ஒரு சிறுமி தலையில் ஒரு கனமான வாளியை ஏந்தி கொண்டு மிகவும் மெதுவாகவும் அமைதியாகவும் பரபரப்பான சாலையில், தான் உண்டு தன் வேலை உண்டு என்று தன் வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் ஏன் இவ்வளவு மெதுவாக நடக்கிறாள் என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தலையில் வாளிகளை ஏந்தியபடி ஆற்றிலிருந்து திரும்பிய குழந்தைகள் எல்லோரும் மிக வேகமாக சென்று அவளை முந்தினர். சில குழந்தைகள் அவளை பார்த்து கிண்டலாகப் பேசி சிரித்தனர்.
ஒரு சிறுமி தலையில் ஒரு கனமான வாளியை ஏந்தி கொண்டு மிகவும் மெதுவாகவும் அமைதியாகவும் பரபரப்பான சாலையில், தான் உண்டு தன் வேலை உண்டு என்று தன் வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் ஏன் இவ்வளவு மெதுவாக நடக்கிறாள் என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தலையில் வாளிகளை ஏந்தியபடி ஆற்றிலிருந்து திரும்பிய குழந்தைகள் எல்லோரும் மிக வேகமாக சென்று அவளை முந்தினர். சில குழந்தைகள் அவளை பார்த்து கிண்டலாகப் பேசி சிரித்தனர்.
அதில் ஒருவன்...
"நீ இவ்வளவு மெதுவா போனா எப்ப வீடு போய் சேருவ? சரியான சோம்பேறி நீ" என்று சொன்னான். ஆனால், அந்த சிறுமி மற்ற குழந்தைகள் சொன்னதை பொருட்படுத்தாமல் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் நடந்து போய்க்கொண்டே இருந்தாள்.
சிறிது தூரம் சென்ற போது, இரண்டு பெண்கள் அவளைப் பார்த்து ஏளனமாகச் சொன்னார்கள்: "உன் அம்மா உனக்கு கடின உழைப்பின் முக்கியத்துவத்தை கற்பிக்கவில்லை என நான் நினைக்கிறேன். ஒரு சிறிய தண்ணீர் வாளியை தூக்கி கொண்டு வேகமாக நடக்க தெரியாதா? ஆற்றிலிருந்து திரும்பும் மற்ற குழந்தைகளைப் பார். அவர்களில் சிலர் உன் வாளியைவிட கனமான வாளியை தூக்கி கொண்டு உன்னை முந்தி செல்கிறார்கள். நீ மிகவும் மெதுவாக நத்தை போல நடக்கிறாய்!" என்று கேலி செய்தனர். அதை கேட்டவுடன், சிறுமி எதுவும் பேசாமல் மெளனம் காத்து தன் பயணத்தைத் தொடர்ந்தாள். ஆனால், அவள் சிறிது தூரம் கூட செல்ல வில்லை... ஒரு வயதான நபர் அவளை நிறுத்தி அவளிடம்...
"ஏய், விரைவாக நட. அந்த குழந்தைகள் உன்னைவிட வேகமாக நடக்க விடாதே. நீங்கள் எல்லோரும் ஒரே அளவிலான வாளிகளையே வைத்துள்ளீர்கள். அவர்களுடன் போட்டியிட்டு, நீ அவர்களைவிட வேகமாக வீட்டை அடைய வேண்டும். விரைவாக நட!" என்று கத்தினார்.
சிறுமி அந்த வயதான நபரை பார்த்து சிறியதாக புன்னகைத்தாள். ஆனால் எதுவும் சொல்லாமல் தன் வழியில் மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். அந்த வயதான நபர் ஒரு சில நிமிடம் அங்கேயே நின்று, அந்த சிறுமியின் விசித்திரமான நடத்தை பற்றி எண்ணினார். இதற்கிடையில், சிறுமி சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, மக்கள் அவளை கேலியும், கிண்டலும் செய்துகொண்டே இருந்தனர்.
"விரைவாக நட.. வேகமாக ஓடு.. மற்ற குழந்தைகள் உன்னைவிட வெகு தொலைவில் இருக்கிறார்கள். நீ அவர்களை முந்தி வீட்டை அடைய விரும்புகிறாயா? இல்லை விடிய விடிய நடக்க போகிறாயா?" என்று கத்தினர். ஆனால், மக்கள் என்ன சொன்னாலும், எவ்வளவு கத்தினாலும், அந்த சிறுமி யாரிடமும் எதுவும் பேசாமல்... எந்த கவலையுமில்லாமல் மெதுவாகவே நடந்து கொண்டிருந்தாள். பின்னர், திடீரென்று ஒரு வயதான பெண் அவள் முன் வந்து சாந்தமான குரலில் கேட்டாள்...
"குழந்தை, நீ ஏன் இவ்வளவு மெதுவாக நடக்கிறாய்? உன் வாளி அந்த அளவுக்கு கனமாக இருக்கிறதா? மற்ற குழந்தைகள் உன்னைவிட மிக தூரத்தில் இருக்கிறார்கள்..." எதும் உன் உடலில் பிரச்சனையா? என்று அன்போடு கேட்டாள்.
சிறுமி நடப்பதை நிறுத்திவிட்டு மெலிதான புன்னகையுடன் மெல்லக் கூறினாள்...
"அம்மா என் தலையில் உள்ள வாளியில் இருப்பது தண்ணீர் இல்லை. முட்டைகள், ஒன்றல்ல!! பல முட்டைகள். நான் தண்ணீர் ஏந்திக்கொண்டு நடக்கும் குழந்தைகள் போல் வேகமாக நடக்க முடியாது. சாலை மோசமாக உள்ளது, அவர்கள் விழுந்தால் தண்ணீர்தான் சிந்தும், ஆனால் நான் கீழே விழுந்தால், என் முட்டைகள் அனைத்து உடைந்து விடும். பல முட்டைகள் ஒரு வாளி தண்ணீரைவிட மதிப்பு மிக்கது. நான் அவர்களுடன் போட்டியிட முடியாது. ஏனெனில் நாங்கள் ஒரே சுமையை ஏந்தவில்லை" என்று கூறினாள்...
நம் வாழ்க்கையும் இப்படித்தான். மற்றவருடன் போட்டியிட வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் நாம் அனைவரும் வெவ்வேறு சுமைகளை, வெவ்வேறு கனவுகளை, எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளோம் என்பதை கவனிக்க தவறி விடுகிறோம். சில பாதைகளில் மெதுவாக நடந்துதான் வெற்றி பெற வேண்டும். வாழ்க்கையில் வேகமாக ஓடி வெற்றி பெற்றுவிட வேண்டும் என எண்ணி, தலையின் மேல் உள்ள சுமையை மறந்துவிடுகிறோம்.
அவன் ஐபோன் வாங்கிட்டான்...
நானும் வாங்கிடனும்... (EMI)
அவன்கிட்ட 2 லட்சம் மதிப்புள்ள பைக் இருக்கு... நானும் வாங்க போறேன்... (EMI)
அவங்க வீடு வாங்கி செட்டில் ஆகிடாங்க... நாமளும் இந்த வருசத்துகுள்ள பேங்க் லோன் போட்டு வீடு வாங்கிடனும்...
இப்படி பல...
நம்முடைய சுமை எது என்பதை அறிந்து, மெதுவாக "வெற்றி" என்ற இலக்கை அடைவதே உங்கள் மேல் உள்ள "முட்டையை" உடையாமல் பாதுகாக்கும். நம் சுமை என்ன என்று தெரியாமல் எவருடனும் போட்டியிடாதீர்கள். உங்கள் பயணத்தை மட்டும் கவனியுங்கள். தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்கள் ஏந்தும் சுமை மற்றவரின் சுமையிலிருந்து மாறுபடுகின்றது என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள் நண்பர்களே...
Comments
Post a Comment