ஒரு ஹிந்திக்காரிய தான் லவ் பண்ணனும் என்கிற ஆசை இருந்தது. "ஸாகர்" என்கிற படம் சிறு வயதில் பார்த்தது. அதில் டிம்பிள்கபாடியா மிக அழகா இருப்பார். "டிம்பிள்" போன்ற ஒரு பெண்ணை லவ் பண்ணி யூக்கலிப்டஸ் மரங்களுக்கிடையே ஓடனும் . அவ வெள்ளை சல்வார் போட்டிருக்கனும். ஏய் நீ ரொம்ப அழகா இருக்க...என்று கமல் போல சொல்லனும்.
ஒரு ஹிந்திக்காரிய தான் லவ் பண்ணனும் என்கிற ஆசை இருந்தது.
"ஸாகர்" என்கிற படம் சிறு வயதில் பார்த்தது. அதில் டிம்பிள்கபாடியா மிக அழகா இருப்பார்.
"டிம்பிள்" போன்ற ஒரு பெண்ணை லவ் பண்ணி யூக்கலிப்டஸ் மரங்களுக்கிடையே ஓடனும் . அவ வெள்ளை சல்வார் போட்டிருக்கனும்.
ஏய் நீ ரொம்ப அழகா இருக்க...என்று கமல் போல சொல்லனும்.
இந்த கனவு நாடி நரம்பெல்லாம் இருந்தது.
ஆனால்
ஹிந்தி பேசும் காதலி கிடைப்பது கடினமாய் இருந்தது.
முகநூல், வாட்ஸ் ஆப் அற்ற கற்காலம்.
ஒரு நாள் ஞாயிறு், ரயில்வேகாலனியில் ரெண்டு சந்து தள்ளி இருந்த என் அக்காவின் தோழி உஷா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன்.
தூர்தர்சனில் மகாபாரதம் ஓடிக்கொண்டு இருந்தது. வீட்டில் அந்நியமாய் ஒரு பெண் இருந்தாள். தமிழ் நிறத்தில் மாநிறமாய் சல்வார் போட்டு இரண்டு காலையும் பின் புறம் மடக்கி இரட்டை சடையுடன் இருந்தாள். அவள் என்னை கேள்வி குறியாய் பார்க்க
" அவன் என் தம்பிடி" என்றபடியே வந்தார் உஷா அக்கா.
"உங்க அப்பா ஸ்கூல்ல தான் இவனும் படிக்குறான்."
அந்த மாநிற இரட்டை சடைக்கு என்னை அறிமுகம் செய்தார்.
"இவ அப்பா உங்க ஸ்கூல் சார் தான்டா"
"சாரா? அவர் பேரு?
"நாகராஜன் பிடி சார் "என்றாள் அந்த இரட்டை சடை.
"ஆமாம் தண்ணி வண்டி நாகராஜன்" என உளறி விட்டேன்.
அவர் எப்போதும் போதையில் இருப்பவர் என்பதால் பள்ளியில் அவர் பெயர் அது தான்.
சொல்லி இருக்க கூடாதாே என தோன்றியது. அவள் என் மீதிருந்த கண்ணை டிவிக்கு கொண்டு சென்றுவிட்டாள்.
மனசு கனமானது.
அடுத்த ஞாயிறு மீண்டும் உஷாஅக்கா வீடு. எதிர்பார்த்து போல அவளும் வந்திருந்தாள். நீ எங்க படிக்குற jk matriculation.
என்ன ஸ்டேண்டர்ட்.
டென்த்.
நானும் டென்த் தான்.
தெரியும் உஷா அக்கா சொன்னாங்க.
உன் பேர். ?
ஏன். ?
கூப்பிட தான்.
ஒரு செகண்ட் கண்ணை மூடி யோசித்து பின் சொன்னாள் .
சுதா .
பின் நிறைய பேசினேன். கேட்டுக்கொண்டே இருந்தாள். ஆனால் அளந்து பேசினாள்.
அடுத்தவாரம் வருவியா .
ஏன் கேட்குற.
சொல்லாட்டி போ.
தெரியல. வந்தா வருவேன்.
சரி கிளம்புறேன்.
ஞாயிற்று கிழமை மட்டும் போகாமல் வாரத்திற்கு மூன்று முறை உஷா அக்கா வீட்டிற்க்கு சென்று இயல்பாக்கி கொண்டேன்.
சில ஞாயிறுகள்
பேச்சுகளில் கரைந்தன. சுதாவுடன் பேசுவது மிகுந்த சந்தோசமாய் இருந்தது.
இப்படியே போக
ஒரு ஞாயிறு. நான் சற்று தாமதமாக செல்ல, அவள் உஷா அக்கா வீட்டை விட்டு வெளியே கிளம்பி இருந்தாள்.
கிளம்பியாச்சா ?
ம்.
சற்று ஏமாற்றமானது.
செந்தில்!
பார்வையால் என்ன என்று வினவினேன்.
நான் இது வரை ரயில் தண்டவாளத்துல நடந்ததே இல்ல. அதுல நடந்து பார்க்கனும்னு ஆசையா இருக்கு. கூட வர்ரியா?
மனசு கம்பீரமானது .
நாங்கள் வசித்தது ரயில்வே காலனி .வீட்டிற்கு எதிரே மூன்று தண்டவாளங்கள் செல்லும். தண்டவாளத்தின் மேல் ஏறி கீழே விழாமல் நடப்பது மிகப்பெரிய சாகச செயல்.
அழைத்து சென்றேன்.
செருப்பை கழட்டி வெறுங்காலில் ஏறி பார்த்தாள்.ஏதோ ஒரு கடற்பயணம் செய்கின்ற சாகசம் அவள் முகத்தில் தென் பட்டது.
இப்ப ரயில் வராதா?
"வராது. வந்தா கைகாட்டி போட்டிருப்பாங்க" என்றேன்.
செருப்புடன் நடந்து பார்த்தாள். நான் நடந்து காண்பித்தேன் .
இரண்டுகையையும் விரிச்சுக்கோ.
சிறிது தூரம் நடந்து தடுமாறினாள். அவள் ஒரு தண்டவாளமும் நான் ஒரு தண்டவாளமும் நடந்தோம்.
அவள் மீண்டும் தடுமாற ,
'என் கையை பிடிச்சுக்கோ " என்றதும் ஆர்வமாய் கையை பிடித்தாள். மெதுவாக கவனமாய் நடந்தோம்.
மனதில் இருந்த வெள்ளை நிற நடிகைகள் பின்னங்கால் பிடரியில் பட ரிவர்ஸ் எடுத்தனர்.
ஹிந்தியை போராட்டம் இன்றி வெளியேற்றினேன்.
ஜங்சன் நெருங்கியது. 'போதும் திரும்பலாம். அங்க என் அப்பா இருப்பாரு."
ரயில்வே காலனியை நெருங்கும் சமயம் எங்கள் கைகள் அனிச்சையாய் விலகின.
விலகினோம்.
அந்த புதன் கிழமை பள்ளிக்கு விடுமுறையானது. தண்ணி வண்டி நாகராஜன் இறந்து விட்டார்.
அடுத்தடுத்த ஞாயிறுகளில் சுதா வரவில்லை. பொதுத் தேர்வு முடிந்தது. ஸ்கூல் ரீ ஓபன் ஆனது. சுதா நினைவு மனதில் இருந்தாலும் விசாரிக்க வெட்கமாய் இருந்தது. சில மாதங்களுக்கு பின் ஒரு மாலை என் வீட்டிற்கு உஷா அக்கா சுதாவை அழைத்து வந்தார். என் அக்காவுடன் உஷா ஏதோ பேச நான் சுதா விடம் எப்படி பேசுவது என குழம்பி கையில் ஒரு வீடியோ கேமை நோண்டிக்கொண்டிருந்தேன்.
சுதா எப்போதும் போல பின்னங்கால்கள் இரண்டையும் மடித்து அமர்ந்து சலனமின்றி என்னை பார்ப்பது தெரிந்தது.
கிளம்பினார்கள். அமைதியாய் ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பி விட்டாள்.
அப்பாவை பற்றி படிப்பை பற்றி கேட்டிருக்கலாம். கூச்சம். கேட்க தோணவில்லை.
அவர்கள் போனதும் அக்கா என் அம்மாவிடம் கூறினார். அந்த பொண்ணுக்கு கல்யாணமாம். சின்ன பிள்ளையா இருக்கு. அப்பாஇல்லைல. அதான் உடனே பண்றாங்க.
அதிர்ந்தேன். ஒன்றும் பண்ண முடியவில்லை. சுதா திருமணம் முடிந்தது
தெரிய வந்தது.
இந்த வருடங்களில் எல்லாம் மாறிப்போனது சுதா எங்கிருக்கிறாள் தெரியவில்லை.
தனக்கென்று ஒரு குடும்பமும் குழந்தையும் வந்தால் ஒரு பெண் தனது மற்ற உணர்ச்சிகள் அனைத்தையும் வெகு எளிதில் உதறிவிடுவாள்.
தேவையற்ற நினைவுகளை கடாசி விடுவாள். அது ஒரு விதத்தில் நல்லது. அவளுக்கு நல்ல குடும்ப சூழல் அமைந்தால் போதும்.
"என்னங்க....ட்ரெயின் வந்துடுச்சு. தண்டவாளத்தையே வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்க. ஏற ரெடியாகுங்க " என்கிற மனைவி குரல் கேட்டது.
மைத்துனன் திருமணத்திற்கு ஊர் செல்ல ரயிலுக்கு காத்திருப்பது நினைவு வந்தது.
கடந்த காலத்தை உதறி நிகழ்காலம் வந்தேன். லக்கேஜை தூக்கி ரயில் ஏற தயார் ஆனோம்.
மனதில் சுதா தண்டவாளத்தில் கையை ஆட்டி நடந்து போகும் காட்சி ஒரு விநாடி மீண்டும் வந்து போனது!
Comments
Post a Comment