இந்து மதம் - பல கிளைகளாக எவராலும் தோற்றுவிக்கப் படாமல் - என்று தோன்றியது என்றே தெரியாத - ஸநாதனமாக இருந்து - பிற்காலத்தில் ஒரு வாழ்வியல் நெறியின் அடையாளத்துக்காக "ஹிந்து" என்று குறிப்பிடப்பட்டது! ராஜராஜனும் ஹிந்துதான்! ராமானுஜரும் ஹிந்துதான்! அருணகிரிநாதரும் ஹிந்துதான்! அபிராம பட்டரும் ஹிந்துதான்! ஆண்டாளும் ஹிந்துதான்!

 


ஏசு  கிறிஸ்து காலத்தில் - ரோமன் கத்தோலிக், ப்ரொடெஸ்டென்ட், பெந்தகோஸ்தே, செவந்த் டே அட்வென்டிஸ்ட் இதெல்லாம் இருந்ததா? 


பின்னாளில் பிரிவுகள் தோன்றினாலும் இவற்றில் எந்த மார்க்கத்தைப் பின்பற்றினாலும் - "கிறிஸ்தவர்கள்" - என்றுதானே குறிப்பிடுகிறோம். அந்த மதம் சார்ந்த வாழ்வியலை "கிறிஸ்டியானிடி" என்றுதானே கூறுகிறோம்!


நபிகள் காலத்தில் - ஷியா, சன்னி, அகமதியா, ஷேக் இதெல்லாம் இருந்ததா? 


ஆனாலும் ஒட்டுமொத்தமாக இவற்றில் ஏதோ ஒருவழியில் நிற்பவர்களை "இஸ்லாமியர்" என்றும் அந்த மார்க்கத்தை "இஸ்லாம்" என்றும்தானே குறிப்பிடுகிறோம். 


புத்தர் காலத்துக்குப் பின் - பௌத்தம் இரு கிளைகளாகப் பிரிந்து 'ஹீனயானம்' - 'மஹாயானம்' என்று ஆனபோதும் அவர்கள் பௌத்தர்கள்தானே? 


என்ன வித்தியாசம் என்றால் - அந்த மதங்கள் ஒருவரால் நிறுவப்பட்டன. தோற்றுவிக்கப் பட்டன. தோற்றுவிப்பாளரின் காலத்துக்குப் பிறகு கிளைகள் பிரிந்தன.  


இங்கே ஹிந்து மதம் என்ற பெயரால் ஒன்று எந்த ஒரு தனி மகானாலும், அவதார புருஷராலும் தோற்றுவிக்கப்படவில்லை! 


அது என்று பிறந்தது என்ற காலமே அறிய முடியாதபடி - "ஸநாதன"- தர்மமாக இருந்தது! सनातन - என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு "பழழையுள்ள"- "முன் காலத்திய"- "எப்போதுமுள்ள" - "சாஸ்வதமான"- என்று பொருள்கள் உண்டு! 


அதன் தொடக்கம் தெரியாது! 


அந்த தர்மம் இந்த பாரத மண்ணில் 6 வகையான வழிபாட்டு முறைகளாகப் பிரிந்து நின்றது! 


1) சைவம் (சிவ வழிபாடு)

2) வைஷ்ணவம் (விஷ்ணு வழிபாடு) 

3) சௌரம் (சூரிய வழிபாடு) 

4) கௌமாரம் (குமர - முருக வழிபாடு) 

5) காணபத்யம் (கணபதியை மூல முதல்வனாக வழிபடுதல்) 

6) சாக்தம் (சக்தியை - பெண்ரூபமாக தேவி வழிபாடு) 


இவை ஆறு பெருங்கிளைகளாக - எப்போதோ தோன்றியவையாக - எவராலும் "நிறுவப்படாததாக"- "அவரவர் இறையவர் குறைவிலர்"- என்ற ஆழ்வார் பாசுரம் கூறுகிறதே அதற்கேற்ப... 


வழி வழியாகப் பின்பற்றப் பட்டன! பல்வேறு சமயங்களில், இடைப்பட்ட காலங்களில் இவற்றுக்கிடையே கருத்தியல்ரீதியான, கொள்கைப் பரப்பியல்ரீதியான, புரிதல் - விளக்குதல் (அவகமனம் - வ்யாக்யானம்) போன்ற முனைகளில் மோதல்களும் நடந்தது உண்மை!  


ஆதி சங்கரர் இந்த ஆறு மதங்களையும் இணைத்தார். 


"மதம்"- என்றாலே (मतम्) - என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கே - எண்ணம், கருத்து, நம்பிக்கை, கொள்கை, முடிவு, அறிவு - என்றெல்லாம் பொருள்கள் உண்டு. 


சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் சிறப்பே அவற்றில் ஒரே சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருப்பதுதான் - தமிழிலும் இப்படி ஒரு பொருட் பன்மொழி உண்டு! 


"இது எனது கருத்து"- "இது எனது முடிவு"- "இது எனது கொள்கை"- அவ்வளவுதான்! 


இதைத்தான் நீயும் பின்பற்ற வேண்டும் - என்று வற்புறுத்தவில்லை! 


இதைப் பின்பற்றாதவன் எல்லாம் - "வேறு மனிதர்கள்"- "காஃபிர்கள்"- என்றெல்லாம் அடையாளப்படுத்தவில்லை. 


ஆஸ்திகம் - நாஸ்திகம் இரண்டுமே கூட 'கடவுள் உண்டு - இல்லை' என்ற பிரச்னையாக சநாதன தர்மம் பார்க்கவில்லை! 


எப்படி மதம் என்பதை - "இது எனது கருத்து/ கொள்கை/ முடிவு (CONVICTION) என்ற அளவில் நிறுத்திக் கொண்டதோ - அதேபோல் அதை வெளிக்காட்டுவதை - அதாவது நான் கண்டதை உனக்குச் சொல்கிறேன் என்ற அடிப்படையில் - "தரிசனம்"- என்று சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டது! 


எனது கருத்து இது - மதம்! 

எனது வெளிப்பாடு இது - நான் கண்டதைக் கூறுவது - தரிசனம்! 


இந்தப் பிரபஞ்ச நியதிகளை - கிரஹங்கள் முதல் ஜீவராசிகள் வரை இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை - வேதத்தை பிரமாணமாக - அத்தாட்சியாக வைத்து விளக்குவது - "ஆஸ்திக தரிசனம்".  


அதனால்தான் வேதத்தின் ஓர் அங்கமாக "ஜோசியம்" விளங்குகிறது! கிரஹ சஞ்சார நிலைகளை விளக்குகிறது.


அப்படி வேதத்தை பிரமாணமாகக் கொள்ளாமல் இந்த வாழ்வியலை விளக்குவதை "நாஸ்திக தரிசனம்" என்று வரையறுத்தார்கள். 


அதனால்தான் ஹிந்து இளவரசன் சித்தார்த்தன் - போதி மரத்தடியில் ஞானம் பெற்று - கௌதம புத்தனாக ஆன போது - அவர் தோற்றுவித்த "பௌத்தம்"- நாஸ்திக தரிசனம் ஆயிற்று! 


அவ்வளவு ஏன்? அப்படிக் கிளை பிரியாமல் ஸநாதன தர்மத்துக்கு உள்ளேயே இருந்தபடி - வேதத்தை நான் ப்ரமாணமாக ஏற்க மாட்டேன் - என்று கூறிய சார்வாக மகரிஷி போன்றோர் நாஸ்திக தர்மிகள் என்றே அறியப்பட்டனர்! 


எனவே ஸநாதன தர்மத்தில் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு! அது யாரையும் கட்டுப்படுத்தாது - ஒதுக்காது - என்னைப் பின் தொடராவிட்டால் நீ "வேற்றாள்" ஆகி விடுவாய் என்று எச்சரிக்கை செய்யாது - எவரையும் அந்நியப்படுத்தாது! 


இப்படிப்பட்ட ஸநாதனம் - அதாவது வாழ்வியல் முறை -வேற்றுநாட்டு மதக் கருத்துக்கள் உட்புகுந்தவுடன் - ஒரு அடையாளத்துக்கு உட்படுத்தப்பட்டு - அதுவும் அந்நியரால் - "ஹிந்து"- என்று குறிப்பிடப்பட்டது! 


ஜெர்ஸி பசு வந்த பிறகுதான் இது "நாட்டு மாடு" என்றாயிற்று. அதற்கு முன்பு அது மாடுதான்! 


பிராய்லர் கோழி வந்த பிறகுதான் - "நாட்டுக் கோழி"- என்று குறிப்பிட வேண்டி வந்தது - அதற்கு முன் அது கோழிதான்! 


எனவே சைவ, வைணவ, சாக்த, கௌமார, காணபத்ய, சௌர...என்ற எந்த வழிபாடானாலும் அவை - வந்து சேர்ந்த பெருங்கடல் - ஹிந்து மஹா சமுத்திரமே! 


இதர மதங்கள் ஒரு அவதார புருஷரால் தோற்றுவிக்கப்பட்டன - அவர்கள் காலத்துக்குப் பிறகு கிளைவிட்டன! 


இந்து மதம் - பல கிளைகளாக எவராலும் தோற்றுவிக்கப் படாமல் - என்று தோன்றியது என்றே தெரியாத - ஸநாதனமாக இருந்து - பிற்காலத்தில் ஒரு வாழ்வியல் நெறியின் அடையாளத்துக்காக "ஹிந்து" என்று குறிப்பிடப்பட்டது! 


ராஜராஜனும் ஹிந்துதான்! 

ராமானுஜரும் ஹிந்துதான்! 

அருணகிரிநாதரும் ஹிந்துதான்! 

அபிராம பட்டரும் ஹிந்துதான்! 

ஆண்டாளும் ஹிந்துதான்!

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது