அன்னதானம் சுப்பையர்... 🔥🙏 *அன்னமிட்ட கை* 👇 *இது ஒரு உண்மைச் சம்பவம்* 👇👇 கொள்ளிடத்து காவிரி வட கரையில இருக்கற அக்ரஹாரம் தான் ஆங்கரை என்கிற ஊர். இது இப்பவும் திருச்சி ஜில்லாவுல லால்குடி சமீபம் இரண்டு மைல் தூரத்தில் பல ஊருக்கு போற வழீல வர ஊர் .

 

அன்னதானம் சுப்பையர்... 🔥🙏

*அன்னமிட்ட கை* 👇 *இது ஒரு உண்மைச் சம்பவம்* 👇👇


கொள்ளிடத்து காவிரி வட கரையில இருக்கற அக்ரஹாரம் தான் ஆங்கரை என்கிற ஊர். 


இது இப்பவும் திருச்சி ஜில்லாவுல லால்குடி சமீபம் இரண்டு மைல் தூரத்தில் பல ஊருக்கு போற வழீல வர ஊர் . 


அங்கே இருக்கிற அக்கிரகாரத்தில அந்த நாள்ல இருநூறு பிராமண  வீடுகள் இருந்தது.


அவாள்ல பெரும் பாலும் ஸ்மார்த்த பிராமண மழ நாட்டுப் பிரஹ சரணமென்னும் வகுப்பைச் சாந்தவா தான்   


அவர்கள் யாவரும் சிவபக்தியுடையவர்கள். தங்கள் தங்களால் இயன்ற அளவு விருந்தினர் களை உபசரித்து உண்பிக்கும் வழக்கம் 

உடையவர்கள் 


பழைய காலத்தில் இவ்வழக்கம் எல்லாச் சாதி யினரிடத்தும் இருந்து வந்தது.


ஏறக்குறைய நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் மேற்கூறிய ஆங்கரையில் சுப்பையரென்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். 


அவருக்கு அந்த ஊரை சுத்தி இரண்டாயிரம் ஏகரா நன்செய்கள் இருந்தன. அவை ஏழு கிராமங்களில் இருந்துதாம். 


அவருடைய குடும்பம் பரம் பரையாகச் செல்வ முள்ளதாக விளங்கிய குடும்பம். அவர் தெய்வபக்தியும், ஏழைகளிடத்தில் அன்பும், தர்ம சிந்தனையும் வாய்ந்தவர்.


அவர் நாள்தோறும் காலையில் ஸ்நாநம் செய்து விட்டுப் பூஜை முதலியவற்றை முடித்துக் கொள்வார்; பிறகு தாம் போசனம் செய்வதற்கு முன் தம் வீட்டுத் திண்ணையில் யாரேனும் அதிதிகள் வந்துள்ளார்களாவென்று பார்க்கிற வழக்கம் வச்சுண்டு இருந்தார் !


திரிசிரபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா முதலிய இடங் களுக்குப் பாத சாரிகளாகச் செல்பவர்களும் அவ்வூர்களிலிருந்து தங்கள் தங்கள் கிராமங்களுக்குச் செல்பவர்களுன வழிப்போக்கர்கள் அவருடைய வீட்டுக்கு வந்து திண்ணையில் தங்குவது உண்டு. 


அவர்களைச் சுப்பையர் உள்ளே அழைத்துப் பசியாற அன்னமிட்டு உபசரிப்பது வழக்கம். அவர் அன்னமிடுவதை அறிந்து பல பாத யாத்ரிகள் எல்லா ஜாதிகளிலும் அவர் வீட்டுக்கு வருவார்கள். 


அவருடைய வீடானது ஒரே சமயத்திற் பலர் இருந்து சாப்பிடும் படி விசாலமாக அமைந்திருந்தது. 


எல்லா வகையினருக்கும் அவரவர்களுக் கேற்ற முறையில் அவர் உணவு சமைச்சு போடுவார் 


பசியென்று எந்த நேரத்தில் யார் வரினும் அவர்கள் பசியை நீக்கும் வரையில் அவரது ஞாபகம் வேறொன் றிலும் செல்லாது.

தம்முடைய வீட்டிற்கு இரவும் பகலும் இங்ஙனம் வந்து போவாரை உபசரித்து அன்ன மிடுவதையே தம்முடைய வாழ்க்கையின் பயனாக அவர் எண்ணினார்


பசிப்பிணி மருத்து வராகி வாழ்ந்து வந்த அவருடைய புகழ் எங்கும் பரவியது. அவரை யாவரும் அன்னதான அய்யரென்றும், அன்னதானம் சுப்பையரென்றும் வழங்கலாயினர்.



சுப்பையர் குடும்பம் மிகவும் பெரியது; அவருடைய சகோதரர்கள், அவர்களுடைய மனைவிமார், பிள்ளைகள், பெண்கள், மரு மக்கள், முதலியோர் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். 


அன்னதானம் செய்யும் பொருட்டு அவர் தனியே சமையற்காரர்களை வைத்துக்கொள்ளவில்லை. 


அவர் வீட்டிலுள்ள பெண்பாலாரே சமையல் செய்வதும் வந்தோரை உபசரித்து அன்ன மிடுவதுமாகிய செயல்களைச் செய்து வந்தனர். 


சிறு பிள்ளைகள் முதற் பெரியவர்கள் வரையில் யாவரும் இலைகளைப் போட்டும், பரி மாறியும், பிற வேலைகளைப் புரிந்தும் தம்முடைய ஆற்றலுக்கேற்ற 

படி உரிய காரியங்களைக் கவனிப்பார்கள். 


அதிதிகளுக்கு உபயோகப் படும் பொருட்டு, அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய்கள் முதலியவற்றை அவ்வப்போது செய்து வைக்கும் வேலையில் அவ்வீட்டுப் பெண்பாலார் ஈடுபட்டிருப்பார்கள். 


அவருடைய வீடு ஒரு சிறந்த அன்ன சத்திரமாகவே இருந்தது. குடும்பத்தினர் யாவரும் தர்மத்திற்காக அன்புடன் உழைக்கும் பணி யாளர்களாக இருந்தனர்.


"இப்படி இருந்தால் எப்படிப் பணம் சேரும்? எப்பொழுதும் இந்த மாதிரியே நடந்து வருவது சாத்தியமா?" என்று யாரேனும் சிலர் சுப்பையரைக் கேட்பார்கள். 


அவர், "பரம் பரையாக, நடந்து வரும் இந்த தர்மத்தைக் காட்டிலும் மேற்பட்ட லாபம் வேறொன்று எனக்கு இல்லை. பசித்து வந்தவர் களுக்கு அன்ன மிடுவதே சிவ ஆராதனமென்று எண்ணுகிறேன். 


தெய்வம் எவ்வளவு காலம் இதை நடத்தும் படி கிருபை பண்ணுகிறதோ அவ்வளவு காலம் நடத்தியே வருவேன். நான் செய்வது கெட்ட காரியமில்லை யென்ற திருப்தியே எனக்குப் போதும்" என்பார்.



இங்ஙனம் அவர் இருந்து வரும் காலத்தில் ஒரு சமயம் மழையின்மை யாலும் ஆறுகளில் ஜலம் போதியளவு வாராமையாலும் நிலங்களில் விளைச்சல் குறைந்தது. 


ஆயினும் அவர் அன்னதானத்தை குறைக்கவில்லை. இப்படி ஒருவர் அன்னமிடு கிறாரென்ற செய்தியை அறிந்த பல ஏழை ஜனங்கள் அங்கங்கே உண்டான விளைச்சற் குறைவினால் ஆதரவு பெறாமல் சுப்பையர் வீட்டிற்கு வந்து உண்டு அவரை வாழ்த்திச் சென்றார்கள். 


இதனால் அக்காலத்தில் வழக்கத்திற்கு மேல் அவர் அன்னதானம் செய்ய நேர்ந்தது. ஆயினும் சுப்பையர் மனங்கலங்க வில்லை. நாயன் மார்களுடைய வரலாற்றை உணர்ந்திருந்த பரமசிவ பக்தராகிய அவர் அந்நாயன் மார்கள் இறைவன் சோதனைக்கு உட்பட்டுப் பின் நன்மை பெற்றதை யறிந்தவராதலின், தம்முடைய நிலங்கள் விளைவு குன்றியது முதலியனவும் அத்தகைய சோதனையே என்றெண்ணினார். 


தர்மம் தலை காக்குமென்ற துணிவினால், எப்பொழுதும் செய்து வரும் சிறப்புக்குக் குறைவில்லாமல் அன்னதானத்தை நடத்தி வந்தார். 


பொருள் முட்டுப் பாடு உண்டான மையால் தம் குடும்பத்துப் பெண்பாலரின் ஆபரணங்களை விற்றும், அடகு வைத்தும் பொருள் பெற்று அன்ன தானத்திற்குப் பயன்படுத்தி வந்தார். 


அதனாற் குடும்பத்தினருக்குசிறிதேனும் வருத்தம் உண்டாக வில்லை; அப் பெண்களோ அந்த நகைகள் ஒரு நல்ல சமயத்தில் பயன்பட்டது கருதி மகிழ்ந்தார்கள். 


அந்தக் குடும்பத்தில் 

உள்ள யாவரும் ஆடம்பரமின்றி யிருந்தார்கள்.

பொருள் முட்டுப் பாடு அவ் வருஷத்தில் நேர்ந்தமையால் அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய 'கிஸ்தி'யை அவராற் செலுத்த முடியவில்லை. 


பெருந்தொகை யொன்றை வரிப் பணமாக அவர் செலுத்த வேண்டி யிருந்தது. அவ்வூர்க் கணக்குப் பிள்ளை, மணியகாரர் ஆகியவர்கள் வரி வசூல் செய்ய முயன்றார்கள். 


சுப்பையர் தம்முடைய நிலைமையை விளக்கினார். அவர்கள் சுப்பைய ருடைய உண்மை நிலையையும் பரோபகார சிந்தையையும் நன்கு அறிந்தவர் களாதலால் அவர் கூறுவது மெய்யென்றே எண்ணினர். 


ஆயினும் மேலதி காரிகளுக்கு எவ்விதம் பதில் சொல்லுவது??

அதனால் சுப்பையரை நோக்கி, "நாங்கள் என்ன செய்வோம்! உடனே வரியை வசூல் செய்ய வேண்டுமென்று எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறதே!" என்றார்கள். 


சுப்பையர், "என்னால் வஞ்சனையில்லை யென்பது உங்களுக்கே தெரியும். நான் வரியைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக மேலதிகாரி களுக்கே தெரிவியுங்கள். அவர்கள் இஷ்டம் போலச் செய்து கொள்ளட்டும். 


அவர்கள் எனது நிலத்தை ஏலம் போடக் கூடும். தெய்வம் எப்படி வழி விடுகிறதோ அப்படியே நடக்கும்; அதுவே எனக்குத் திருப்தி" என்றார்.


சிலர் அவரிடம் வந்து, "இந்தக் கஷ்டகாலத்திற் கூட அன்னதானத்தை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? சிலகாலம் நிறுத்தி வைத்தால் வரியையும் கொடுத்து விடலாம்; உங்களுக்கும் பணம் சேருமே" என்றார்கள். 


அவர், "இந்தக் காலத்தில் அன்னம் போடாவிட்டால் இவ்வளவு நாள் நான் போட்டும் பயன் இல்லை; இப்போதுதான் அவசியம் இந்தத் தர்மத்தைச் செய்துவர வேண்டும். 


நஷ்டமென்பது எல்லோருக்கும் இருப்பதுதானே? பல ஏழைகள் பசியோடு வரும் போது நாம் சும்மா இருப்பதைவிட இறந்துவிடலாம். 


இப்பொழுது கடன்பட்டாவது இந்தத் தர்மத்தைச் செய்து வந்தால் நன்றாக விளையும் காலத்தில் உண்டாகும் லாபத்தினால் ஈடு செய்து கொள்ளலாம். 


இப்பொழுது செய்யாமல் நிறுத்தி விட்டால் அந்த நஷ்டத்திற்கு ஈடு செய்யவே முடியாது" என்றார்.


கணக்குப் பிள்ளையும் மணியகாரரும் நடந்ததைப் பேஷ்காரிடம் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தார்; அவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை; தாசில்தாருக்குத் தெரிவித்தார். 


அவர் மிக்க முடுக்கோடு வந்து பயமுறுத்தினார். சில ஹிம்சைகளும் செய்து பார்த்தார். சுப்பையர் தம்முடைய நிலைமையை எடுத்துச் சொன்னார்; 


எனவே ,தாசில்தார், "இந்த அன்ன தானத்தை நிறுத்திவிட்டுப் பணத்தைக் கட்டும்" என்று சொல்லவே சுப்பையர், "தாங்கள் அதை மட்டும் சொல்லக் கூடாது. எங்கள் பரம்பரைத் தர்மம் இது. இதை நிறுத்தி விடுவதென்பது முடியாத காரியம். என்னுடைய மூச்சு உள்ள வரையில் இதை நிறுத்த மாட்டேன்; எனக்கு என்ன துன்பம் வந்தாலும் வரட்டும்" என்றார்.


தாசில்தார், "இதெல்லாம் வேஷம்! அன்னம் போடுகிறேனென்று ஊரை ஏமாற்றுகிற வழி" என்றார். 


சுப்பையர் மேல் சில காரணங்களால் பொறாமை கொண்ட குமாஸ் தாக்கள் சிலர் தாசில்தாரிடம் அவரைப் பற்றி முன்னமே கோள் கூறி இருந்தனர். 


தாசில்தாரும் கோபக்காரர் 

ஆதலால் சுப்பையருடைய குணத்தை அறிந்து கொள்ளவில்லை.

"உம்மால் பணம் கொடுக்கமுடியா விட்டால் உம்முடைய நிலத்தை ஏலம் போடுவேன்" என்றார் தாசில்தார்.


"அவ்விதம் செய்வது அவசியமென்று உங்களுக்குத் தோன்றினால், தெய்வத்தினுடைய சித்தமும் அதுவாக இருக்குமானால், நான் எப்படி மறுக்கமுடியும்?" என்று சுப்பையர் பணிவாகக் கூறினார்.


தாசில்தார் நிலத்தை ஏலம் போட்டார்; 'இந்த தர்ம தேவதையின் நிலத்தை ஏலம் எடுத்தால் நம் குடும்பமே நாசமாகி விடும்' என்ற எண்ணத்தால் அவ்வூரிலுள்ளோர் அயலூரில் உள்ள எவரும்ஏலம் எடுக்கத் துணிய வில்லை. 


தம் அதிகார மொன்றையே பெரிதாக நினைத்த தாசில்தாருக்கோ கோபம் பொங்கியது; 

மீசை துடித்தது; கண்கள் சிவந்தன. "இந்த மனுஷன் பொல்லாதவன்

என்று தெரிகிறது. இவனுக்குப் பயந்தே ஒருவரும் ஏலம் எடுக்க முன் வரவில்லை. இருக்கட்டும். இவனுக்குத் தக்கபடி ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லித் தாசில் தார் போய்விட்டார். 


சுப்பையரைப் போலவே வேறு பலர் வரி செலுத்த வில்லை. ஆயினும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை சிறிதாதலின் எவ்வாறேனும் வசூல் செய்து விடலாமென்ற தைரியம் தாசில் தாருக்கு இருந்தது. 


சுப்பையர் பெருந் தொகை செலுத்த வேண்டியவராக இருந்தமையின் அவர்மீது தாசில் தாருக்கு இருந்த கோபத்துக்கு அளவில்லை. 


உடனே, பலரிடமிருந்து வரிவசூல் செய்யப் படவில்லை யென்பதையும், அவர்களுள் பெருந் தொகை செலுத்த வேண்டிய சுப்பையர் முயற்சி யொன்றும் செய்யாமல் இருப்பதையும், அவருடைய நிலத்தை ஏலம் எடுக்க ஒருவரும் துணியாததையும் ஜில்லா கலெக்டருக்கு எழுதித் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்று தெரிவித்தார்.


'எல்லாம் பரமசிவத்தின் திருவுள்ளப்படி நடக்கும்' என்ற மனச்சாந்தியோடு சுப்பையர் அன்ன தானத்தைக் குறைவின்றி நடத்திவந்தார்.


தாசில்தாருடைய கடிதத்தைக் கண்ட கலெக்டர் லால் குடிக்கு வந்து 'முகாம்' போட்டார். அவர் ஒரு வெள்ளைக்காரர்; மதியூகி; எதையும் ஆலோசித்துச் செய்பவர்; தர்ம வான்; நியாயத் துக்கு அஞ்சி ஒழுகுபவர்; தமிழ்ப் பயிற்சி உள்ளவர். 


பிறர் தமிழ் பேசுவதைத் தெளிவாக அறிவதோடு தாமே தமிழிற் பேசவும் தெரிந்தவர். அவர் லால்குடிக்கு வந்து தாசில்தாரையும் வரச் செய்து அவரிடம் சுப்பையரைப் பற்றி விசாரித்தார்.

தாசில் தார் தம்முடைய அதிகாரமொன்றும் சுப்பையரிடத்திற் செல்லவில்லை யென்ற கோபத்தினால் அவரைப்பற்றி மிகவும் கடுமை யாகக் குறை கூறினார். 


"அவன் பெரிய ஆஷாட பூதி. இவ்வளவு நிலம் வைத்திருக்கிற வனுக்குப் பணம் இல்லாமலா போகும்? ஏதோ சிலருக்குச் சோற்றைப் போட்டு விட்டு அன்னதான மென்று பேர் உண்டாக்கிக் கொண்டு பணத்தை மறைவாகச் சேகரித்து  வைத்திருக்கிறான் என்று நான் எண்ணுகிறேன். 


தன் வீட்டிலுள்ள நகைகளைக் கூட ஒளித்து வைத்து விட்டான். துரையவர்கள் சிறிதேனும் இரக்கம் காட்டாமல் அந்த மனுஷனைத் தக்கபடி சிக்ஷிக்க வேண்டும்" என்றார்.


தாசில்தாருடைய பேச்சில் கோபம் தலைதூக்கி நிற்பதைக் கலெக்டர் உணர்ந்தார். அவருடைய வார்த்தைகளை அப்படியே நம்புவது அபாயமென்று எண்ணினார். 


ஆதலின், அந்தப் பக்கங்களில் இருந்த வேறு சிலரிடம் சுப்பையரைப் பற்றி இரகசியமாக விசாரித்தார். 


அவ்வந்தண உபகாரியிடம் பொறாமை கொண்ட சிலரை யன்றி மற்றவர் களெல்லாம் அவரைப் பற்றி மிக உயர்வாகச் சொன்னார்கள்; 


அவர் செய்யும் அன்னதானத்தைப் பற்றி உள்ளங் குளிர்ந்து பாராட்டினார்கள். கலெக்டர் துரை எல்லாவற்றையும் கேட்டார்.


ஒருநாள் இரவு சுப்பையர் வழக்கம்போலத் தம்முடைய வீட்டுத் திண்ணையிலே படுத்திருந்தார். பகலிலும் இரவிலும் யாவருக்கும் அன்ன மிட்டபின்பு அக் காலத்தில் யாரேனும் பசியோடு வந்தால் அவர்களுக்கு உதவும் பொருட்டு உணவு வகைகளைத் தனியே வைத்திருக்கச் செய்வது அவருடைய வழக்கம். 


சில சமயங்களில் மழை முதலிய வற்றால் துன்புற்று வழிநடைப் பிரயாணிகள் நள்ளிரவில் வருவார்கள். அவர்களுடைய பசியைப் போக்கு வதற்கு அவ்வுணவு உதவும்.


சுப்பையர் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது நெடுந் தூரத்திலிருந்து, "சாமீ! சாமீ!" என்ற ஒரு சத்தம் கேட்டது. 


அது சுப்பைய்ய ருடைய தூக்கத்தைக் கலைத்தது. அவர் விழித்தெழுந்து சத்தம் கேட்கும் வழியே சென்றார். 


அக்கிரஹாரத்தின் கோடியிலிருந்து யாரோ ஒருவன், "சாமீ! சாமீ!' என்று கத்திக் கொண்டி ருந்தான்.


"யாரப்பா அது? " என்று கேட்டார் சுப்பையர்.


"சாமீ! நான் பக்கத்திலுள்ள ஊர்ப்பறையன், வேறு ஊருக்குப் போய்த் திரும்பி வருகிறேன். 


பசி தாங்க முடியவில்லை. இவ்வளவு தூரம் நடந்து வந்தேன்; 


மேலே அடியெடுத்து வைக்க முடிய வில்லை ” என்றான்.



"அப்படியானால், சற்று நேரம் இங்கே இரு; இதோ வருகிறேன்" என்று சொல்லிச் சுப்பையர் தம் வீட்டுக்கு வந்தார். 


வந்து வெளிக் கதவைத் திறக்கச் செய்து சமையல றையிற் புகுந்தார். அங்கிருந்த கறி, குழம்பு, ரஸம், மோர் முதலியவற்றைத் தனித்தனியே தொன்னைகளிலும் கொட்டாங்கச் சிகளிலும் எடுத்து, அன்னத்தை ஒரு பெரிய மரக்காலில் போட்டு அதன் மேல் கறி முதலியவற்றை வைத்து மேலே இலையொன்றால் மூடினார். 


அப்படியே அதை எடுத்துக்கொண்டு தெருவின் கோடிக்கு வந்து, "இந்தா அப்பா! இந்த மரக்காலில் சாதம், குழம்பு, கறி, ரஸம், எல்லாம் வைத்திருக்கிறேன். அதோ இருக்கிறதே, அந்த வாய்க் காலுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு உன் ஊருக்குப் போ. 


முடியுமானால் மரக் காலை நாளைக்குக் கொண்டுவந்து கொடு; இல்லா விட்டால் நீயே வைத்துக்கொள்" என்று சொல்லி அந்த மரக்காலைக் கீழே வைத்தார்.


பறையன் அதை எடுத்துக்கொண்டு, “சாமீ! உங்களைத் தெய்வம் குறைவி ல்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலை காக்கும்" என்று வாழ்த்தி விட்டுச் சென்றான். 


அவனுடைய பேச்சில் ஒரு விதமான நாக் குழறல் இருந்தது; "பாவம்! பசியினால் பேசக்கூட முடிய வில்லை! நாக்குக் குழறுகிறது! என்று சுப்பையர் எண்ணி இரங்கினார். 


அவன் பசியைத் தீர்க்க நேர்ந்தது குறித்து மகிழ்ந்து வீடு வந்து சேர்ந்தார். லால் குடியில்  'முகாம்' செய்திருந்த கலெக்டர் மேற் சொன்ன நிகழ்ச்சி நடைபெற்றதற்கு மறுநாள் தம்மிடம் வரவேண்டும்

என்றும், தாம் விசாரணை செய்ய வேண்டுமென்றும் சுப்பையருக்கு உத்தரவு முன்பே அனுப்பியிருந்தார். 


விசாரணை நாளன்று சுப்பையர் உரியகாலத்தில் செல்லாமல் நேரம் கழித்துச் சென்றார்.

அவர் கலெக்டர் துரையின் முன் நிறுத்தப்பட்டார். 


நீர்க்காவி ஏறிப் பழுப்பு நிறமா யிருந்த அவர் வஸ்திரம் இடையிடையே தையலை உடையதாயும், சில இடங்களில் முடியப் பட்டும் இருந்தது; அவருடைய உடம்பில் விபூதி விளங்கியது; மார்பில் ருத்திராட்ச மாலை இருந்தது. 


அவர் நேரம் கழித்து வந்ததனாற் கோபம் கொண்டவரைப் போல் இருந்தார் கலெக்டர்.முகத்தில் கோபக்குறிப்பு புலப்பட்டது;


 "இவரா சுப்பையர்?" என்று கேட்டார் துரை.


அருகிலிருந்த தாசில்தார், "ஆமாம்!" என்றார்.


கலெக்டர், " இவ்வளவு ஏழையாக இருப்ப வரையா நீர் பெரிய பணக்காரரென்றும், வரிப்பணம் அதிகமாகத் தர வேண்டுமென்றும் எழுதியிருக்கிறீர்?" என்று கேட்டார்.


தாசில்தார்: இதெல்லாம் வேஷம். இப்படி வந்தால் துரை யவர்கள் மன மிரங்கி வரியை வஜா செய்யக் கூடுமென்ற வஞ்சக எண்ணத்தோடு வந்திருக்கிறார்.


கலெக்டர் அவரைக் கையமர்த்திவிட்டுச் சுப்பையரைப் பார்த்து, "நீரா ஆங்கரைச் சுப்பையர்?" என்று கேட்டார்.


சுப்பையர்: ஆம்.


கலெக்டர்: நீர் ஏன் சரியான காலத்தில் வரவில்லை? சர்க்கார் உத்தரவை அலக்ஷியம் செய்யலாமா?


சுப்பையர்: துரையவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது: காலையில் எழுந்து ஸ்நானம் செய்து, சந்தி ஜபம் , பூஜையை முடித்துக் கொண்டு நான் வருகிறவர்களுக்கு ஆகாரம் செய்விப்பது வழக்கம். 


இன்று அந்த வழக்கப்படியே யாவரும் போஜனம் செய்தபிறகு வந்தேன்.


கலெக்டர்: உம்முடைய வரிப்பணம் அதிகமாகப் பாக்கி இருக்கிறதே, தெரியுமா??


சுப்பையர்: தெரியும், என்மேல் வஞ்சகம் இல்லை; நிலம் சரியானபடி விளையாமையால் வரிப்பணத்தை என்னால் இப்பொழுது செலுத்த முடிய வில்லை.


கலெக்டர்: அன்ன தானம் மட்டும் எப்படிச் செய்கிறீர்?


சுப்பையர்: கிடைக்கும் நெல்லையெல்லாம் வைத்துக்கொண்டு செய்கிறேன். முன்பு அன்னதானம் செய்தது போக மிஞ்சுவதில் வரியைச் செலுத்து வேன். இப்பொழுது அது முடியவில்லை. அன்ன தானத்துக்கே போதாமையால் என் வீட்டு நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கி யிருக்கிறேன்; சிலவற்றை விற்கவும் செய்தேன்.



கலெக்டர்: இவ்வளவு கஷ்டப்பட்டு நீர் அந்த அன்ன தானத்தை ஏன் செய்யவேண்டும்?


சுப்பையர்: அது பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் நடந்து வருகிறது.


கலெக்டர்: அன்னம் போடுவது பகலிலா இரவிலா?


சுப்பையர்: இரண்டு வேளையும் போடுவதுண்டு. பாதசாரிகளாக வருகிறவர்கள் பசியோடு எப்போது வந்தாலும் போடுவது வழக்கம்.


கலெக்டர்: எந்தச் சாதியாருக்குப் போடுவீர்?


சுப்பையர்: பிராம்மணருக்கும் மற்றச் சாதி யாருக்கும் அவரவர்களுக்கு ஏற்ற முறையில் போடுவோம். 

பசித்து வந்தவர்கள் யாரானாலும் அன்னமிடுவேன்.


கலெக்டர்: பறையருக்கும் போடுவதுண்டா?


சுப்பையர்: ஆகா, போடுவதுண்டு, எல்லோரும் சாப்பிட்ட பிறகு போடுவோம்.


கலெக்டர்: இது வரையில் அப்படி எத்தனை தரம் பறையர்களுக்குப் போட்டிருக்கிறீர்?


சுப்பையர்: எனக்கு நினைவில்லை; பலமுறை போட்டதுண்டு.


கலெக்டர்: சமீபத்தில் எப்போது போட்டீர்?


சுப்பையர்: நேற்று கூட ஒரு பறையன் பாதி ராத்திரியில் பசிக்கிறதென்று வந்தான்; சாதம் கொடுத்தேன்.


கலெக்டர்: அப்படியா ! என்ன என்ன கொடுத்தீர்? எல்லாரும் சாப்பிட்டு மிச்சமான சோற்றையா கொடுத்தீர்?


சுப்பையர்: அகாலத்தில் யாராவது வந்தால் உபயோகப்படு மென்று ரசம், குழம்பு முதலிய வற்றிலும் ஓரளவு வைத்திருப்பது வழக்கம். 

ஆதலால் நேற்று வந்தவனுக்கு அன்னம், கறி, குழம்பு, ரஸம், மோர் எல்லாம் கொடுத்தேன்.


கலெக்டர்: இலை போட்டா சாப்பாடு போட்டீர்?


சுப்பையர்: இல்லை; அது வழக்க மில்லை. ஒரு மரக்காலில் அன்னத்தை வைத்து, அதன்மேல் தனித்தனியே தொன்னையிலும் கொட்டாங்கச்சி களிலும் குழம்பு முதலியவற்றை வைத்துக் கொடுத்தேன்.


கலெக்டரோடு வந்திருந்த உத்தியோகஸ்தர்

கள் யாவரும் இவ்வளவு விரிவாகக் கலெக்டர் விசாரணை செய்வதை நோக்கி வியப்புற்றார்கள். 


தாசில்தார், "எல்லாம் பொய்" என்று சொல்லி முணுமுணுத்துக் கொண்டே யிருந்தார்.


கலெக்டர்: உமக்கு அந்தப் பறை யனைத் தெரியுமா?


சுப்பையர்: இருட்டில் இன்னாரென்று தெரியவில்லை.


கலெக்டர்: அவனிடம் கொடுத்த மரக் காலைக் கொண்டு வந்து காட்டுவீரா?


சுப்பையர்: அதை அவன் இன்னும் திருப்பிக் கொடுக்க வில்லை.


கலெக்டர்: அப்படியானால் நீர் அவனுக்கு அன்னம் கொடுத்ததற்குச் சாக்ஷி வேறு என்ன இருக்கிறது?


சுப்பையர்: சாக்ஷி எதற்கு? தெய்வத்துக்குத் தெரியும். அப்படி நான் செய்ததை வேறு யாரிடம் சொல்லிக் கொள்ள வேண்டும்?


கலெக்டர்: அந்த மரக்காலை அவன் திருப்பிக் கொடா விட்டால் என்ன செய்வீர்?


சுப்பையர்: ‘முடியுமானால் கொடு, இல்லா விட்டால் நீயே வைத்துக்கொள்' என்று நானே சொல்லிக் கொடுத்தேன்; அவன் கொடுக்கா விட்டால் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை.


கலெக்டர், "அப்படியா!" என்று சொல்லிக் கொண்டே மேஜை முழுவதையும் தரை வரையில் மறைத்து மூடப்பட்டிருந்த துணியை மெல்லத் தூக்கினார். 


என்ன ஆச்சரியம்! அதன் கீழே ஒரு மரக்கால் வைக்கப் பட்டிருந்தது. "நீர் கொடுத்த மரக்கால் இதுதானா பாரும்!" என்று சொல்லித் துரை அதை எடுத்து மேஜையின்மேல் வைத்தார்.


சுப்பையர் திடுக்கிட்டார்; தம் கண்களையே அவர் நம்ப முடியவில்லை. கண்ணைத் துடைத்துத் துடைத்துப் பார்த்தார். 


தாம் முதல்நாள் பாதிராத்திரியில் ஒரு பறையனிடம் கொடுத்த மரக்கால் அங்கே வந்ததற்குக் காரணம் தெரிய வில்லை. 


அங்கே இருந்த யாவரும் ஒரு நாடகத்தில் மிகச் சுவையான காட்சி யொன்றில் ஈடுபட்டு மெய்ம்மறந்தவர்போல் ஆனார்கள்.


"என்ன, பேசாமல் இருக்கிறீர்! ராத்திரி நீர் செய்த அன்ன தானத்துக்குச் சாக்ஷியில்லை யென்று எண்ண வேண்டாம். 


பாதி ராத்திரியில் வந்த பறையன் நான்தான்! நீர் கொடுத்த மரக்கால் இதுதான்! 


இந்த இரண்டு சாக்ஷியும் போதா விட்டால், என்னுடன் அங்கே வந்த குதிரைக்காரன் வேறு இருக்கிறான். நீர் சொன்ன தெல்லாம் உண்மையே. 


உம்முடைய வீட்டு அன்னத்தையும் கறி முதலியவற்றையும் நான் ருசி பார்த்தேன். *உம்முடைய ஜன்மமே ஜன்மம்" என்றார் கலெக்டர்;* 


அவருடைய கண்களில் நீர் ததும்பியது; உள்ளத்தில் உண்டான உருக்கம் அவர் தொண்டையை அடைத்தது. சிறிது நேரம் அவராற் பேசமுடியவில்லை. 


பிறகு, " *உமக்கு எந்தக் காலத்திலும் குறைவே வராது. தெய்வம் உம்மைக் குறைவில்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலை காக்கும். உமக்காகத் தான் மழை பெய்கிறது"* என்றார்.


அந்த வார்த்தை களின் தொனியில் முதல்நாள் இரவு பறையன், 'தெய்வம் உங்களைக் குறையில்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலைகாக்கும்' என்று சொன்ன வார்த்தைகளின் தொனி ஒலிப்பதை அப்போதுதான் சுப்பையர் உணர்ந்தார்; 


தமிழை புதிதாகக் கற்றுக்கொண்ட வேற்று நாட்டா ராகிய துரையின் பேச்சானது, பசியினால் நாக் குழறிப் பேசு பவனது பேச்சைப் போல ராத்திரியில் தமக்குத் தோன்றி யதென்பதையும் அறிந்தார். 


அவருக்கு இன்னது சொல்வதென்று தோன்றவில்லை.

"அப்படியே அந்த நாற்காலியில் உட்காரும்! 


நீர், வரிப்பணத்தை மோசம் செய்ய மாட்டீரென்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் உம்முடைய மரக்காலை மோசம் செய்யாமல் இதோ கொடுத்துவிட்டேன்; எடுத்துக்கொள்ளும்


உம்முடைய தர்மம் குறைவின்றி நடைபெற இந்த வரிப்பணம் உதவுமானால், அதை விட இந்த ராஜாங்கத்துக்கு வேறு லாபம் இல்லை. 


உம்மால் எப்போது முடியுமோ, அப்போது வரியைக் கட்டலாம்! உம்மை ஒருவரும் நிர்ப் பந்தம் செய்ய மாட்டார். நான் இந்த ஜில்லாவில் இருக்கும் வரையில் உமக்கு ஒரு விதமான துன்பமும் நேராது" என்றார் கலெக்டர். 


பிறகு தாசில்தாரை நோக்கி,"உனது

வார்த்தையை நான் நம்பியிருந்தால் பெரிய பாவம் செய்தவனாவேன். 


இனிமேல் இந்த மாதிரி ஒருவரைப் பற்றியும் தீர விசாரியாமல் நீர் எழுதக்கூடாது" என்று கண்டித்துக் கூறினார்.


மேஜைத் துணி யாகிய திரையை தூக்கியதும், அம்மேஜைக் கடியில் அவ் வந்தண வள்ளலது அன்னதானத்தை அளந்த மரக்கால் இருந்ததும், அதனைத் துரை எடுத்து மேஜையின் மேல் வைத்து மனமுருகிப் பேசிக் கண்களில் நீர் ததும்ப வீற்றிருந்தது ஆகிய அக்காட்சிகளை நம்முடைய அகக் கண்ணால் நோக்கும்போது நமக்கே மயிர் சிலிர்க்குமாயின், அங்கேயிருந்து கண்ணால் பார்த்தவர் களுடைய உள்ளமும் உடலும் எப்படியிருந்தி ருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?


(கும்பகோணம் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதராக இருந்த வித்துவான் ஸ்ரீ சி. தியாகராச செட்டியாரவர்கள், 1833-வருஷம் திருவானைக் காவில், திரு மஞ்சனக் காவேரிக் கரையில், ஆங்கரைச் சுப்பையருடைய பரம்பரையினர் சிலரைக் கண்டு பேசிக் கொண்டி ருந்தாராம். 


அப்போது  உடனிருந்த  செட்டியார், அவர் களைப் பாராட்டி விட்டு இவ் வரலாற்றைக் கூறினார். 


அவர்களும் சொன்னார்கள். மேற்படி சுப்பை யருடைய பெண் வழியிற்றோன்றிய மணக்கால் மகாஸ்ரீ கந்தசாமி ஐயர் என்பவர்களாலும் சமீபத்தில் சில விஷயங்கள் அறிந்து கொண்ட இந்த உண்மைச் சம்பவத்தை இங்கே பகிர்ந்துள்ளேன் !


♻️♻️♻️♻️♻️♻️♻️


Written & Compiled by 

M.S.Ramesh- Salem 

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷