ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், சபரீசனோடு தொடர்புடைய இடங்கள்... இரண்டுக்கும் சேர்த்தேதான் ஏப்ரல் 24-ம் தேதி காலை 6 மணிக்கு ரெய்டு தொடங்கியது. தொடக்கத்தில், 40 இடங்களில் நடந்த ரெய்டு, அடுத்த 48 மணி நேரத்தில் 90 இடங்களாக விரிந்து, கடைசியில் 140 இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இதை ஆளுங்கட்சி வட்டாரங்களே எதிர்பார்க்கவில்லை. சசிகலா தொடர்புடைய இடங்களில் நடந்ததற்குப் பிறகு, இவ்வளவு பெரிய ரெய்டு என்றால், அது இந்த `ஆபரேஷன் SABS’-தான்
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், சபரீசனோடு தொடர்புடைய இடங்கள்... இரண்டுக்கும் சேர்த்தேதான் ஏப்ரல் 24-ம் தேதி காலை 6 மணிக்கு ரெய்டு தொடங்கியது. தொடக்கத்தில், 40 இடங்களில் நடந்த ரெய்டு, அடுத்த 48 மணி நேரத்தில் 90 இடங்களாக விரிந்து, கடைசியில் 140 இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இதை ஆளுங்கட்சி வட்டாரங்களே எதிர்பார்க்கவில்லை. சசிகலா தொடர்புடைய இடங்களில் நடந்ததற்குப் பிறகு, இவ்வளவு பெரிய ரெய்டு என்றால், அது இந்த `ஆபரேஷன் SABS’-தான்.
சென்னை ஹாரிங்டன் சாலையிலுள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு தொடங்கியபோது, நிறுவன உரிமையாளர் பாலாவைத் தொடர்புகொள்ள முயன்றார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத் தேடலுக்குப் பிறகே, அவர் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவரைத் தங்கள் விசாரணை வளையத்துக்குள் எடுத்திருக்கிறார்கள். 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருக்கிறார் ஜி ஸ்கொயர் பாலா. அந்த நிறுவனங்கள் அனைத்தும் வருமான வரித்துறை ரெய்டுக்கு உள்ளாக்கப்பட்டன. இந்த நிறுவனங்களில், சிலவற்றில் அண்ணாநகர் கார்த்திக்கின் மனைவி ஸ்ருதி கார்த்திக்கும், அவரின் தாயார் கீதா மோகனும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அதனால், கார்த்திக்கின் ஈ.சி.ஆர் இல்லம், அவர் தந்தையும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான மோகனின் அண்ணாநகர் இல்லத்திலும் ரெய்டுகள் பரபரத்தன.
நம்மிடம் பேசிய வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர், “யாரெல்லாம் ரெய்டுக்கு உள்ளாக்கப்பட்டார்களோ, அவர்களில் முக்கியமான சிலருக்கு ‘ஷேடோ’ எனப்படும் உளவுப் பார்வையாளர்களையும் முதல்நாள் இரவே நியமித்துவிட்டோம். சபரீசனின் பெரியம்மா மகன் பிரவீன், ஈ.சி.ஆரில் வசிக்கிறார். சபரீசனுக்குப் பலவகைகளில் உதவிவருபவர் இவர்தான். திருச்சியிலிருந்து வந்த டீம், பிரவீன் வீட்டில் ரெய்டு நடத்தச் சென்றது. காலை வாக்கிங் சென்றுவிட்டு, சாலையோரம் டீக்கடையில் டீ அருந்தியபடி நின்றிருந்தார் பிரவீன். எங்கள் ‘ஷேடோ’ அளித்த தகவலின்படி, அவரை டீக்கடையில் வைத்தே மடக்கிய திருச்சி டீம், கையோடு அழைத்துச் சென்று அவர் வீட்டில் ரெய்டைத் தொடங்கியது.ஜி ஸ்கொயரோடு வர்த்தகத்திலிருந்த மைலாப்பூர் கிரானைட் நிறுவனத்திலும், தேனாம்பேட்டை ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்திலுள்ள தரவுகளின்படி, 2017 - 2020 காலகட்டங்களில், ஜி ஸ்கொயர் பெரிதாகத் தொழில் எதுவும் செய்யவில்லை. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களின் தொழில் 2,000 கோடியாக வெகுசில மாதங்களிலேயே உயர்ந்திருக்கிறது. திடீரென இவ்வளவு பெரிய தொழில் வளர்ச்சி ஏற்பட என்ன காரணம்... சமீபத்தில் ‘30,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய சொத்துகளை ஜி ஸ்கொயர் வைத்திருப்பதாக’ சர்ச்சை கிளம்பியது. அது குறித்தும் விசாரிக்கப்பட்டது.
ஜி ஸ்கொயரிடம் நிலம் வாங்கியவர்கள், விற்றவர்களின் இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் தொடர்பாக மட்டுமே 73 இடங்களில் சோதனையிட்டோம். அங்கிருந்து கிடைத்த தரவுகளின்படி, ஏறத்தாழ 1,200 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் சிக்கியிருக்கின்றன. இதற்கான விளக்கங்களையும், வரி செலுத்தியதற்கான ஆவணங்களையும் ஜி ஸ்கொயர் நிறுவனம்தான் தர வேண்டும். அப்படித் தராத பட்சத்தில், வரி ஏய்ப்பு உறுதிசெய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இந்தச் சோதனையில், ஹார்டு டிஸ்க்குகள், லேப்டாப்கள் உட்பட பல ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறதா என்பதையெல்லாம் விசாரித்து வருகிறோம்” என்றனர் விரிவாக.இந்த ரெய்டில், வருமான வரித்துறைக்கு ஜாக்பாட்டாகச் சிக்கியவர் ஆடிட்டர் சண்முகராஜாதான். சபரீசனின் ஆடிட்டரான இவரின் மேற்பார்வையில்தான், பல்வேறு தொழில்களும் பரிவர்த்தனைகளும் நடந்ததாகச் சந்தேகிக்கிறது வருமான வரித்துறை. சென்னை அண்ணாநகரிலுள்ள அவரின் அலுவலகத்தில் ரெய்டு தொடங்கியபோது, சண்முகராஜா பெங்களூரில் இருந்திருக்கிறார். விமான நிலையத்தில் வைத்து அவரை மடக்கியது ‘ஸ்பெஷல் டீம்.’ பின்னர், சென்னையிலுள்ள அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவரிடம் இரண்டு நாள்களுக்கும் மேலாக விசாரித்திருக்கிறார்கள். “சண்முகராஜாமீது சோதனை என்ற தகவல் எட்டியவுடன், லண்டனிலிருந்த சபரீசனுக்கு அலாரம் அடித்துவிட்டது” என்கிறார்கள் மேலிட குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.
ரெய்டுக்குச் சென்றிருந்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “சண்முகராஜாதான் சபரீசனுக்கு ஆல் இன் ஆல். 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, சபரீசனிடம் பணிக்குச் சேர்ந்திருக்கிறார் அவர். சுனில், பிரசாந்த் கிஷோர் டீம்கள் தி.மு.க-வுக்குத் தேர்தல் ஆலோசனைகள் வழங்கியபோது, அவர்களுக்குக் கணக்கு வழக்கு பார்த்திருக்கிறார். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், சண்முகராஜாவின் தொடர்புகளும் அதிகாரமும் உயர்ந்திருக்கின்றன. அரசின் ஒவ்வொரு துறையிலும் திரட்டப்பட்ட ‘பி.எஃப்’-ஐஅவர்தான் நிர்வகித்திருக்கிறார். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில், பல கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றைக் கட்டிவருகிறார் சண்முகராஜா. சமீபத்தில் இரண்டு உயர் ரக கார்களை வாங்கியிருக்கிறார். இதற்கான நிதி எங்கேயிருந்து வந்தது என்பதை விசாரித்தோம்.
முதல்வர் ஸ்டாலின் துபாய்க்குப் பயணம் சென்றிருந்தபோது, அவருக்கு முன்னதாகவே சபரீசனுடன் துபாய்க்குச் சென்று லூலூ நிறுவன அதிபர் யூசுப் அலியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் சண்முகராஜா. இந்தப் பயணத்தில்தான், 3,000 கோடி ரூபாயைத் தமிழகத்தில் முதலீடு செய்வதாக, தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் போட்டது லூலூ. அரசு ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தில், சண்முகராஜாவின் பங்கு என்ன... அந்த 3,000 கோடி ரூபாய் யாருடையது... என்பதையெல்லாம் விசாரித்தோம்.‘பி.எஃப்’ நிர்வாகத்தில் ஆடிட்டர் சண்முகராஜாவுக்கு உறுதுணையாக இருந்தவர், அம்மன் பெயர்கொண்ட பெண்மணி. அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தொடக்கத்தில், ‘நான் யார் தெரியுமா... என்கிட்டயே விசாரிக்குறீங்களா, உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?’ என்றெல்லாம் எகிறினார் அவர். ‘ஒரு கார் வரும். உங்க கட்டைப்பைகளை கார் டிக்கில வெய்யுங்க. மத்ததை நான் பார்த்துக்குறேன்...’ தொழிலதிபர்களிடம் இந்த டயலாக்கைச் சொன்னது யார் மேடம்... என்றோம். சப்த நாடியும் ஒடுங்கிப்போனவர் பின்னர் பல விவகாரங்களைக் கொட்டினார். ஒவ்வொரு மாதமும் துறைவாரியாக வந்த ‘பி.எஃப்’ விவரங்களை புட்டுப் புட்டு வைத்தார்.
‘லண்டன்’ அடைமொழி பிரமுகர் இடங்களிலும் சோதனையிட்டு சில ஆவணங்களை எடுத்திருக்கிறோம். ‘ஈசன்’ பிரமுகர் வீட்டில் நடந்த ரெய்டில், ஐரோப்பிய முதலீட்டு விவரங்கள் சிக்கியிருக்கின்றன. இந்த ரெய்டு இத்துடன் முடியாது. ரெய்டில் கிடைத்த தரவுகள், ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதா என்பதை விசாரித்து வருகிறோம். நாமக்கல்லைச் சேர்ந்த ‘சந்திர’ தொழிலதிபர், மேலிடத்துக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார். அவர் மூலமாகப் பல முதலீடுகள் வெளிநாடுகளில் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அவரையும் விசாரணை வளையத்தில் எடுத்திருக்கிறோம். விரைவிலேயே அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்” என்றனர் விரிவாக.ஐரோப்பிய நாடுகளில் மேலிடப் பிரமுகர் தொழில் தொடங்க, சென்னை ராயப்பேட்டையிலுள்ள இரண்டெழுத்து ஆடிட்டர் நிறுவனம் உதவியதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு ரெய்டு நடத்தியிருக்கிறது வருமான வரித்துறை. வெளிநாடுகளில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ‘பேப்பர் வொர்க்’ செய்து தந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மேலிடப் பிரமுகருக்கு விலையுயர்ந்த வாட்சுகளை வாங்கிக் கொடுத்த பெண் பிரமுகரும் சோதனையில் தப்பவில்லை. அவரும் விசாரிக்கப்பட்டிருக்கிறார். சபரீசன் தொடர்புடைய மயிலாப்பூர் நிறுவனம்தான், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க-வுக்கு வியூகம் வகுத்துத் தருகிறது. அந்த நிறுவனத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இப்படி ‘ஆபரேஷன் SABS’-ல், சபரீசன் தொடர்புடைய 13 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறது வருமான வரித்துறை. அடுத்தகட்டமாக தமிழ் மாதத்தின் பெயர்கொண்டவர், வழக்கறிஞர் ஒருவர், காற்றாலை நிறுவன உரிமையாளர் ஒருவர் என அடுத்தடுத்து சபரீசனுக்கு நெருக்கமானவர்களை நெருங்கத் திட்டமிட்டிருக்கிறது வருமான வரித்துறை. திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் அடுத்தகட்ட ‘ஷோ’ இருக்கலாம் என்கிறார்கள் ஆயக்கர் பவன் வட்டாரத்தில்.
இந்த ரெய்டுகள் முதல்வரின் குடும்பத்துக்குள்ளும், அமைச்சர்களிடமும் பெருத்த சலசலப்புகளை உருவாக்கியிருக்கின்றன. ஏப்ரல் 21-ம் தேதியே ‘ரெய்டு வரப்போகிறது’ என்கிற தகவல் ‘லீக்’ ஆகி, அறிவாலயத்தை அனலாக்கியிருக்கிறது. வட மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.பி ஒருவர் குறிவைக்கப்படுகிறார் என்கிற தகவலால் பதற்றம் ஏற்பட்டது நிஜம். உடனே மேலிடக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அமைச்சர்களும் உஷாரானார்கள். ஜி ஸ்கொயரும் உஷாரானது. அப்படி இருந்தும்கூட, 1,200 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்புக்கான முகாந்திரங்கள் இந்த ரெய்டில் சிக்கியிருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
“அப்போதே கண்டிக்காததால்... இப்போது அவதிப்படுகிறோம்!”
மிக மூத்த அமைச்சர் ஒருவர், சமீபத்தில்தான் வளைகுடா பயணத்தை முடித்துக்கொண்டு வந்தார். ரெய்டு தடதடக்கவும், தன்னுடைய விசுவாசிகளிடம் “உஷாரா இருங்கய்யா. இங்கேயும் வந்துடப் போறாங்க. எல்லாமே லிக்விட்ல டீல் பண்றோம்” என்று உஷார்படுத்தியிருக்கிறார். ‘ஷாக்’ அமைச்சர் தரப்பிலும், ‘ஷாக்’ மனநிலைதான். அவர்கள் அமலாக்கத்துறை வசம் சிக்கியிருப்பதால், அடுத்த பட்டாசு நமக்குத்தான் என வெளிறிப் போயிருக்கிறார்கள். பல அமைச்சர்களிடம், ‘அவங்கதானே வாங்கினாங்க... மாட்டட்டும்’ என்கிற சந்தோஷ மனநிலையும் நிலவுகிறது.
நம்மிடம் பேசிய அறிவாலயத்தின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “முதல்வர் ரொம்பவே மனமொடிந்து போய்விட்டார். அவருடைய பிறந்தநாளில் தேசியத் தலைவர்களையெல்லாம் அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தினோம். ‘சமூகநீதி’ தலைப்பில், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக 20 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டமும் நடத்தினோம். அடுத்ததாக, தலைவர் கலைஞர் பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாக முன்னெடுக்க விருக்கிறோம். தேசிய அளவில் தலைவர்களெல்லாம் கலந்துகொள்ள விருக்கிறார்கள். ஒரு ‘கிங் மேக்கராக’ உருவாகும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் முதல்வர். அந்தத் திட்டங்களுக்கு வேட்டுவைக்கும் விதமாக இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தவறுகள் திமுக-வோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. அந்த வகையில் தி.மு.க எனும் பேரியக்கத்தின் நற்பெயர், ஜி ஸ்கொயரால் கெடுவதை எப்படி அனுமதிக்க முடியும்?
தொடக்கத்திலேயே, முதல்வர் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை விரும்பவில்லை. ஆட்சிக்கு வந்த புதிதில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடந்த ஒரு மருத்துவ முகாமுக்கு ஜி ஸ்கொயர்தான் ஸ்பான்சர் செய்தது. அப்போதே அதைக் கண்டித்தார் முதல்வர். ஆனால், குடும்பப் பிரமுகர்கள் யாரும் அவர் பேச்சைக் கேட்கவில்லை. தன் பேச்சைக் கேட்காதவர்களை அப்போதே ஓரங்கட்டியிருக்க வேண்டும். அதைச் செய்யாததால்தான் இப்போது அவதிப்படுகிறோம்” என்றனர்.
‘ஜி ஸ்கொயருக்கும் சபரீசனுக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என சபரீசனுக்கு நெருக்கமானவர்கள், அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஆவணங்களைக் காட்டி வாதாடுகிறார்கள். ஆனால், ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலாவின் பிற நிறுவனங்களில் தி.மு.க எம்.எல்.ஏ மோகனின் குடும்பத்துக்கு இருக்கும் பங்கு குறித்த கேள்விக்கும், இரண்டாண்டுகளில் ஜி ஸ்கொயர் எப்படி இவ்வளவு அபரிமிதமாக வளர்ந்தது என்கிற கேள்விக்கும் அவர்களிடம் பதிலில்லை. இந்த ரெய்டுகளுக்கும், தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததுபோல தி.மு.க காட்டிக்கொள்கிறது. ஆனால், அடியாழத்தில் இரண்டுக்குமான வேர்கள் ஊடாடியிருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாகக் கண்சிமிட்டுகிறார்கள் வருமான வரித்துறையினர். ஆபரேஷன் SABS இன்னும் என்னென்ன புயல்களைக் கிளப்புமோ?!
Comments
Post a Comment