனது குழந்தைகளை பெற்றெடுப்பதுடன் இல்லாமல் அவர்களது மனம், ஆளுமை, தன்னம்பிக்கை ஆகியவற்றை வடிவமைக்கிறாள். அவ்வாறு செய்யும்போது, தாய்மார்கள் சுயநலம் தவிர்த்து தங்களது சொந்த தேவைகளையும், விருப்பங்களையும் தியாகம் செய்கிறார்கள்.
எனது தாயார் திருமதி ஹீராபாய் தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைப்பதை பகிர்ந்துகொள்ளும் நல்வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது பற்றி, இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன். இது அவரது நூற்றாண்டாக இருக்கப்போகிறது. எனது தந்தை உயிருடன் இருந்திருந்தால் அவரும் தனது நூறாவது பிறந்த நாளை சென்ற வாரம் கொண்டாடியிருப்பார். எனது அன்னையின் நூற்றாண்டு தொடங்குவதும் எனது தந்தையின் நூறாண்டு நிறைவடைவதும் இந்த 2022 என்பதால் இது ஒரு சிறப்பான ஆண்டாகும்.
கடந்த வாரம் எனது மருமகன் காந்தி நகரில் இருந்து அன்னையின் சில வீடியோக்களை பகிர்ந்திருந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். எனது தந்தையின் புகைப்படம் ஒரு நாற்காலியில் வைக்கப்பட்டிருந்தது. எனது அன்னை மஞ்ஜீராவை இசைத்து கொண்டு பஜனை பாடல்கள் பாடுவதில் ஆழ்ந்திருந்தார். வயது காரணமாக உடல் ரீதியாக தளர்வடைந்த போதிலும், மனதளவில் சுறுசுறுப்பாகவே இன்னும் உள்ளார்.
முன்பெல்லாம் எங்களது குடும்பத்தில் பிறந்த நாட்களை கொண்டாடும் வழக்கம் இருந்ததில்லை. இருந்தாலும் இளம் தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகள் எனது தந்தையின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 100 மரக் கன்றுகளை நட்டனர்.
எனது வாழ்க்கையில் எல்லாம் நன்றாகவே இருந்திருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எனது குணம் நன்றாக இருப்பதற்கு எனது பெற்றோரே காரணமாவர். இன்று நான் தில்லியில் இருந்தாலும், எனது கடந்த கால நினைவுகளில் நான் மூழ்கியிருக்கிறேன்.
*• The Seithikathir News Service!*
*• TELEGRAM:* t.me/Seithikathir
எனது அன்னை அசாதாரணமான அளவுக்கு மிகவும் எளிமையானவர். அனைத்து அன்னையர்களை போல! எனது அன்னையை பற்றி நான் எழுதுகையில் உங்களில் பலர் எனது விளக்கத்தை அவருடன் நிச்சயம் பொருத்திப்பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இதைப் படிக்கும் போது நீங்கள் உங்கள் தாயின் தோற்றத்தை காண்பீர்கள்.
ஒரு தாயின் தவம் ஒரு நல்ல மனிதனை உருவாக்குகிறது. அவளுடைய பாசம் ஒரு குழந்தையை மனித மாண்புகள் மற்றும் கருணையால் நிரப்புகிறது. தாய் என்பவள் ஒரு தனி நபரோ அல்லது ஆளுமையோ அல்ல, தாய்மை என்பது ஒரு பெருங்குணம். கடவுள்கள் தங்கள் பக்தர்களின் இயல்புக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவர்கள் என்று அடிக்கடி கூறப்படுவது உண்டு. அதேபோல், நம் தாய்மார்களையும் அவர்களின் தாய்மையையும் நம் சொந்த இயல்பு மற்றும் மனநிலைக்கு ஏற்ப உணர்கிறோம்.
எனது தாயார் குஜராத்தில் உள்ள மெஹ்சானாவின் விஸ்நகரில் பிறந்தார். அது எனது சொந்த ஊரான வத் நகருக்கு மிக அருகில் உள்ளது. அவரது தாயின் பாசம் அவருக்கு கிடைத்ததில்லை. இளம் வயதிலேயே, ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுநோயால் என் பாட்டியை அவர் இழந்தார். என் பாட்டியின் முகமோ, மடியின் சுகமோ கூட அவருக்கு நினைவில் இல்லை. அவர் தன் குழந்தைப் பருவம் முழுவதையும் தன் தாய் இல்லாமலேயே கழித்தார். நாம் அனைவரும் செய்வது போல, அவரால் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாமல் இருந்தது. நம்மைப் போல அவரால் அம்மாவின் மடியில் இளைப்பாற முடியவில்லை. அவரால் பள்ளிக்குச் செல்லவோ, படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ளவோ முடியவில்லை. அவருடைய குழந்தைப் பருவம் வறுமையும், பற்றாக்குறையும் நிறைந்ததாகவே இருந்தது.
இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, அம்மாவின் குழந்தைப் பருவம் மிகவும் கடினமாகவே இருந்தது. சர்வவல்லமையுள்ள இறைவன் அவருக்கு விதித்திருப்பது இதுதான் போலும். இது கடவுளின் விருப்பம் என்று அம்மாவும் நம்புகிறார். ஆனால், சிறுவயதிலேயே தாயை இழந்தது, தாயின் முகத்தைக்கூட பார்க்க முடியாதது அவருக்கு பெரும் வேதனையைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது.
இந்தப் போராட்டங்களால் அம்மாவுக்கு குழந்தைப் பருவம் பெரிதாக வாய்க்கவில்லை. அவர் வயதைத் தாண்டி வளர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குடும்பத்தில் மூத்த குழந்தையாக அவர் இருந்ததால் திருமணத்திற்குப் பிறகு மூத்த மருமகளாகிவிட்டார். அவரது இளம் வயதிலேயே, குடும்பம் முழுவதையும் கவனித்துக் கொள்வதோடு, எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய நிலையில் அவர் இருந்தார்.
*• The Seithikathir News Service!*
*• WHATSAPP:* https://chat.whatsapp.com/BQD4Ple23mOCdcU62YOkBV
திருமணத்துக்குப் பின்னரும், அவர் இந்தப் பொறுப்புகளையெல்லாம் ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். கடினமான பொறுப்புகள் மற்றும் அன்றாட போராட்டங்கள் இருந்தபோதிலும், அம்மா முழு குடும்பத்தையும் அமைதியாகவும், தைரியமாகவும் நடத்தினார்.
வத் நகரில், எங்கள் குடும்பம் ஒரு ஜன்னல் கூட இல்லாத சிறிய வீட்டில் வசித்தது. கழிவறை அல்லது குளியல் அறை என்பது எங்களுக்கு ஆடம்பரமான ஒன்றாகும். மண்சுவரும், ஓட்டுக் கூரையும் கொண்ட இந்த ஒரு அறை குடியிருப்பை நாங்கள் எங்கள் வீடு என்று அழைத்தோம். எனது பெற்றோர், என் உடன்பிறந்தவர்கள் மற்றும் நான் உள்பட அனைவரும் அதில் தான் தங்கியிருந்தோம்.
அம்மாவுக்கு உணவு சமைப்பதற்கு வசதியாக மூங்கில் குச்சிகள் மற்றும் மரப்பலகைகளால் ஆன ஒரு மேடையை என் தந்தை செய்திருந்தார். இந்த அமைப்பே எங்கள் சமையலறையாக இருந்தது. அம்மா சமைப்பதற்கு அந்த மேடை மீது ஏறுவது வழக்கம். குடும்பம் முழுவதும் அதில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்.
பொதுவாக, வறுமை மன அழுத்தத்திற்கு வழிவகுப்பதுண்டு. இருப்பினும், அன்றாடப் போராட்டங்கள் காரணமாக ஏற்படும் கவலைகள், குடும்பச்சூழலை மூழ்கடிக்க என் பெற்றோர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. எனது பெற்றோர் இருவரும் தங்கள் பொறுப்புகளை கவனமாகப் பிரித்து நிறைவேற்றினர்.
கடிகாரம் ஓயாமல் சுழல்வது போல, அப்பாவும் அதிகாலை நான்கு மணிக்கே வேலைக்குப் போவார். அவருடைய காலடி சத்தம் கேட்டதும், தாமோதர் மாமா வேலைக்குப் புறப்படுகிறார், இப்போது மணி அதிகாலை 4 என்று அண்டை வீட்டார் சொல்வதுண்டு. தனது சிறிய தேநீர் கடையைத் திறப்பதற்கு முன்பு உள்ளூர் கோவிலில் பிரார்த்தனை செய்வதும் அவருடைய தினசரி சடங்காகும்.
அம்மாவும் அவருக்கு இணையாக நேரம் தவறாமையை சரியாக கடைபிடிப்பார். அவரும் என் தந்தையுடன் எழுந்து, காலையில் பல வேலைகளை முடிப்பார். தானியங்களை அரைப்பதிலிருந்து அரிசி, பருப்பு ஆகியவற்றை சலிப்பது வரை அவரே செய்வார். அம்மாவுக்கு உதவிக்கு யாருமில்லை. வேலை செய்யும் போது அவருக்குப் பிடித்தமான பஜனை பாடல்களையும் கீர்த்தனைகளையும் முணுமுணுப்பார். ‘ஜல்கமல் சாடி ஜானே பாலா, ஸ்வாமி அமரோ ஜக்ஸே’ என்னும் நர்சி மேத்தாவின் பிரபலமான பஜனை பாடலை அவர் விரும்பினார். ‘சிவாஜி நு ஹாலர்டு’ என்ற தாலாட்டும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
குழந்தைகளாகிய நாங்கள் படிப்பை விட்டுவிட்டு வீட்டு வேலைகளில் உதவவேண்டும் என்று அம்மா ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. அவர் எங்களிடம் ஒரு உதவியையும் கேட்டதில்லை. இருப்பினும், அவர் மிகவும் கடினமாக வேலை செய்வதைப் பார்த்து, அவருக்கு உதவுவதை எங்கள் முதன்மையான கடமையாக நாங்கள் கருதினோம். உள்ளூர் குளத்தில் நீந்துவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், வீட்டில் இருக்கும் அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்து வந்து குளத்தில் துவைப்பேன். துணி துவைப்பதோடு, எனது விளையாட்டையும் இணைத்து செய்வதுண்டு.
அம்மா வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க ஒரு சில வீடுகளில் பாத்திரங்களைக் கழுவுவது வழக்கம். எங்களின் சொற்ப வருமானத்திற்கு துணையாக ராட்டையை சுற்றவும் அவர் நேரம் ஒதுக்குவார். பருத்தி உரிப்பது முதல் நூல் நூற்பது வரை அனைத்தையும் செய்வார். இந்த முதுகு வலிக்கும் வேலையிலும் கூட, பருத்தி முட்கள் எங்களைக் குத்திவிடக் கூடாது என்பதில்தான் அவருடைய முதன்மையான அக்கறை இருந்துவந்தது.
பிறரைச் சார்ந்திருப்பதையோ அல்லது தன் வேலையைச் செய்யும்படி பிறரைக் கேட்டுக் கொள்வதையோ அம்மா தவிர்த்து வந்தார். பருவமழை எங்கள் மண் வீட்டிற்கு பல பிரச்சனைகளை கொண்டு வரும். இருப்பினும், நாங்கள் குறைந்தபட்ச அசௌகரியத்தைக் கூட எதிர்கொள்வதை அம்மா சகித்துக் கொள்ள மாட்டார். ஜூன் மாத வெயிலில், எங்கள் மண் வீட்டின் கூரையின் மீது ஏறி, ஓடுகளை சரிசெய்வார். இருப்பினும், அவருடைய துணிச்சலான முயற்சிகளுக்கிடையிலும் எங்கள் வீடு மழையின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு பழமையானதாக இருந்தது.
மழைக்காலங்களில், எங்கள் வீட்டின் கூரை ஒழுகி, வீடு வெள்ளக்காடாகிவிடும். மழைநீரை சேகரிக்க, ஒழுகல் உள்ள இடங்களின்கீழ், வாளிகளையும், பாத்திரங்களையும் அம்மா வைப்பார். இந்த மோசமான சூழலிலும், அமைதியின் சின்னமாக அம்மா இருப்பார். இந்தத் தண்ணீரை அடுத்த சில நாட்களுக்கு அவர் பயன்படுத்திக் கொள்வார் என்றால் அது உங்களுக்கு வியப்பாக இருக்கும். தண்ணீர் சேமிப்புக்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் எதுவாக இருக்க முடியும்!
வீட்டை அலங்கரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அம்மா, வீட்டை சுத்தப்படுத்தி அழகுபடுத்துவதற்கு கணிசமான நேரத்தை ஒதுக்குவார். மாட்டுச்சாணம் கொண்டு தரையை அவர் மொழுகுவார். மாட்டுச்சாணத்தால் தயாரிக்கப்பட்ட எருக்களை எரிக்கும் போது ஏராளமான புகை வரும். ஆனாலும், அதை வைத்துதான் ஜன்னல் இல்லாத எங்களது வீட்டில் அம்மா சமையல் செய்வார்!
|
சுவர்கள் முழுவதும் கரும்புகை படிவதால், அடிக்கடி வெள்ளையடிக்க வேண்டியிருக்கும். இதையும் அம்மாவே சில மாதங்களுக்கு ஒருமுறை செய்வார். இதுபோன்று செய்வது பாழடைந்து போகும் எங்கள் வீட்டில் புத்துணர்ச்சியூட்டும் வாசனையை ஏற்படுத்தும். வீட்டை அலங்கரிப்பதற்காக சிறு சிறு மண்பாண்டங்களையும் அம்மா தயாரிப்பார். பழைய வீட்டு உபயோகப் பொருட்களை மறு சுழற்சி செய்யும் இந்தியாவின் பழக்கவழக்கத்திற்கு அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
அம்மாவின் மற்றொரு தனிப் பண்பையும் நான் நினைவுகூர விரும்புகிறேன். தண்ணீர் மற்றும் புளியங்கொட்டையில் பழைய காகிதங்களை நனைத்து பசை போன்ற ஒரு கூழை அம்மா தயாரிப்பார். இந்தக் கூழைப் பயன்படுத்தி சுவர்களில் கண்ணாடி துண்டுகளை ஒட்டி அழகிய ஓவியங்களை அவர் உருவாக்குவார். கதவில் தொங்கவிடுவதற்காக சந்தையிலிருந்து சில சிறிய அலங்கார பொருட்களையும் அவர் வாங்கி வருவார்.
படுக்கைகள் சுத்தமாகவும், சரியாகவும் விரிக்கப்பட வேண்டும் என்பதில் அம்மா மிகுந்த கவனம் செலுத்துவார். படுக்கையில் சிறு தூசி இருந்தால் கூட அவர் சகித்துக் கொள்ளமாட்டார். படுக்கை விரிப்பில் லேசான சுருக்கம் இருந்தால்கூட அம்மா அதனை சரிசெய்த பிறகே மீண்டும் விரிப்பார். இந்தப் பழக்கத்தை பின்பற்றுவதில் நாங்கள் அனைவரும் மிகுந்த கவனமாக இருப்போம். தற்போதும் கூட, இந்த தள்ளாத வயதிலும், அவருடைய படுக்கையில் லேசான சுருக்கம் கூட இருக்கக் கூடாது என அம்மா எதிர்பார்ப்பார்!
இதுதான் தற்போதும் நேர்த்தியான செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது. காந்திநகரில் அவர் எனது சகோதரர்கள் மற்றும் எனது உறவினர் குடும்பங்களுடன் வசித்தாலும், இப்போதும் கூட, இந்த வயதிலும் அவரது வேலைகளை அவரே செய்வதற்கு முயற்சிக்கிறார்.
தூய்மையில் அவர் கவனம் செலுத்துவதை இப்போதும்கூட காணலாம். நான் எப்போது அவரைக்காண காந்திநகர் சென்றாலும், அவரது கையால் எனக்கு இனிப்புகளை ஊட்டிவிடுவார். சிறு குழந்தைகளை சுத்தம் செய்யும் அம்மாவைப் போல, நான் சாப்பிட்டவுடன் கைக்குட்டையை எடுத்து எனது முகத்தை துடைத்துவிடுவார். அவர், எப்போதும் ஒரு கைக்குட்டை அல்லது சிறிய கைத்துண்டை அவரது சேலையிலேயே முடிந்து வைத்திருப்பார்.
அம்மா தூய்மையில் கவனம் செலுத்துவது பற்றிய பழங்கால நிகழ்வுகளை நினைவுகூர்வதாக இருந்தால், அவற்றை எழுதுவதற்கு காகிதங்கள் போதாது. தூய்மை மற்றும் துப்புரவில் கவனம் செலுத்துபவர்களைக் கண்டால், அவர்கள் மீது அம்மா மிகுந்த மரியாதை செலுத்துவார் என்பது அவரது மற்றொரு தனிப்பண்பு. வத் நகரில் எங்கள் வீட்டை ஒட்டிய சாக்கடையை சுத்தம் செய்ய யார் எப்போது வந்தாலும், அவர்களுக்கு அம்மா தேனீர் கொடுக்காமல் விடமாட்டார். வேலை பார்த்தவுடன் தேனீர் கிடைக்கும் என்பதால், எங்களது வீடு துப்புரவு பணியாளர்களிடையே மிகுந்த பிரசித்திப் பெற்றதாகும்.
நான் எப்போதும் நினைவுகூரும் அம்மாவின் மற்றொரு பழக்கம் என்னவென்றால், மற்ற உயிரினங்கள் மீதும் அவர் மிகுந்த பாசம் காட்டுவார். ஒவ்வொரு கோடை காலத்திலும், பறவைகளுக்காக அவர் பாத்திரங்களில் தண்ணீர் வைப்பார். எங்கள் வீட்டை சுற்றித்திரியும் தெரு நாய்களும், பசியின்றி இருப்பதை அவர் உறுதி செய்வார்.
எனது அப்பா, தேனீர் கடையிலிருந்து கொண்டு வரும் பாலாடையிலிருந்து சுவை மிகுந்த நெய்யை அம்மா தயாரிப்பார். இந்த நெய் எங்களது பயன்பாட்டிற்கு மட்டுமானதல்ல. எங்களது பக்கத்து வீடுகளில் உள்ள பசுமாடுகளுக்கும் உரிய பங்கு வழங்கப்படும். அந்தப் பசுக்களுக்கு அம்மா தினந்தோறும் ரொட்டிகளை வழங்குவார். காய்ந்து போன ரொட்டிகளாக அல்லாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யை தடவி பாசத்துடன் அவற்றை வழங்குவார்.
உணவு தானியங்களை சிறு துளி கூட வீணாக்கக் கூடாது என அம்மா வலியுறுத்துவார். எங்களது பக்கத்து வீடுகளில் எப்போது திருமண விருந்து நடைபெற்றாலும், உணவு பொருட்களை வீணாக்கக் கூடாது என அவர் எப்போதும் எங்களிடம் நினைவூட்டுவார். உன்னால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அதை மட்டும் சாப்பிடு – என்பதே எங்களது வீட்டில் தெளிவான விதிமுறையாக இருந்தது.
தற்போதும் கூட, அவரால் எவ்வளவு சாப்பிட முடியுமோ, அந்த அளவு சாப்பாட்டைத்தான் அம்மா எடுத்துக்கொள்வார், ஒரு கவளம் சாதத்தைக் கூட அவர் வீணாக்க மாட்டார். சிறந்த பழக்க வழக்கங்களுக்கென்றே பிறந்தவரான அவர், குறித்த நேரத்தில் சாப்பிடுவதோடு, சாப்பாடு நன்றாக செரிக்கும் விதமாக மென்று சாப்பிடுவார்.
மற்றவர்கள் மகிழ்வதைக் கண்டு அம்மா மகிழ்வார். எங்களது வீடு சிறியதாக இருந்தாலும், அவர் பரந்த சுபாவம் கொண்டவர். எனது தந்தையின் நெருங்கிய நண்பர் ஒருவர், பக்கத்து கிராமத்தில் வசித்து வந்தார். அவர் எதிர்பாராவிதமாக காலமானதும், அப்பா அவரது நண்பரின் மகனான அப்பாஸை, எங்களது வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர் எங்களது வீட்டில் எங்களுடன் தங்கி அவரது படிப்பை முடித்தார். எனது சகோதர சகோதரிகள் மீது காட்டுவதைப் போன்றே அம்மா, அப்பாஸிடமும் பாசம் காட்டி அவரை கவனித்துக் கொண்டார். ஆண்டுதோறும் ரமலான் பண்டிகையின் போது, அப்பாஸிற்கு பிடித்த திண்பண்டங்களை அம்மா செய்து கொடுப்பார். பண்டிகைகளின்போது, பக்கத்து வீட்டு குழந்தைகள் எங்களது வீட்டிற்கு வந்து அம்மா தயாரித்த சிறப்பு திண்பண்டங்களை ருசித்து செல்வார்கள்.
சாதுக்கள் எப்போது எங்களது பக்கத்து வீடுகளுக்கு வந்தாலும், அம்மா அவர்களை எங்களது எளிமையான வீட்டிற்கு அழைத்து உணவு கொடுப்பார். தன்னலமற்ற தன்மை கொண்ட அவர், சாதுக்களை அழைத்து குழந்தைகளான எங்களை ஆசிர்வதிக்க சொல்வாரே தவிர, அவருக்காக எதையும் கேட்டதில்லை. “எனது குழந்தைகள் மற்றவர்கள் மகிழ்வதை கண்டு மகிழும் விதமாகவும், மற்றவர்களின் துன்பங்களை போக்கும் விதமாகவும் இருக்க ஆசிர்வதியுங்கள். குழந்தைகள் பக்தியுடனும், சேவை மனப்பான்மையுடனும் இருக்க ஆசிர்வதியுங்கள்” என்றுதான் அம்மா சாதுக்களிடம் கேட்டுக் கொள்வார்.
அம்மா எப்போதும் என்மீதும், அவர் சொல்லிக் கொடுத்த நற்பண்புகள் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். பல தசாப்தங்களுக்கு முன் நான் கட்சிப் பணியாற்றிய போது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை நினைவுகூர விரும்புகிறேன். கட்சிப் பணிகளில் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்த வேளையில், எப்போதாவதுதான் எனது குடும்பத்தினரை தொடர்பு கொள்வேன். அந்த காலக்கட்டத்தில் எனது மூத்த சகோதரர் அம்மாவை பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களுக்கு அழைத்துச் சென்றார். பத்ரிநாத்தில் தரிசனத்தை முடித்த பிறகு அவர் கேதார்நாத் வரவிருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் அறிந்துள்ளனர்.
எனினும், பருவநிலை திடீரென மோசமடைந்தது. சிலர் கம்பளிகளுடன் மலையடிவாரத்திற்கு வந்தனர். சாலைகளில் சென்றவர்களிடம் எல்லாம் அவர்கள் நரேந்திர மோடியின் தாயாரா என்று கேட்டவாறு இருந்தனர். இறுதியாக அவர்கள் எனது தாயாரை சந்தித்து அவருக்கு கம்பளியும் தேனீரும் அளித்துள்ளனர். அவர் கேதார்நாத்தில் வசதியாக தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர். இது எனது அம்மாவின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பின்னாளில் அவர் என்னை சந்தித்த போது, “மக்கள் உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், நீ சில நல்ல காரியங்களை செய்து கொண்டிருக்கிறாய் எனத் தெரிகிறது” என்று அவர் கூறினார்.
தற்போது பல ஆண்டுகள் உருண்டோடிய பிறகும், உங்களது மகன் நாட்டின் பிரதமரானதை நினைத்து நீங்கள் பெருமிதம் அடைகிறீர்களா என்று அவரிடம் எப்போது கேட்டாலும், அம்மா அவர்களுக்கு மிகுந்த பொறுப்புடன் பதில் சொல்வார். “உங்களைப் போன்றே நானும் பெருமிதம் அடைகிறேன். எதுவும் என்னால் ஆனதல்ல. ஆண்டவனின் திட்டத்தில் நான் ஒரு சிறு துரும்புதான்” என்று அம்மா கூறுவார்.
நான் பங்கேற்கும் எந்த அரசு அல்லது பொது நிகழ்ச்சிகளுக்கும், அம்மா என்னுடன் வந்ததில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கடந்த காலங்களில் இரண்டே இரண்டு முறை மட்டும் அவர் நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு வந்துள்ளார். ஒருமுறை, ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்து லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றிவைத்து ஸ்ரீநகரிலிருந்து நான் திரும்பி வந்த போது, அகமதாபாதில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்று எனது நெற்றியில் திலகமிட்டார்.
என் தாயாருக்கு அன்று மிகவும் உணர்ச்சிகரமான தருணம். ஏனெனில், ஏக்தா யாத்திரை சென்ற சிலர் பக்வாராவில், தீவிரவாத தாக்குதலில் இறந்து விட்டனர். இதை கேட்டு அம்மா மிகவும் கவலைப்பட்டார். அப்போது இரண்டு பேர் என்னை பார்க்க வேண்டும் என்று அழைத்தனர். ஒருவர், அக்ஷர்தம் கோயிலின் ஷ்ரதே ப்ரமுக் ஸ்வாமிகள். இன்னொருவர் என் அம்மா. அம்மாவை பார்க்க போனபோது அவர்களின் நிம்மதி எனக்கு நன்றாக தெரிந்தது.
இரண்டாவது நிகழ்ச்சி, 2001-ம் ஆண்டில் நான் குஜராத் முதல்வராக பொறுப்பேற்றபோது நடந்தது. 20 வருடங்களுக்கு முன், நான் குஜராத் முதல்வராக பதவியேற்ற விழாவில் தான் என் அம்மா என்னுடன் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் என்னுடன் எந்த பொதுநிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. நான் குஜராத் முதல்வராக பதவியேற்றபோது, எனது ஆசிரியர்கள் அனைவரையும் பொதுமேடையில் கவுரவப்படுத்த நினைத்தேன். என் தாயாரை தான் என் வாழ்க்கையில் பெரிய ஆசிரியையாக நினைத்திருந்தேன். நமது வேதங்கள் கூட, அம்மாவை தவிர வேறுயாரும் பெரிய குரு இல்லை என்று தெரிவிக்கின்றன. அதனால் என் அம்மாவை விழாவில் கலந்து கொள்ளும்படி அழைத்தேன். ஆனால் என் அன்னை மறுத்து விட்டார். நான் ஒரு சாதாரண பிரஜை. நான் உன்னை பெற்றெடுத்திருந்தாலும், கடவுளின் அருளும், மக்களின் ஆசியும் உன்னை நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளன. அதனால் எனக்கு கவுரவம் வேண்டாம் என்று தெரிவித்து விட்டார். விழாவில் மற்ற ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இதற்கு முன் ஒரு சம்பவத்தை பற்றி கூற வேண்டும். நான் படித்த பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்த உள்ளூர் ஆசிரியையான ஜெதாபாய் ஜோஷி ஜி வீட்டில் இருந்து யாராவது, நான் முதல்வராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்வார்களா என்று என் அம்மா கேட்டார். ஜெதாபாய் ஜோஷி ஜி தான் என் ஆரம்பகால ஆசிரியை, எனக்கு எழுத்துகளை கற்று தந்தார். அதனை என் அம்மா நினைவு வைத்திருந்தார்கள். ஜெதாபாய் ஜோஷி ஜி இறந்து விட்டதை நினைவுகூர்ந்த என் அம்மா, ஜெதாபாய் ஜோஷி ஜி குடும்பத்தில் இருந்து ஒருவரை என் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைத்திருந்தேன் என்பதை உறுதி செய்து கொண்டார்கள்.
முறையாக பள்ளிக்கு சென்று படிக்கா விட்டாலும், கற்றுக் கொள்வது சாத்தியம் என்பதை என் அம்மா நன்றாக உணர்ந்திருந்தார். என் அம்மாவின் சிந்தனைகளும், தொலைநோக்கு பார்வையும் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்துவதாகவே இருந்திருக்கிறது.
ஒரு நல்ல குடிமகனாக நான் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து என் அம்மா எப்போதும் எனக்கு சொல்லிக் கொண்டே இருப்பார். வாக்குப்பதிவு நடைமுறை தொடங்கிய நாளிலிருந்து என் அம்மா ஒருமுறை கூட வாக்களிக்க தவறியதில்லை. பஞ்சாயத்து தேர்தல்களிலிருந்து பாராளுமன்ற தேர்தல் வரை அவர் நிச்சயம் வாக்களிப்பார். சில தினங்களுக்கு முன், காந்திநகர் நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களிலும் என் அம்மா வாக்களித்தார்.
கடவுளின் அருளுடன், பொதுமக்களின் ஆசிர்வாதமும் உனக்கு இருப்பதால், உனக்கு எதுவும் நடக்காது என்று என் அம்மா என்னிடம் அடிக்கடி கூறுவார். மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய விரும்பினால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், தனிப்பட்ட வாழ்வில் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று என் அம்மா எனக்கு அறிவுரை கூறுவார்.|
முன்பெல்லாம், சதுர்மாஸ்ய சடங்குகளை என் அம்மா மிக கடுமையாக பின்பற்றுவார். நவராத்திரி தினத்தின்போது, இப்போதும் நான் கடைப்பிடிக்கும் எனது தனிப்பட் பழக்க, வழக்கங்கள் என் அம்மாவுக்கு நன்றாக தெரியும். இந்த கடுமையான நடைமுறைகளை எளிமையாக்கி கொள்ள வேண்டும் என்று என் அம்மா இப்போது சொல்ல தொடங்கியுள்ளார். என் அம்மா, தனது வாழ்நாளில் எந்தஒரு குறையையும் சொல்லி நான் கேட்டதில்லை. அவர் யாரைப் பற்றியும் எந்தவொரு குறையையும் சொன்னதில்லை. அவர் யாரிடமிருந்தும் எந்த ஒன்றையும், எப்போதும் எதிர்பார்ப்பதுமில்லை.
என் அம்மாவுக்கு எப்போதும் எந்த சொத்துகளும் இல்லை. என் அம்மா ஒரு எறும்பு அளவு தங்கம் அணிந்திருப்பதையும் நான் பார்க்கவில்லை. என் அம்மா எப்போதும், எதன் மீதும் ஆசைப்பட்டதுமில்லை. என் அம்மா இப்போதும் ஒரு சிறு அறையில் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
என் அன்னைக்கு ஆன்மீகத்தின் மீது என்றுமே அதீத நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆனால், அவர் மூடநம்பிக்கைகளுக்கு இடம்கொடுக்க மாட்டார். அதே குணங்களை அவர் எனக்கும் கற்று தந்தார். தினசரி பிரார்த்தனைகளை அவர் இப்போதும் தொடர்ந்து செய்கிறார். என்றுமே ஜபமாலையுடன் பிரார்த்தனைகள் செய்வதை அவர் கடைப்பிடிக்கிறார். சில சமயங்களில் அவர் கையில் ஜபமாலையுடனே தூங்கி விடுவார். சிலநேரங்களில் தூக்கத்தை துறந்து ஜபமாலையுடன் பிரார்த்னை செய்வதால், என் குடும்ப உறுப்பினர்கள் ஜபமாலையை எடுத்து மறைத்து வைத்து விடுவதும் நடக்கிறது.
என் தாயாருக்கு வயதாகி விட்டாலும், அவருக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கிறது. பழைய சம்பவங்களை அவர் இப்போதும் நன்றாக நினைவில் வைத்துள்ளார். உறவினர்கள் யாரும் அவரை பார்க்க வந்தால், உடனே என் அம்மா தன்னுடைய தாத்தா, பாட்டி பெயர்களை சரியாக சொல்லி, அவர்களை அடையாளம் கண்டுபிடித்து விடுகிறார்.
அண்மையில் நான் என் தாயாரிடம், தினமும் எவ்வளவு நேரம் தொலைகாட்சியை பார்க்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், டிவியில் எல்லோரும் ஏதாவது காரணத்துக்காக அடிக்கடி சண்டை போட்டு கொண்டுள்ளனர் என்றும், செய்திகளை, அதிலும் அமைதியாக, விளக்கமாக வாசிக்கப்படும் செய்திகளை மட்டுமே தான் பார்ப்பதாகவும் அவர் கூறினார். என் அம்மா அனைத்து விஷயங்களையும் இவ்வளவு ஆழமாக கவனிப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
எனக்கு இன்னொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 2017-ம் ஆண்டு, காசியில், உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை முடித்து கொண்டு, அகமதாபாத் சென்றேன். அப்போது, கோயில் பிரசாதத்தை எடுத்து கொண்டு என் தாயாரை சந்திக்கச் சென்றேன். அவரை பார்த்ததும், உடனே காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தாயா என்று என்னை கேட்டார். அவர் இப்போதும். காசி விஸ்வநாதர் மகாதேவ் என்று முழுப்பெயரையும் சரியாக சொல்கிறார். அப்போது என் அம்மா என்னிடம், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பாதைகள் இன்னும் அப்படியே இருக்கிறதா என்று கேட்டார். யாரோ ஒருவரின் வீட்டுக்குள் கோயில் இருப்பது போல் தோன்றுவதாக தெரிவித்தார். நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். நீங்கள் எப்போது காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றீர்கள் என்று அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அவர், பல வருடங்களுக்கு முன்பு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றதாக தெரிவித்தார். என் அம்மா பழைய விஷயங்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.
என் தாயார் வெறுமனே பாசமும், அக்கறையும் கொண்டவரில்லை. அவர் திறமைகள் உடையவராகவும் இருக்கிறார். என் அம்மாவுக்கு பாட்டி வைத்தியம் நிறைய தெரியும். குஜராத்தின் வத் நகரில், எங்கள் வீட்டின் முன், குழந்தைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
சிறுகுழந்தைகளுக்கு சிகிச்சை தருவதற்காக என் அம்மா, சிறந்த பொடி ஒன்றை பயன்படுத்துகிறார். இந்த பொடி குழந்தைகளுக்கு தருவதற்காகவே மிகவும் கவனத்துடன் தயாரிக்கப்பட்டது. அம்மா, குழந்தைகளுக்கு சிறிய கிண்ணத்தில் அடுப்பிலிருந்து சாம்பல் பொடியையும், சிறு துணியையும் தருவார். நாங்கள் கிண்ணத்தில் துணியை கட்டி அதன்மீது சாம்பல் பொடியை வைத்து நன்றாகத் தேய்ப்போம். பெரிய அளவிலான சாம்பல் துகள்களால் குழந்தைகள் துன்பமடைய கூடாது என்று என் அம்மா கூறுவார்.
இன்னொரு நிகழ்வும் என் நினைவுக்கு வருகிறது. என் அப்பா நர்மதாவில் நடத்திய ஒரு பூஜைக்கு நாங்கள் சென்றிருந்தோம். கடுமையான வெயிலை தவிர்ப்பதற்காக, அதிகாலையிலேயே நாங்கள் கிளம்பி நான்கு மணிநேர பயணம் சென்றோம். பேருந்தில் இருந்து இறங்கிய பிறகும், சிறிது தூரம் நடந்தே செல்ல வேண்டியிருந்தது. வெம்மை அதிகமாக இருந்ததால், நாங்கள் ஆற்றங்கரையோரம் தண்ணீரில் நடந்து சென்றோம். ஆனால், தண்ணீரில் நடப்பது எளிதல்ல. சீக்கிரம் நாங்கள் சோர்வடைந்து விட்டோம். எங்கள் சிரமத்தை பார்த்த அம்மா, சிறிது நேரம் அனைவரும் ஓய்வெடுப்போம் என்று சொன்னதுடன், அனைவருக்கும் வெல்லமும், தண்ணீரும் வாங்கி வந்து தரக் கூறினார். அப்பா அவற்றை வாங்கி வந்தபோது, அம்மா வேகமாக ஓடி சென்று அதனை வாங்கி வந்து எங்களிடம் கொடுத்தார். அந்த வெல்லமும், தண்ணீரும் எங்களுக்கு சிறிது ஆற்றலை கொடுத்தது. நாங்களும் தொடர்ந்து நடந்தோம். கடும் வெயிலில் நாங்கள் பூஜைக்கு சென்றபோது, எங்கள் அம்மா எங்களுக்காக அக்கறையுடன் எங்கள் அப்பாவை துரிதப்படுத்தியது எனக்கு இன்னமும் நன்றாக நினைவில் இருக்கிறது.
குழந்தை பருவத்திலிருந்தே எனது தாயார் பிறரது தேர்வுகளுக்கு மரியாதை அளிப்பதையும் தன்னுடைய விருப்பங்களை திணிப்பதை தவிர்ப்பதையும் கண்டிருக்கிறேன் என்னுடைய விஷயத்தில் கூட அவர் எனது முடிவுகளுக்கு மதிப்பளிப்பதையும் எந்த விதமான தடையையும் ஏற்படுத்தாமல் இருப்பதையும் எனக்கு ஊக்கமளிப்பதையும் நினைவு கூர்கிறேன். எனது குழந்தை பருவத்தில் எனக்குள் வேறொரு விதமான மனநிலை உருவாகி வருவதை அவர் உணர்ந்தே இருந்தார். எனது சகோதர சகோதரிகளோடு ஒப்பிடுகையில் நான் சற்றே மாறுபட்டவனாக இருந்திருக்கிறேன்.
எனது வித்தியாசமான பழக்க வழக்கங்களுக்கும் வழக்கத்திற்கு மாறான எனது முயற்சிகளுக்கும் தேவைப்படும் சிறப்பு கவனத்தையும், சிறப்பு முயற்சிகளையும் அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவர் எப்போதும் இதை ஒரு சுமையாக கருதியதும் இல்லை. அதற்காக அவர் எரிச்சலடைந்ததும் இல்லை. உதாரணத்திற்கு சில மாதங்களில் உணவில் நான் உப்பு சேர்த்துக்கொள்வதில்லை, சில வாரங்களுக்கு தானிய வகை உணவுகள் எதையும் எடுத்துக்கொள்ளாமல் பால் மட்டுமே அருந்துவேன். சில சமயங்களில் 6 மாத காலம் வரை இனிப்பு வகைகளை தவிர்த்து விடுவேன். குளிர்காலத்தில் வெட்டவெளியில் உறங்குவதோடு குளிர்ந்த மண் பானை தண்ணீரில் குளிக்கும் பழக்கமும் இருந்தது. என்னை நானே பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்கிறேன் என்று என் அன்னைக்கு தெரியும். அதனால் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். அவர்கள் “பரவாயில்லை உனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதைச் செய்” என்று கூறிவிடுவார்கள்.
நான் மாற்றுப் பாதையில் பயணம் செய்ய இருக்கிறேன் என்பதை அவர்களால் உணர முடிந்திருந்தது. ஒருமுறை எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த கிரி மகாதேவ் கோவிலுக்கு ஒரு மகான் வந்திருந்தார். மிகுந்த பயபக்தியுடன் அவருக்கு நான் சேவைகள் செய்து வந்தேன். அந்த சமயத்தில் எனது தாயார் தனது சகோதரியின் திருமணம் நடைபெறவிருப்பது குறித்து மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்கள். கூடவே தனது சகோதரரின் இல்லத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி கொண்டிருந்தார்கள். ஒட்டுமொத்த குடும்பமுமே திருமணத்திற்காக தயாராகி வந்த நிலையில் நான் எனது அன்னையிடம் சென்று எனக்கு அங்கு வர விருப்பமில்லை என்று கூறினேன். அவர் காரணம் கேட்டபோது மகானுக்கு செய்ய வேண்டிய சேவைகள் பற்றி எடுத்துரைத்தேன்.
என் தாயாரின் சகோதரியின் திருமணத்திற்கு நான் செல்லவில்லை என்பதில் அவர்களுக்கு வருத்தம் இருந்தது இயல்புதான். ஆனால் அவர்கள் எனது முடிவை மதித்தார்கள். அப்போதும் “பரவாயில்லை உனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதைச் செய்” என்றார்கள். ஆனால் தனியே நான் வீட்டில் எப்படி சமாளிப்பேன் என்ற கவலை அவர்களுக்கு இருந்தது. அதனால் நான் பசியில் வாடிவிடக்கூடாது என்பதற்காக சில நாட்களுக்கான உணவையும் சிறு தீனியையும் அவர்கள் எனக்காக சமைத்து வைத்துவிட்டு சென்றார்கள்.
நான் வீட்டை விட்டுச் செல்வது என்று முடிவெடுத்தபோது அதை அவரிடம் சொல்வதற்கு முன்னதாகவே முடிவு அவருக்கு தெரிந்திருந்தது. வெளி உலகிற்கு சென்று இந்த உலகம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று எனது பெற்றோரிடம் நான் அடிக்கடி கூறி வந்ததுண்டு. சுவாமி விவேகானந்தரைப் பற்றி அவர்களிடம் அடிக்கடி கூறி ராமகிருஷ்ணா மிஷன் மடத்திற்குச் செல்ல வேண்டுமென்ற என் விருப்பத்தை தெரிவித்து இருந்தேன். இது பல நாட்கள் நீடித்தது. இறுதியாக ஒரு நாள் நான் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்து பெற்றோரின் ஆசியை வேண்டினேன். மனம் வெதும்பி எனது தந்தையார் என்னிடம் கூறினார் "உன் விருப்பம்". அவர்களது ஆசி இன்றி வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று நான் அவர்களிடம் தெளிவாக கூறினேன். அப்போது எனது தாயார் உனது மனம் என்ன சொல்கிறதோ அதுபோல் செய் என்று கூறினார். அப்போதைக்கு எனது தந்தையை சமாளிப்பதற்காக ஒரு நல்ல ஜோசியரிடம் எனது ஜாதகத்தை காட்ட வேண்டும் என்று கோரினார். எனது தந்தையாரும், உறவினரான மற்றொரு ஜோசியரிடம் எனது ஜாதகத்தை காண்பித்து ஆலோசனை பெற்றார். எனது ஜாதகத்தைப் பார்த்த அந்த உறவினரான ஜோசியக்காரர் இவனது வழி வித்தியாசமானது கடவுள் இவனுக்காக வைத்திருக்கும் வழியில் மட்டுமே இந்த பையன் செல்வான் என்று கூறினார்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு நான் வீட்டை விட்டு வெளியேறினேன். இந்த சமயத்தில் எனது தந்தையாரும் எனது முடிவை ஏற்றுக் கொண்டு எனக்கு ஆசிர்வாதங்களை வழங்கினார். மிகச் சிறப்பான ஒரு தொடக்கம் அமைய வேண்டும் என்று வாழ்த்தி எனது தாயார் எனக்கு தயிரும் வெல்லமும் கலந்து வழங்கினார்கள். எனது வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடும் என்று எனது தாயார் அறிந்திருந்தார்.
அன்னையர் அனைவருமே எப்போதுமே தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தெரிந்தவர்கள் என்றபோதிலும் தனது குழந்தை வீட்டை விட்டு வெளியேறுகிறது என்னும் போது உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாமல் சிரமப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். கண்களில் நீர் தளும்ப எனது எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு மனம் நிறைந்த ஆசிகளை வழங்கி அவர் அனுப்பி வைத்தார்.
வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நான் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் என்னுடைய அன்னையின் ஆசி எப்போதும் என்னை பின்தொடர்ந்தது. அம்மா எப்போதும் என்னுடன் குஜராத்தி மொழியில் தான் பேசுவார். தம்மைவிட வயதில் குறைந்தவராக அல்லது சமய வயதினராக இருந்தாலும் குஜராத்தி மொழியில் நீ என்று அழைப்பதற்கு 'து' என்று சொல்வார்கள். ஆனால் அதே சமயம் தம்மைவிட மூத்தவர்களை அவ்வாறு அழைக்கும்போது நீங்கள் என்று பொருள்படும் வகையில் 'தமே' என்று கூறுவார்கள். குழந்தையாக இருந்தபோது என்னை தூங்கு என்று அழைத்து வந்த எனது தாயார், வீட்டை விட்டு வெளியேறி நான் எனது சொந்த பாதையைத் தேர்ந்தெடுத்த பிறகு எனது தாயார் என்னை 'து' என்று எப்போதும் அழைத்ததில்லை. அதற்குப் பிறகு அவர்கள் என்னை தமே என்றோ அல்லது ஆப் என்றோ தான் விளித்தார்கள்.
உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு எனது தாயார் என்னை எப்போதும் ஊக்குவித்து வந்தார்கள். அதே நேரத்தில் ஏழைகள் நலன் குறித்தும் அக்கறை கொள்ளும் வகையில் அவர்களது வளர்ப்புமுறை அமைந்திருந்தது. குஜராத்தின் முதலமைச்சராக நான் ஆவது என்று முடிவெடுக்கப்பட்ட போது நான் மாநிலத்திலேயே இல்லை. குஜராத்திற்கு திரும்பியதும் நேராக எனது தாயாரை சந்திக்க சென்றேன். அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என்னிடம் மீண்டும் நான் அவருடன் தங்கப்போகிறேனா என்று ஆர்வத்துடன் விசாரித்தார்கள். ஆனால் அவர்களுக்கு நான் என்ன பதில் கூறப்போகிறேன் என்பது நன்றாகவே தெரியும். அதனால் அரசில் உனது பணி குறித்து எனக்கு தெரியாது. ஆனாலும் எந்த காரணத்தை கொண்டும் லஞ்சம் மட்டும் வாங்காதே என்று கூறினார்.
தில்லிக்கு புலம்பெயர்ந்த பிறகு என் அன்னையுடனான சந்திப்பு முன்பிருந்ததை விட மிகவும் குறைந்தது. சில நேரங்களில் நான் காந்திநகர் செல்லும் போது சில மணித்துளிகள் அவரை சந்திப்பேன். முன்பு அவரை அடிக்கடி சந்தித்ததை போல இப்போதெல்லாம் சந்திக்க முடிவதில்லை. ஆனாலும் என்னை சந்திக்க முடியவில்லை என்ற குறை அவரிடம் இருப்பது போலவும் நான் உணர்வதில்லை. அவரது அன்பும், பாசமும் மாறாமல் நிலைத்திருக்கின்றன. அவரது ஆசிர்வாதங்களைப் போல. என் தாயார் அடிக்கடி கேட்பதுண்டு. தில்லியில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா, உனக்குப் பிடித்திருக்கிறதா என்று.
அவருக்கு நான் அவரைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு, எனக்கிருக்கும் பெரும் பொறுப்புகள் மீதான அக்கறையை நழுவவிட்டுவிடக்கூடாது என்ற கவலை. அவரிடம் எப்போது தொலைபேசியில் பேசினாலும் எந்த தப்பையும் செய்துவிடாதே, யாருக்கும் எந்ததீங்கும் செய்துவிடாதே, ஏழைகளுக்காக பணியாற்று என்று கூறிக்கொண்டே இருப்பார்.
எனது பெற்றோர்களின் வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் போது அவர்களது நேர்மையும், சுயமரியாதையும் அவர்களின் மிகப்பெரும் பண்புகளாக இருந்திருக்கின்றன என்பதை உணரமுடிகிறது. ஏழ்மையும், அதைத் தொடர்ந்த சவால்களும் இருந்தபோதிலும் எனது பெற்றோர்கள் கண்ணியத்தை கைவிடவில்லை, சுயமரியாதையை விட்டுத்தரவில்லை என்பதை உணரலாம். எந்த சவாலையும் எதிர்கொள்ள அவர்கள் கற்றுவைத்திருந்த ஒரே மந்திரம் கடினஉழைப்பு, தொடர் கடினஉழைப்பு.
எனது தந்தை எப்போதும் யாருக்கும் சுமையாக மாறவே இல்லை. எனது தாயாரும் அப்படியே. தனது பணிகளை முடிந்தவரை அவரே செய்துகொள்ள முயற்சிக்கிறார். இப்போதெல்லாம் எனது அன்னையை சந்திக்கும் போது அவர் என்னிடம் “எனக்கு வேறுயாரும் சேவைப்புரிவதை நான் விரும்பவில்லை, எனது உடல் இயக்கங்கள் தடைபடாமல் இருக்கவே விரும்புகிறேன்” கூறுகிறார்.
என் அன்னையின் வாழ்க்கையை காணும் போது அவரது தவ வாழ்க்கை, தியாகங்கள் மற்றும் இந்தியாவின் தாய்மை குணம் ஆகியவற்றை நான் உணர்கிறேன். எப்போதெல்லாம் என் அன்னையையும், கோடிக்கணக்கான அவரைப்போன்ற பெண்மணிகளையும் காணும்போது, இந்திய மகளிரால் ஆகாதது என்று எதுவுமில்லை என்று உணரத்தோன்றுகிறது.
ஒவ்வொரு வறுமைக்கதைக்கு பின்னாலும், ஒரு அன்னையின் அற்புதம் நிறைந்த தியாகம் ஒளிந்திருக்கிறது.
ஒவ்வொரு சவாலுக்கும் பின்னே ஒரு அன்னையின் உறுதியான முடிவு ஒளிந்திருக்கிறது.
அம்மா உங்களுக்கு மிக மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நூறாவது பிறந்தநாளை கொண்டாடும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களைப்பற்றி விரிவாக பொதுவெளியில் எழுதும் துணிச்சல் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை.
அம்மா உங்களது ஆரோக்கியமும், நலனும் சிறந்திருக்க நான் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
எங்களது அனைவருக்கும் உங்களது ஆசிர்வாதங்களை வேண்டி நிற்கிறேன்.
உங்கள் காலடியில் தலைவணங்குகிறேன்.
மீள்பதிவு: செய்திக்கதிர்
Comments
Post a Comment