வாழை, தென்னை, கருவேப்பிலை, கொத்துமல்லி, கீரைகள், தக்காளி, வெண்டை , பூசணி, பரங்கி, கொய்யா, மா, மாதுளை, மல்லிகை,செம்பருத்தி, கனகாம்பரம், டேபிள் ரோஸ், மைசூர் மாணிக்கம், பவளமல்லி என அத்தனையும் அங்கே பூத்து, காய்த்து குலுங்க ஆரம்பித்தன... பள்ளி, கல்லூரி முடிந்து வந்த மாலைப் பொழுதுகள் மிகப் பிடித்தமானதாக, மண்வெட்டி, உரங்கள், களக்கொத்து, தண்ணீர்பைப் என மாறிப் போனது..
அப்போது ஒக்கூரில் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்..
எங்களுக்கு நிலம் விற்ற அய்யா வந்திருக்கிறார்.
அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்
“டீச்சர் , உங்க வீட்டுக்கு அப்படியே பின்னால இருக்கும் நிலம் ஐந்து சென்ட். அதை விற்கலாம் என இருக்கிறேன். உங்களிடம் முதலில் கேட்டு விட்டு மற்றவர்களிடம் கேக்கலாம்னு இருக்கேன்”
சற்று நேரம் யோசித்து விட்டு, அம்மா சொல்கிறார், “இல்ல அய்யா . மகளோட கல்யாணம் னு பெரிய பொறுப்பு இருக்கு . கேட்டதுக்கு நன்றி”
அவர் போன பின் அம்மாவுடன் சண்டை போடுகிறேன், அந்த நிலத்தை வாங்கு என…
"உன் திருமணத்திற்கு பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்..இப்போது வேறு செலவு செய்ய முடியாது" அம்மா திட்டுகிறார்..
கோவிலுக்கு போகிறேன் என சொல்லி விட்டு நிலம் விற்க வந்த அய்யா வீட்டிற்கு செல்கிறேன்.
“செல்லாப் புள்ள , வா வா… “
“மாமா please அந்த நெலத்த யார்கிட்டயும் கொடுத்துராதீங்க..அம்மாவ சமாதானப் படுத்தி நாங்களே வாங்கிக்கறோம். ஆனா நான் வந்து இங்க பேசினத அம்மா கிட்ட சொல்லீராதீங்க. அம்மா தோல உரிச்சிருவாங்க.. “
அப்பாவிற்கு கண்ணீர் கொட்டி கடிதம் எழுகிறேன்..
அப்பா ஒரே வரி மஞ்சளட்டையில் எழுதி அனுப்புகிறார் .. "அந்த நிலம் வாங்கி என்ன செய்யப் போகிறாய்? "..
"தோட்டம் போடப் போகிறேன்"…
மறுபடியும் ஒரே வரி
மஞ்சள் அட்டை கடிதம்..
" இப்போது வீட்டைச் சுற்றி இருக்கும் தோட்டம் போதாதா ? அடுத்து இன்னொரு தோட்டமா?"
" ஆமாம்" என பெரிய எழுத்தில்
ஒரே ஒரு வரியுடன்
மறுபடியும் மஞ்சள் அட்டை தபால்...
இப்படி கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கும் வேளையில் அப்பா ஊருக்கு வருகிறார்...
அவரிடம் அழுது அடம்பிடிக்க ஓர் சுபயோக சுப தினத்தில் அந்த நிலம் அம்மா பெயரில் வாங்கப்பட, பின்புறத்து வேலிகள் எடுக்கப்பட்டு எங்கள் நிலத்தின் எல்கைகள் நீட்டிக்கப்படுகின்றன..
நிலம் பதிவு செய்து விட்டு வந்த அன்று அந்த மாமாவைப் பார்த்து யாரும் அறியாமல் கரங்கள் கூப்பினேன்..
வாழை, தென்னை, கருவேப்பிலை, கொத்துமல்லி, கீரைகள், தக்காளி, வெண்டை , பூசணி, பரங்கி, கொய்யா, மா, மாதுளை, மல்லிகை,செம்பருத்தி, கனகாம்பரம், டேபிள் ரோஸ், மைசூர் மாணிக்கம், பவளமல்லி என அத்தனையும் அங்கே பூத்து, காய்த்து குலுங்க ஆரம்பித்தன...
பள்ளி, கல்லூரி முடிந்து வந்த மாலைப் பொழுதுகள் மிகப் பிடித்தமானதாக, மண்வெட்டி, உரங்கள், களக்கொத்து, தண்ணீர்பைப் என மாறிப் போனது...
அப்பா, அங்கு ஒரு சின்ன கல்மேடை (stone bench) அமைத்துக் கொடுக்க அத்தோட்டம் என் சொர்க்க பூமியானது...
ஆதவன் மறையத் தொடங்கும் மஞ்சள் வெயில் மாலைகளில், சிறிய வானொலிப் பெட்டியில் (ட்ரான்ஸிஸ்டரில்) இலங்கை வானொலி தமிழ்ச்சேவையின் பாட்டுக்கள் கேட்டுக் கொண்டே, எதாவது கொறித்துக் கொண்டு அந்த கல் மேடையில் அமர்ந்திருப்பது ஆனந்தமாக இருக்கும்...
தோட்டமே என் குடியிருப்பானது.
21 ம் வயதில் திருமணம்...
திருமணம் ஆகி ஹைதராபாத் செல்லும் அன்று, தோட்டத்தில் அமர்ந்து கேவிக்கேவி அழுகிறேன்..
செடிகளை அணைக்கிறேன்..
மரங்களை முத்தமிடுகிறேன்..
பிரிய முடியாமல் அப்பாவிடம் "அப்பா என் தோட்டம் பத்திரம்ப்பா" என அழுகிறேன்...
"நான் இவற்றைப் பார்த்துக் கொள்கிறேன்.. நீ உன் வாழ்க்கையைப் பார்" என அவரும் அழுகிறார்...
தோட்டத்தைப் பற்றியே கேட்டு கடிதம் முழுதும் எழுதி அனுப்புவேன்..
ஹைதராபாத்திலிருந்து ஒக்கூர் வரும் நாளெல்லாம் வீட்டிற்குள் நுழைந்த உடன் பயணப் பைகளை தூக்கி எறிந்து விட்டு , முதலில் தோட்டத்திற்கு ஓடி நான் வளர்த்த என் பிள்ளைகளை கட்டி அணைப்பேன்.
சில வருடங்களில் அம்மா பணி ஓய்வு பெற்றவுடன் மருத்துவ வசதி இல்லாத அந்த கிராமத்தில் அவர்கள் தனியாக இருக்க வேண்டாம் என முடிவெடுக்கிறோம்..
வீட்டை விற்று விட்டு அம்மா, அப்பா சென்னை குடியேறும் முன் அழைக்கிறார்கள், " ஒரு முறை ஒக்கூர் வந்து விட்டுப் போ, நீ அமைத்த தோட்டத்தை இறுதியாக பார்த்து விட்டுப் போகலாம்" என...
"என் தோட்டம் இன்னொருவருக்கு சொந்தம் ஆகப் போவதை பார்க்கும் சக்தி எனக்கில்லை" என அழுகிறேன்....
வெகுநாட்கள் மகன்களிடம் ஏக்கத்துடன் கேட்டுக் கொண்டே இருப்பேன்...
" நீங்கள் சம்பாதிக்கும் காலத்தில் எனக்கு ஒக்கூரில் அந்த தோட்டம் இருக்கும் நிலத்தை மட்டும் மறுபடியும் வாங்கித் தருவீர்களாடா?" என....
மகன்களும், "எவ்வளவு விலையும் இருக்கட்டும், அதை வாங்கித் தருகிறோம் " என சொல்லுவார்கள்...
காலச்சுழற்சியில் அந்த தோட்டம் இப்போது கைக்கெட்டாமலேயே யார் யார் கையோ மாறிப்போய் எனக்கு கிடைக்காத தூரத்தில் போய் விட்டது....
ஹைதராபாத்திலும் சரி, மதுரையிலும் சரி அடுக்ககத்தில் வாழும் நிலை...
தோட்டத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதில் அளவிட முடியா ஏக்கம் இருக்கத்தான் செய்தது...
பெரிய மகன் மதுரையில் அழகான வீடு வாங்கி என்னை அதில் வசதியாக இருக்க வைக்க வேண்டும் என திட்டமிடுகிறான்..
"அம்மா தனி வீடு வாங்கட்டுமா...?
நீ தோட்டம் போட்டுக்கலாம்"...
"வேண்டாமடா... வாழ்க்கையில் வயதான காலத்தில் தனியாக அங்கே வாழ முடியாது.. அடுக்ககமே பார் என்கிறேன்".....
தோட்ட ஏக்கத்தை தள்ளிவைத்து விட்டு...
பல விவாதங்களுக்கு பின் அடுக்ககம் என முடிவாயிற்று...
ஒரே அடுக்ககம் பார்த்தான், பிடித்து விட்டது.. வாங்கித் தந்தான்
அந்த பத்திரங்களில் கையெழுத்து இடுகையில், அமரன் திரைப்படத்தில் முகுந்த் தன் அப்பாவிடம் சொல்வது போலே, அச்சரம் பிசகாமல் என் மகன் சொன்னான் ..
அம்மா பேருக்குத்தான் இது என் வீடு . ஆனால் உன்னோட வீடும்மா. சந்தோஷமா எந்த கவலையும் இல்லாம இந்த வீட்ல ராணி மாதிரி இரும்மா..
கண்ணீர் கொட்ட அவன் கரங்களை பிடித்துக் கொண்டேன்
அழகாக அமைந்தது வீடு..
வெள்ளை நிற வண்ணம் தான் சுவர்களுக்கென்றாலும்முடிந்த வரை வீட்டை செடி கொடிகளின் பச்சை நிறங்களால் நிரப்பியிருக்கிறேன்....
எனக்கு பிடித்த ரோஜா மலர்களும், செம்பருத்தி பூக்களுமாய், டேபிள் ரோஜாக்களுமாய் பால்கனியை
நிரப்பி இருக்கிறேன்...
வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளை வாசலிலும், வரவேற்பறையிலும், படுக்கை அறையிலும் சின்ன சின்ன தொட்டிகளால் நிரப்பி இருக்கிறேன்..
தினமும் காலை எழுந்ததும் என் வேலை
என் செடிப்பிள்ளைகளை பார்த்து நலம் விசாரிப்பதே ...
செடிப்பிள்ளைகளும் ஆனந்தமாக தலையசைக்கின்றனர் தினமும்....
அவைகளுக்கும் எனக்குமான மௌன உரையாடல்களில் ஒக்கூர் தோட்டத்தின் கதைகளும் பரிமாறப்படும்....
நேற்று பூத்த ரோஜா மகள் சொன்னாள்...
" அம்மா ஒக்கூரில் பூத்தவளின் மகள் தான் நான்" என்றாள்...
என் கண்ணீரை துடைத்த காற்றில் அப்பாவின் வாசமும் மகனின் வாசமும் வீசுகிறது…❤️
Comments
Post a Comment