இந்த மாநாட்டில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். இவ்வளவு கூட்டம் கூடிய மைதானத்துக்குள் ஒரு போலீசார்கூட இல்லை. நுழைவுவாயிலில் பக்தர்களை பரிசோதித்த இடத்தை தவிர வேறு எங்கும் எந்த போலீசும், எந்த கண்காணிப்பிலும் ஈடுபடவில்லை.
*✨ இதுவும் சாத்தியமாகும்!*
நன்றி: தினமலர் தலையங்கம்
மதுரையில் நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு, அரசியல் ரீதியான ஆதரவு, எதிர்ப்பு என இருவிதமான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த விமர்சனங்கள் ஒரு வகையில் எதிர்பார்க்கப்பட்டதும்கூட அதனால், இந்த விமர்சனங்களில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
ஆனால், இந்த மாநாட்டில் சமுதாயத்துக்கு சொல்ல வேண்டிய சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
இந்த மாநாட்டில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். இவ்வளவு கூட்டம் கூடிய மைதானத்துக்குள் ஒரு போலீசார்கூட இல்லை. நுழைவுவாயிலில் பக்தர்களை பரிசோதித்த இடத்தை தவிர வேறு எங்கும் எந்த போலீசும், எந்த கண்காணிப்பிலும் ஈடுபடவில்லை.
ஆனால், இவ்வளவு பெரிய கூட்டம் ஒரு இடத்திலும் தள்ளு முள்ளு இல்லாமல் ஒரு கட்டுப்பாட்டுடன் மாநாட்டுக்கு வந்து, மாநாடு முடிந்ததும் மிகவும் பொறுப்புடன் கலைந்து சென்றது.
இவ்வளவு பெரிய கூட்டம் கூடிய இடத்தில் ஒருவர்கூட தனது பணம், பொருள் களவு போனதாக புகார் கூறவில்லை. மைதானத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரே ஒரு செல்போனையும், மாநாட்டு பொறுப்பாளர்களிடம் கொண்டுவந்து ஒப்படைக்க, அது ஒலிபெருக்கியில் தெரிவிக்கப்பட்டு, உரியவரிடம் சேர்க்கப்பட்டது. அவ்வளவு பெ பெரிய கூட்டத்தில் ஒரு பெண்மணிகூட தனக்கு எந்த ஒரு அசவுகரியமும் நடந்ததாக புகார் கூறவில்லை.
மாநாடு முடிந்ததும் மாநாட்டுக்கு வந்தவர்களே, அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை எடுத்து அடுக்கி வைத்துவிட்டு, அவர்கள் பயன்படுத்திய தண்ணீர் பாட்டில், உணவு பொட்டல குப்பைகளை எல்லாம் பொறுப்புடன் ஒரு இடத்தில் குவித்து வைத்துவிட்டு கலைந்து சென்றனர்.
மாநாடு முடிந்த பிறகு மைதானத்தில் எந்த இடத்திலும் ஒரு சேர்கூட உடைந்து சிதறிக்கிடந்த காட்சியையோ அல்லது, குப்பைகள் சிதறிக்கிடக்கும் காட்சியையோ காண முடியவில்லை. மாநாட்டுக்கு வந்தவர்கள் வரும் வழியிலும் திரும்பிப் போகும் இடத்திலும் சாலையில் அமர்ந்து மது அருந்தியதாகவோ. ரகளை, வம்பு தும்பில் ஈடுபட்டதாகவோ எந்த ஒரு செய்தியும் இல்லை.
ஆர்எஸ்எஸ் மற்றும் அது சார்ந்த இந்து அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இதுபோன்ற சுயக் கட்டுப்பாடுகள் என்பது சகஜம் அதில் பங்கேற்கும் நிர்வாகிகள் இப்படி பழக்கப்படுத்தப்பட்டவர்கள். அதனால், அந்தந்த அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இதுபோன்ற கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், முன்னுதாரணமாக நடந்து கொள்வது என்பது ஆச்சரியமானது அல்ல. ஆனால், அமைப்பு சாராத பொதுமக்கள் லட்சக்கணக்கில் பங்கேற்ற ஒரு மாநாட்டில் இது சாத்தியமாகியிருக்கிறது என்பதுதான் இந்த மாநாட்டின் முக்கியமான விஷயம். ஒரு சமூகத்தை, சரியான விதத்தில் வழிநடத்தினால், பொறுப்பையும் கடமையையும், புரியவைத்தால், அது எந்த இடத்திலும் சுய ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும் என்பதுதான் இந்த மாநாட்டில் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி.
மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் முன்வைத்த அத்தனை வழிகாட்டுதல்களையும் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பின்பற்றியதால் இது சாத்தியமானது.
சமுதாயத்தை வழிநடத்தும் எந்த ஒரு அமைப்புக்கும், அதன் நிர்வாகிகளுக்கும், தேவையான ஒரு தகுதி, தியாகமும், தவமும். அது வளரும்போது, சமூகமும் அவர்கள் வார்த்தையை தலைவணங்கி ஏற்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற மாநாடுகள் நடக்கும்போது, அதை நடத்துபவர்கள் இதையெல்லாம் யோசித்தால், ஒரு நல்ல மாற்றத்தை சாத்தியமாக்கலாம்.
Comments
Post a Comment