இந்த கதையை புரிந்தவர்கள் பிஸ்தா. 👇 தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன், மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதை தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கி செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம்
இந்த கதையை புரிந்தவர்கள் பிஸ்தா. 👇
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன், மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதை தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கி செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம்,
“மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது. உனக்கு ஒரு கதை சொல்கிறேன்...கேள்.
முன்னொரு காலத்தில் மதராசபுரி எனும் குறுநிலத்தை ஜெயபிரதா என்கிற அரசி ஆண்டு வந்தாள். அவள் ஒரு கொள்ளைக்காரி என்றாலும் கூட, அவளின் எதிரியான கருநாகராஜன் மிகுந்த ஆபத்து கொண்ட மிகப்பெரிய தீய சக்தி என்பதால், மக்கள் இவளையே வேறு வழியில்லாமல் ஆதரித்து அவளுக்கு அரசாட்சி கொடுத்தனர். மிகுந்த தைரியசாலியாக பார்க்கப்பட்ட அவள், பள்ளிக்கூடமே போகாத தன் தோழியான சசிமாலா என்ற பெண்ணுக்கு அடங்கி தான் இருந்தாள். நாட்டு நிர்வாகத்தையே சசிமாலா குடும்பத்தினர் கையில் வைத்து இருக்கும் அளவுக்கு அவர்கள் அதிகாரம் தூள் பறந்தது.
செந்தூர் பாலன் என்பவன் மெல்ல மெல்ல வளர்ந்து சசிமாலாவின் நம்பிக்கையை பெற்றான். அவன் காட்டிய வசூலும் விசுவாசமும் ஜெயபிரதாவையும் சசிமாலாவையும் ஈர்த்துவிட, செந்தூர் பாலன் அரண்மனையில் அமைச்சர் ஆக்கப்பட்டான். அவனுடைய போர் வியூகம், வசூல், நம்பிக்கை, விசுவாசம், பணிவு ஜெயப்பிரதாவையே ஆச்சர்யப்படுத்தியது.
இது ஒருபுறம் இருக்க, அவளின் எதிரியான கருநாகராஜன் வயது மூப்பால் சற்று செயல் இழக்க, அந்த இயக்கத்தின் செயல் தலைவனாக ஆக்கப்பட்டான் கருநாகராஜனின் மகனான சுடலையாண்டி.
இப்படி இருக்கையில், அரண்மனையில் வேலை வாங்கி தருவதாக பலரிடமும் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றினான் செந்தூர் பாலன்.
சுடலையாண்டி இந்த விவகாரத்தை மத்திய பேரரசிடம் எடுத்து சென்றான். செந்தூர் பாலனின் அயோக்கியத்தனத்தை, திருட்டுத்தனத்தை, மக்களிடம் எடுத்து சொன்னான். செந்தூர் பாலனை விசாரித்து கைது செய்ய வேண்டும் என்று பெரிய போராட்டம் நடத்தினான்.
விவகாரம் விஸ்வரூபம் அடைவதை உணர்ந்த ஜெயப்பிரதா, செந்தூர் பாலனை அரண்மனையில் இருந்தே விரட்டி அடித்து விட்டாள். இருந்தாலும், சுடலையாண்டி விடுவதாக இல்லை. தான் ஆட்சிக்கு வந்தால் செந்தூர் பாலனை கைது செய்து விசாரித்து தண்டனை வாங்கி தருவேன் என்று மக்களிடம் வாக்குறுதி கொடுத்தான்.
இவ்வாறு இருக்க, எப்படி செத்தோம் என்று தெரியாமலே ஜெயபிரதாவும், வயது மூப்பால் எதிரியான கருநாகராஜனும் இறந்து போக மதராசபுரியில் அரசியல் குழப்பம் மேலோங்க தொடங்கியது.
ஒருவாறாக, சசிமாலாவின் தயவால், எட்டுப்பட்டி மலைசாமி அரசனாக ஆக்கப்பட்டான்.
சுடலையாண்டிக்கு எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று தணியாத ஆசை. தனக்கு அவ்வளவாக அறிவில்லாத காரணத்தால், இது சம்மந்தமாக வியூகங்களை வகுக்க, பிரசாந்தர் என்பவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டான். பிரசாந்தரின் வியூக திறமையை அறிந்த சுடலையாண்டி தான் கொள்ளையடித்து வைத்திருந்ததில் ஒரு பெரிய பங்கை காணிக்கையாக கொடுத்து அவனுடைய ஆலோசனையை பெற தொடங்கினான். எப்படியாவது ஆட்சியை பிடித்து விட்டால், அடுத்த கணத்தில் இருந்தே கொள்ளையடிக்க ஆரம்பிக்க வேண்டும் என்பது அவன் கணக்கு.
பிரசாந்தரின் வியூக துணையுடன், மக்களிடம் பற்பல ஆசை வார்த்தைகளை காட்டி ஒருவழியாக ஆட்சியை பிடித்தான் சுடலையாண்டி.
அரண்மனையில் இருந்து விரட்டப்பட்ட செந்தூர் பாலன் ஒருகட்டத்தில் சுடலையாண்டிக்கு நெருக்கமானான். ஜெயப்பிரதாவிடம் காட்டிய அத்தனை வித்தைகளையும் சுடலையாண்டியிடம் காட்ட தொடங்கினான் செந்தூர் பாலன்.
செந்தூர் பாலனின் போர்திறமை, வியூகம், கொள்ளை வசூல், விசுவாசம், பணிவு இதெல்லாம் சுடலையாண்டிக்கு பிடித்து போனதால் செந்தூர் பாலனுக்கே பல முக்கிய பொறுப்புகளை கொடுத்து நெருக்கமாக்கி கொண்டான். இது அந்த இயக்கத்தின் மூத்த திருடர்களுக்கு எரிச்சலையும் மனக்குமுறலையும் கொடுத்தது. நேராகவே மன்னன் சுடலையாண்டியிடம் இது பற்றி கேட்டதுக்கு, சுடலையாண்டி அவர்கள் பேச்சை பொருட்படுத்தவில்லை.
அன்று சுடலையாண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்திய பேரரசின் பெரும்படை செந்தூர் பாலனை விசாரிக்க மதராசபுரிக்கு வந்தது.
அப்போது புகார் கொடுத்த சுடலயாண்டி இப்போது புகாரை விசாரிக்க கடும் எதிர்ப்பு.
அப்போது செந்தூர் பாலனை காக்க நினைத்த எட்டுப்பட்டி மலைச்சாமி, விசாரணைக்கு இப்போது ஆதரவு.
விக்ரமா! இப்போது சொல் யார் குற்றவாளி?
செந்தூர் பாலன் என்ற பகல் கொள்ளைக்காரனை வளர்த்து விட்ட ஜெயப்பிதாவா?
செந்தூர் பாலன் மீதான குற்றத்தை கண்டும் காணாமல் ஒதுங்கிய எட்டுப்பட்டி மலைச்சாமியா?
செந்தூர் பாலன் மீது புகார் கொடுத்து அவனை கைது செய்ய வேண்டும் என்று பெரிய பெரிய ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்து விட்டு, இப்போது நெருக்கமாகி, தனக்காக பெரும் வசூல் வேட்டை திலகமாக மாறி விட்ட காரணத்தினால், இப்போது மத்திய பேரரசிடம் மல்லுக்கட்டும் மன்னன் சுடலையாண்டியா?
200 வெள்ளி பணம் பெற்றுக் கொண்டு எப்போதும் சுடலையாண்டியை வாழ்த்து பாடும் கூட்டமா?
புகாரை பல வருடம் தாமதமாக்கி தற்போது விசாரிக்க வரும் மத்திய பேரரசா?
யார் குற்றவாளி?
சரியான பதிலை கூறாவிட்டால், உன் தலை சுக்கு நூறாக வெடித்து சிதறும்"
- என்று வேதாளம் கேட்டது.
பதில் சொல்ல தொடங்கினான் விக்கிரமாதித்தன்.
" வேதாளமே! செந்தூர் பாலனின் திருட்டுத்தனத்துக்கு அப்போதே அரண்மனையை விட்டு துரத்திவிட்டாள் ஜெயப்பிரதா. ஆதலால் அவள் மீது குற்றம் சொல்ல பெரிதாக இல்லை.
செந்தூர் பாலன் மீதான புகாரை எட்டுப்பட்டி கண்டு கொள்ளவில்லை என்றாலும் செந்தூர் பாலனால் அவர் பலனடையவில்லை. ஆதலால் அவர் மீதும் பெரிய குற்றம் இல்லை.
ஏதாவது செய்தாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கமுடைய சுடலையாண்டிக்கு, அவன் நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என மாறி மாறி பேசி கோமாளித்தனம் செய்வதில் ஆச்சரியம் இல்லை. அவன் செய்கையில் வியப்பில்லை என்பதால், அவன் குற்றமும் பெரிதில்லை.
சுடலையாண்டி தும்மினாலே கூட அதிரடி, சரவெடி என ஆர்ப்பரிக்கும் 200 வெள்ளி கூலிப்பட்டாளத்தையும் குறை சொல்ல ஏதும் இல்லை. அவர்கள் இயல்பு அப்படி.
எந்த வழக்கையும் வருடக்கணக்கில் விசாரித்து, நடவடிக்கை எடுப்பதிலே கால தாமதம் என்பது மத்திய பேரரசின் வாடிக்கை தான் என்பதால், அதில் என்ன புதிது? அதில் குற்றம் சொல்ல புதிதாக ஏதும் இல்லை.
செந்தூர் பாலன் போன்ற அயோக்கியர்களையும் திருடர்களையும் தெரிந்தே அவர்களை தேர்ந்தெடுக்கும் அந்த பகுதி மக்கள் தான் பெரும் குற்றவாளி."
விக்ரமாதித்தனின் இந்த பதிலால் திருப்தி அடைந்த வேதாளம், அவனை விட்டு விலகி மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.
Comments
Post a Comment