அமரனும் அந்தணர்களும் சுஜாதா ஒரு முறை என்னிடம் ஓர் ஆங்கிலப் புத்தகத்தைப் பரிந்துரைத்தார். அந்தப் புத்தகத்தில் எல்லோரையும் சகட்டு மேனிக்கு எள்ளி நகையாடியிருந்தார்கள். நான் அவரிடம் இதைப் போலத் தமிழில் நீங்கள் முயலலாமே என்றேன். அதற்கு “பிராமணனாக நான் இதை எழுதினால் வீட்டுக்கு அடிக்க வருவார்கள்” என்று பதிலளித்தார்.
அமரனும் அந்தணர்களும்
சுஜாதா ஒரு முறை என்னிடம் ஓர் ஆங்கிலப் புத்தகத்தைப் பரிந்துரைத்தார். அந்தப் புத்தகத்தில் எல்லோரையும் சகட்டு மேனிக்கு எள்ளி நகையாடியிருந்தார்கள். நான் அவரிடம் இதைப் போலத் தமிழில் நீங்கள் முயலலாமே என்றேன். அதற்கு “பிராமணனாக நான் இதை எழுதினால் வீட்டுக்கு அடிக்க வருவார்கள்” என்று பதிலளித்தார்.
இது அவருக்கு மட்டும் அல்ல பெரும்பாலான பார்ப்பான்களின் நிலைமையும் இது தான். பிராமணர்கள் எதைப் பேசலாம் எதைப் பேசக் கூடாது என்று ஒரு மறைமுகக் கோடு தமிழகத்தில் கிழிக்கப்பட்டிருக்கிறது. நான் பிறக்கும் முன்பே ’பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால்…’ என்று ஒரு துவேஷப் பிரச்சாரம் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள்மூலம் விதைக்கப்பட்டது. அது இன்றும் தொடர்கிறது. குடுமி பறிபோய்விடும் என்ற பயம் இல்லாததால் இன்று சமூக ஊடகங்கள் மூலமாக இவர்களை எதிர்த்துத் தைரியமாகப் பதில் கொடுக்க முடிகிறது.
பாப்பான் உயர்ந்த நிலைக்கு வந்தால் உடனே அவனை ‘பாப்பான்’ என்று வசை பாடி ‘அவாளுக்கு ஒரு பூணூலை மாட்டிவிடும் குடிசை தொழில் ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. சுஜாதா, ஜெயலலிதா, ஏன் இன்றைய நீதிபதிகளை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. குடிசை தொழில் இன்று குலத்தொழில் போல ஆகிவிட்டது.
பார்ப்பான் ‘நமக்கு எதற்கு இந்த வம்பு’ என்று பிரச்சனைகளுக்குச் செல்வதில்லை. அது அவனுடைய குணம். எதையாவது சொன்னால், எழுதினால் நீ ஒரு ‘பார்ப்பான், அடிவருடி’ என்று இடது கையால் அவர்களைத் தள்ளிவிடுவதால் இன்று பலர் வெளிநாடுகளுக்கோ அல்லது நங்கநல்லூர் ரோஜா மெடிக்கல்ஸ் சுற்றிக் குடிபெயர்ந்துவிட்டார்கள்.
சுஜாதா ஒரு விஞ்ஞானி அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்ற ஒரு மாயத் தோற்றத்தைப் பரப்பிக்கொண்டு வந்தார்கள். என்னிடமே சுஜாதா கோயில் குளங்களுக்கு செல்வாரா என்று அவ்வப்போது கேட்பார்கள். அவர் மறைவுக்கு முன் அவர் விரும்பிய ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துச் சென்றேன். பெருமாளை சேவிக்க போகும் முன் ஸ்ரீ சூர்ணம் இட்டுக்கொண்டு வந்தார் என்று படத்துடன் எழுதியபோது, தேசிகன் சுஜாதாவிற்கு வைணவச் சாயம் பூசுகிறார் என்று என்னைக் கண்டபடி பேசினார்கள்.
சுஜாதா ஒரு பிராமணராக இல்லை என்றால் அவருக்கு இன்னும் அதிக அங்கிகாரம் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி இருந்தும் ஒரு பார்ப்பானாக அவருக்குக் கிடைத்த பாராட்டுகளை ஜீரணிக்க முடியாதவர்கள் அவர் ஒரு வணிக எழுத்தாளர் என்று கடலூர் சீனு முதல் வண்டலூர் வடிவேலு வரை அவரை வைகுண்டத்திலும் வம்புக்கு இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு பிராமணச் சங்க வெள்ளிவிழா மாநாட்டில் சுஜாதாவுக்கு வாழ்நாள் சாதனை விருதை வழங்கிக் கௌரவித்தார்கள். இதைப் பற்றி அவர் கற்றதும் பெற்றதும்’ ல் எழுதியிருந்தார். அதிலிருந்து சில பகுதிகள்
*-*
”எந்த டி.வி-யிலும் காட்டப்படாத அந்த விழாவுக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்துப் பிரமித்தேன். ஏறத்தாழ ஒண்ணரை லட்சம் பேர்.தமிழகமெங்கிலும் இருந்து பேருந்துகளிலும் சிற்றுந்துகளிலும் வந்து அண்ணாநகர் பள்ளியின் மைதானத்தில் விஸ்தாரமான பந்தலை நிரப்பியிருந்தார்கள். இரண்டு நாள் மாநாட்டின் முடிவில், பிராமணர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எழுச்சிமிக்க சொற்பொழிவுகள், 'பொறுத்தது போதும் புறப்படு' என்கிற தொனியில் இருந்தன. பிராமணர்களின் 'மீனவ நண்பரா'ன அன்பழகன் அவர்களும், கிறிஸ்துவ நண்பரான சாலமன் பாப்பையா அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.
தமிழ்நாட்டுப் பிராமணர் தங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சிறுமைகளை பொறுமையாகவே சகித்து வந்திருக்கிறார்கள். மாநாட்டில் பேசப்பட்ட வீர வார்த்தைகளைக் கவனிக்கையில், இவர்களின் பொறுமை விளிம்புக்கு வந்துவிட்டது போலத் தோன்றியது.
தங்களின் பலம் எவையெவை என்பதை பிராமணர்கள் அறிந்துகொள்ள வேண்டும். முக்கிய பலம் கல்வி மற்றும், சூழ்நிலைக்கேற்ப புதிய திறமைகளைக் கற்கும் திறமை. பலவீனம், ஒற்றுமையற்ற சுயநலப் போக்கு. தமிழ்நாட்டின் சாதி சார்ந்த சூழலில் வாழ, அவர்கள்மேல் சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஒழுங்கான முறையில் வாதாடி நீக்க வேண்டும். பிராமணர்களை 'வந்தேறிகள்', 'ஆரியர்கள்' என்று சொல்வது அபத்தம் என்பது சமீபத்திய மானிடவியல் ஆராய்ச்சிகளிலிருந்து ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.” என்று எழுதியிருந்தார்.
-*-
உடனே ஒரு கும்பல் ’பார்ப்பான சங்க உறுப்பினன் சுஜாதா’ என்று வசைபாடியது.
அவர் சங்க இலக்கியங்களை பற்றி எழுதத் தொடங்கினார். முதலில் புறநானூறு ஓர் எளிய அறிமுகம் என்று எழுதியபோது ஒரு பார்ப்பான் எப்படி திவ்ய பிரபந்தத்தை விட்டுவிட்டு புறநானூறு பக்கம் எல்லாம் வரலாம் அது எங்க ஏரியா என்று அவரை ‘ஆரியக் கூத்தாடி’ அர்ச்சனை செய்தார்கள்.
‘தமிழ் சினிமாவில் பார்ப்பான்’ என்று ஓர் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கலாம். முறுக்கு மீசை வைத்தவன் எல்லாம் ரவுடி என்பது போல, திரைப்படத்தில் பார்ப்பான் தயிர்ச்சாதம் சாப்பிட்டுக்கொண்டு அம்மாஞ்சி அம்பி போலப் பயந்துகொண்டு அல்லது ஹீரோவிற்கு எதிராக ஸ்ரீசூர்ணம் வக்கீல், அல்லது மந்திரிக்குப் பணம் மோசடி செய்ய உதவும் ஆடிட்டர் என்று ஒருவித ‘Bad light’ல் திட்டம் போட்டே இதைச் செய்கிறார்கள்.
சூரரைப் போற்று முதல் இன்றைய அமரன் வரை இதற்கு உதாரணம்.
அமரனில் ஒரு பார்ப்பான் கலப்புத் திருமணம் செய்து, நாட்டுக்காக குடும்பத்தைத் தியாகம் செய்து ஒரு க்ஷத்திரியனைப் போலத் தீவிரவாதிகளை அடித்துத் தும்சம் செய்வதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் மிக ஜாக்கிரதையாகப் படத்தில் பூணூலை அகற்றியிருக்கிறார்கள். இதற்குப் பின் சில உளவியல் காரணங்களும் கமலும் இருக்கலாம். தசாவதாரத்தில் பெருமாள் விக்ரகத்தை ரயில்வே கழிவறையில் வைத்துக் காமெடி செய்த கமலிடமிருந்து நாம் வேறு எதை எதிர்ப்பாக்க முடியும் ?
அமரனில் முகுந்தனின் மனைவியாக வருபவர் கழுத்தில் விதவிதமாகச் சிலுவை தொங்குவதைக் கவனமாகக் கையாண்ட இயக்குநர், முகுந்தன் தொடர்பான எந்த இடத்திலும் அவர் ஒரு பார்ப்பான் என்று காண்பிக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார். கடைசியில் அவருடைய அப்பா கொள்ளி வைக்கும் இடத்தில் கூட அவர் உடம்பில் பூணூல் இல்லாதவாறு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இதைப் பற்றி எல்லோரும் பேச ஆரம்பிக்க, இயக்குநர் மைக் பிடித்து ஏதோ சால்ஜாப்பு சொல்லியிருக்கிறார். வேறு சிலர் ஏதேதோ காரணங்கள் சொல்லி முட்டுக்கொடுக்கிறார்கள் அவர்களைச் சுஜாதா சொல்லுவது போலப் பசித்த புலி தின்னட்டும்.
பாப்பான் சிறு குறிப்பு:
பார்ப்பு என்ற சொல்லுக்குப் பறவைக் குஞ்சு என்று ஒரு பொருள் உண்டு. ஆட்டுக்குட்டிக்கு ஒரு பிறப்பு ஆனால் பறவைக்கு இரு பிறப்பு. முட்டை ஒரு பிறப்பு; முட்டையிலிருந்து வரும் குஞ்சு இன்னொரு பிறப்பு. அதுபோலப் பார்ப்பானுக்கும் இரண்டு பிறப்பு.
தாய் ஈன்று எடுக்கும் ஒரு பிறப்பு. உபநயனத்தன்று வேத வாழ்க்கைக்குள் நுழைவது இன்னொரு பிறப்பு.
உலகத்தில் பிறப்பது முட்டை நிலை. வேத வாழ்க்கைக்குள் நுழையும் பார்ப்பு நிலை தான் பறவையின் குஞ்சு நிலை. அதனால் பறவைக்கும் பார்ப்பானுக்கும் இரண்டு பிறப்பு. அதனால் தான் பார்ப்பனர் என்று பெயர். ’பார்ப்பான்’ என்பது இது அழகிய தமிழில் பாராட்டுச் சொல். திராவிடர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் என்றால் அவர்களுக்கு டமில் தெரியாது.
( பழ.கருப்பையா புத்தகத்தில் படித்தது)
-சுஜாதா தேசிகன்
Comments
Post a Comment